மருத்துவ காப்பீடை மாற்றிக்கொள்வது எப்படி?

மருத்துவ காப்பீடை மாற்றிக்கொள்வது எப்படி?

தொலைத்தொடர்பு சேவையை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வதுபோல மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் மாற்றிக்கொள்ள முடியும். கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதற்கான வசதியை காப்பீட்டு ஒழங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) கொண்டுவந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வசதி இருந்தாலும், இதன் சாதக பாதகங்கள் பலருக்கும் தெரியவில்லை.

மாறுவதால் என்ன பலன்?

ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மற்ற நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஒரே மாதிரியான பலன்கள் இருக்கும் பாலிசிகளில் மட்டுமே மாற்ற முடியும். மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பாலிசியை, விபத்து காப்பீட்டு பாலிசியாக மாற்ற முடியாது. மேலும் பாலிசியை புதுப்பிக்கும் பட்சத்தில் (அதாவது அடுத்த பிரீமியம் செலுத்தும்போது) மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். இடையே மாற்றிக்கொள்ள முடியாது.
ஒரு நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனத்துக்கு மாறும்போது, காத்திருக்கும் காலத்துக்கான பலன்களை பெற முடியும். அதாவது பாலிசி எடுத்தவுடன் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கிளைம் செய்ய முடியாது. குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பிறகே கிளைம் பெற முடியும். வேறு நிறுவனங்களுக்கு மாறுவதால் இந்த வசதி தடைபடாது.
உதாரணத்துக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு, பாலிசி எடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகே சிகிச்சை பெற முடியும் என்னும் விதி இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் இரு ஆண்டுகள் பிரீமியம் செலுத்தி வருகிறீர்கள். மூன்றாவது ஆண்டு வேறு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றுகிறீர்கள். அந்த நிறுவனத்தில் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்னும் விதி இருந்தால், புதிய நிறுவனத்துக்கு மாறிய நாள் முதலாக, ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு நீங்கள் கிளைம் பெற முடியும்.
தவிர ஏற்கெனவே இருந்த நிறுவனத்தில் கிளைம் பெறாமல் இருக்கும் பட்சத்தில், அதற்கு கிடைக்கும் போனஸையும் நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு நீங்கள் 5 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கிறீர்கள். இரு ஆண்டுகளாக தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வருகிறீர்கள். எந்த கிளைமும் பெறவில்லை என்றால் உங்களது பாலிசி தொகையை காப்பீட்டு நிறுவனம் உயர்த்தும். உதாரணத்துக்கு 6 லட்சம் என்று வைத்துகொள்வோம். இந்த சமயத்தில் வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் ஆறு லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த பாலிசி தொகைக்கு ஏற்ப பிரீமியம் கணக்கிடப்படும்.
பழைய பாலிசியில் இருந்து காத்திருக்கும் காலம் மற்றும் கிளைம் பெறாமல் இருப்பதற்கான போனஸ் ஆகியவையே புதிய பாலிசிக்கு மாற்ற முடியும். செலவுகளுக்கான எல்லைகள். விதிவிலக்குகள், உள்ளிட்ட மற்ற அனைத்து சலுகைகளும் புதிய நிறுவனத்தில் எடுக்கும் பாலிசியை பொறுத்தே இருக்கும். ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பாலிசி தொகைக்கு செலுத்திய பிரீமியத்தை விட, புதிய நிறுவனத்தில் அதே பாலிசி தொகைக்கு கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கலாம். பிரீமியம் தொகை மாறுபடலாம்.

எப்படி மாறுவது?

ஹெல்த் பாலிசியை மாற்றுவது என முடிவு செய்துவிட்டால், பாலிசி காலம் முடிவடைவதற்கு 45 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பம் அளிக்க வேண்டும். எந்த நிறுவனத்துக்கு மாறுகிறீர்களோ அந்த நிறுவனத்தின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நிறுவனத்தை மாற்றுவதற்கான காரணம், இதுவரை எத்தனை முறை, எவ்வளவு தொகைக்கு கிளைம் பெற்றிருக்கிறீர்கள் மற்றும் ஏற்கெனவே எடுத்திருக்கும் பாலிசியின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
உங்கள் கிளைம் அறிக்கையை பரிசோதனை செய்த பிறகு, புதிய பாலிசி வழங்கப்படும். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு கூட செல்ல வேண்டி இருக்கும்.

நிபந்தனைகள்

நீங்கள் பாலிசிகளை தொடர்ந்து புதுப்பித்து வந்தால் மட்டுமே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனங்களுக்கு பாலிசியை மாற்ற முடியும். தவிர புதிய நிறுவனம் உங்களது பாலிசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. உங்களது வேண்டுகோளை நிராகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.வயது அதிகரிப்பு, உடல்நிலையில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் புதிய நிறுவனத்துக்கு மாறும் போது பிரீமியம் உயர்த்தப்படலாம்.
40 வயதுக்குள் இருப்பவர்கள், ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் பாலிசியை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்வதை விட புதிய ஹெல்த் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் புதிய பாலிசியை எடுப்பதால் காத்திருக்கும் காலம் மேலும் உயரும். அதனால் 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் பாலிசியை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?