நலம் தரும் நான்கெழுத்து 07: புதுமை கண்டு அச்சம் ஏன்?
‘எந்த ஒரு மனிதனும் ஒரே நதியில் இரு முறை குளிக்க முடியாது. ஏனெனில், அடுத்த முறை நதியும் மாறியிருக்கும் மனிதனும் மாறியிருப்பான்’
- ஹீராக்ளிட்டஸ்
காலமெனும் நதி பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. கணந்தோறும் அந்த நதியில் புதுப்புனல் வழிந்தோடுகிறது. அதுபோல் இந்தப் பிரபஞ்சமும் அதில் தோன்றிய உயிரினங்களும் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன, இருக்கின்றன. மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தன்னைத்தானே மாற்றிக்கொள்வது என்பது பரிணாமவியலின்படி உயிர்கள் பிழைத்திருக்கவும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. மரத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டது அதனால்தான்.
மனிதன் இன்று உலகத்திலேயே மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய உயிரினமாக உருவெடுத்துள்ளதற்குக் காரணம், அவன் தன்னைச் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றிக்கொண்டே இருப்பதுதான். அது மட்டுமின்றி சூழ்நிலையையும் தனக்குத் தக்கவாறு மாற்றிக்கொள்ளும் ஆற்றல் வளர்ந்ததும் இன்னொரு காரணம். வெள்ளத்தில் தப்பிக்கப் படகு கண்டுபிடித்தது முன்னதற்கு உதாரணம் என்றால், வெள்ளத்தையே அடக்கி அணை கட்டிக்கொண்டது பின்னதற்கு உதாரணம்.
நான்கு பண்புகள்
எந்த ஒரு மனிதனின் ஆளுமையையும் தீமை தவிர்த்தல், புதுமையை விரும்புதல், வெகுமதியைச் சார்ந்திருத்தல், விடாமுயற்சியுடன் இருத்தல் ஆகிய நான்கு பண்புகளால் விளக்க முடியும் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இப்பண்புகளின் சரியான கலவையே மனிதனின் ஆளுமையை முழுமையாகவும் செழுமையாகவும் வைக்கிறது. தீயவை கண்டு அஞ்சி ஒதுக்குதல் முதல் பண்பு. அஞ்ச வேண்டியவைக்கு அஞ்ச வேண்டும். அதேநேரம் அளவுக்கு அதிகமாக அஞ்சி ஒதுங்குதலும் தேவையற்றது என முந்தைய இரு வாரங்களில் கண்டோம். இப்போது புதுமை விரும்புதல் பண்பைப் பற்றிப் பார்ப்போம்.
தவறுகள் நடப்பது இயற்கையே
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கேற்ப உலகில் ஏற்பட்டுவரும் மாறுதல்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ளாதவர்கள் சமநிலை குலைந்து தடுமாறி விழுவார்கள். புதுமைகள் என்பது பொருட்களாக இருக்கலாம், கலாச்சாரப் பழக்கவழக்கங்களாக இருக்கலாம், கருத்துகளாக இருக்கலாம். அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் தேங்கிய குட்டைகளாக மாறிவிடுகிறார்கள்.
புது மனிதர்களைச் சந்திப்பது, புதுப்புதுப் பழக்கங்கள், புதுப்புதுப் பயணங்கள் போன்றவையும் புதுமை விரும்பும் பண்பால் விளைபவைதாம். பயணங்கள் பற்றி ராகுல்ஜி எனப்படும் ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘ஊர்சுற்றிப் புராணம்’ போன்ற நூல்களை எல்லாம் படித்தால், அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இப்பண்பு மிகுந்து காணப்படுவது தெரியவரும்.
தொழில்நுட்பத்தில் எத்தனையோ புதுமைகள் வந்துள்ளன. இவற்றையெல்லாம் கண்டு மிரண்டோ அலட்சியப்படுத்தியோ ஓதுங்காமல் சென்றவர்களே வெற்றி பெறுகிறார்கள். அலுவலகத்தில் புதிதாகக் கணினி பயன்பாட்டுக்கு வந்தவுடன் பயந்து போய் வேலையை விட்டே சென்றவர்கள் உண்டு. அதே கணினியைக் கற்றுக்கொண்டு முகநூலைப் பார்த்துக்கொண்டே ஜாலியாக வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். எந்தப் புது விஷயம் மீதும் நமக்கு அச்சமும் ஐயமும் அவநம்பிக்கையும் எழுவது இயற்கையே. அதனுடன் பழகத் தொடங்கும்போது தவறுகள் நடப்பது இயற்கையே.
புதுமை… மனிதனின் பண்பு
காலந்தோறும் பொருட்களில் மட்டுமல்லாது நமது கருத்துகளிலும் பழக்கவழக்கங்களிலும் புதுமைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் காரணம் ஏதோ ஒரு புதுமை விரும்பி வழக்கமான பாதையை விட்டு புதுமையான வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணித்ததால்தான்.
நவீன விஞ்ஞானம் புதுமையை விரும்புவது மூளையில் டோபமின் என்ற ரசாயனத்தின் பணிகளுள் ஒன்று எனக் கண்டறிந்துள்ளது. இதன் செயல்பாடு குறைவாக உள்ளவர்கள் புது மனிதர்களை அறிந்துகொள்வது, புது இடங்களுக்குப் பயணம் செய்வது என்பன போன்ற செயல்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள் எனக் கூறுகிறது.
புதுமைகளில் ஈடுபடுவது மனிதனின் முக்கியமான பண்புகளில் ஒன்று. எனினும், எல்லாவற்றையும் போன்றே இதிலும் அளவுக்கு மீறிப் புதுமை விரும்பியாக மாறும்போதும் சமநிலை குலைகிறது. அது பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்ப்போம்.
Comments
Post a Comment