வேலை வரும் வேளை 07: ராணுவத்தில் சேர என்ன செய்யலாம்?
புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.டெக். கணினி அறிவியல் படிக்கிறேன். என்னுடைய பள்ளி நாட்களில் ஐ.ஐ.டி. பற்றித் தெரியாது. இனிமேல், அங்கு மேற்படிப்பு படிக்க எனக்கு வழிகாட்டுங்கள். குறிப்பாக, சைபர் துறையில் சேர விருப்பம்.
-ஸ்ரீராம் பாலாஜி, புதுச்சேரி.
தற்போது நீங்கள் படித்துவரும் பட்டப் படிப்பை முடித்த பின்னர், நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பைப் படிக்க விரும்பினால் GATE தேர்வுக்கு முதலில் தயாராகுங்கள். அதில் உயர் மதிப்பெண் பெற்றால் ஐ.ஐ.டி.க்களில் எம்.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர வாய்ப்புள்ளது. அல்லது உங்களுடைய விருப்பப்படியே சைபர் டெக்னாலஜி அல்லது சைபர் சயின்ஸ் குறித்த பட்ட மேற்படிப்பாக எம்.டெக். சைபர் டெக்னாலஜியை ஐ.ஐ.ஐ.டி ஹைதராபாத், அல்லது இதர ஐ.ஐ.ஐ.டிக்களில் படிக்கலாம். குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (ஐ.ஐ.ஐ.டி) வழங்கும் சைபர் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளது.
இன்றைய நிலையில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோவதால், அத்தகைய குற்றங்களைக் கண்டுபிடித்து, தடுக்கும் திறன்வாய்ந்த மென்பொறியாளர்கள் உலகெங்கிலும் தேவைப்படுகிறார்கள். மேலும், எம்.எஸ்சி. சைபர் சயின்ஸ் படிப்பு சில கலை அறிவியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. ஆனால், அதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது அக்கல்லூரிகளின் தரத்தைப் பொறுத்தது.
பிளஸ் டூ படிக்கிறேன். ஆர்மி, நேவி, ஏர்ஃபோர்ஸ் போன்ற இந்தியப் பாதுகாப்புத் துறையில் சேர எனக்கு விருப்பம். அது சார்ந்த பட்டப் படிப்பை அரசுக் கல்லூரியில் படிக்க என்ன செய்ய வேண்டும்?
-செல்வராஜ்
தேசத்தின் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உங்களுடைய விருப்பத்துக்கு வாழ்த்துகள். பாதுகாப்புத் துறையின் மூன்று பிரிவுகளிலும் சேரப் பல வழிகள் உள்ளன. நீங்கள் பிளஸ் டூ முடித்த பின்னர் பூனே அருகில் உள்ள கடக்வட்சலாவின் நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் (NDA) படிக்கலாம். இதற்கான பிரத்யேக நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இதற்கு முறையாக ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். உலகின் முக்கிய பாதுகாப்புப் பயிற்சி நிறுவனங்களில் இது மிகவும் புகழ்பெற்றது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவம், கப்பற்படை, விமானப் படை ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு இளம் அலுவலர் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
ஆர்வம் உள்ளவர்கள் நேஷனல் அகாடமியில் பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளைப் பயின்று பொறியியல் பட்டதாரி அலுவலராகக் கடற்படையில் சேரலாம். அந்த வாய்ப்பைத் தவறவிட்டாலும் கவலை வேண்டாம். பட்டப் படிப்பை முடித்துவிட்டு Combined Defence Services Examinations தேர்வை எழுதி டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று ராணுவத்தில் அலுவலராகப் பணியில் சேரலாம்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்து முடித்துவிட்டேன். பயோ டெக்னாலஜி கற்பிக்கும் பள்ளி ஆசிரியராக விருப்பம். பி.எட். தொலைதூரக் கல்வியாகப் படிக்கலாமா?
-மாயா அர்ஜுன்
பி.எட். படிப்பை அஞ்சல் வழியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது. உங்களைப் பொறுத்தவரை GATE தேர்வை எழுதி உதவித்தொகையுடன் கூடிய உயர் கல்வியை ஐ.ஐ.டி. போன்றவற்றில் படிக்கலாம். அல்லது JRF எழுதி ஆராய்ச்சியில் ஈடுபடலாம். அல்லது M.S. (by research) போன்றவற்றில் ஈடுபடலாம். பயோ டெக்னாலஜி படிப்பு மிகப் பெரிய ஆராய்ச்சிகளைத் தன்னகத்தே உள்ளடக்கியது. GRE தேர்வெழுதி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் எம் எஸ். படிக்கலாம். பி.எஸ்சி. முடித்த நீங்கள் ஆசிரியராக நினைப்பதால் எம்.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்துவிட்டு பி.எட். முடித்துப் பணிக்குச் செல்லலாம்.
‘வேலை வரும் வேளை’
கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா. நடராஜன். வாசகர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
|
Comments
Post a Comment