வேலை வரும் வேளை 08: மருத்துவ உபகரண வடிவமைப்பாளர்கள் தேவை!
தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படிக்கிறேன். நான் மேற்கொண்டு என்ன படிக்கலாம்?
-சிந்து கதிர்வேல், கோயம்புத்தூர்.
இந்தியாவைப் பொறுத்தவரை இயற்பியல் பாடப் பிரிவில் முதுகலைப் படிப்பில் 30-க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பிற மாநிலங்களில் வழங்கப்படுகிறன. அவற்றில் சிலவற்றை உங்களின் தேர்வுக்காகப் பரிந்துரைக்கிறேன். எம்.எஸ்சி. இயற்பியல், எம்.எஸ்சி. அஸ்ட்ரானமி, எம்.எஸ்சி. ஆஸ்ட்ரோஃபிசிக்ஸ், எம்.எஸ்சி. அட்மாஸ்பியரிக் சயின்ஸ், எம்.எஸ்சி. அப்ளைடு சயின்ஸ், எம்.எஸ்சி. நானோ சயின்ஸ், எம்.எஸ்சி. ரேடியோ ஃபிசிக்ஸ், எம்.எஸ்சி. எலக்ட்ரானிக் சயின்ஸ், எம்.எஸ்சி. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி. லேசர் டெக்னாலஜி, எம்.எஸ்சி. ஓசயனோகிராஃபி, எம்.எஸ்சி. சாலிட் ஸ்டேட் ஃபிசிக்ஸ், எம்.எஸ்சி. மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி. நியூக்ளியர் ஃபிசிக்ஸ், எம்.எஸ்சி. மெடிக்கல் ஃபிசிக்ஸ்.
உங்களுக்கு ஆசிரியராகும் ஆர்வம் இருந்தால், தற்போதைய படிப்பை முடித்த பிறகு பி.எட். படித்துவிட்டு அறிவியல் பிரிவில் ஆசிரியர் பணியிடம் அல்லது எம்.எஸ்சி. முடித்துவிட்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்குச் செல்லலாம். அல்லது நெட் / ஸ்லெட் தேர்வெழுதி விரிவுரையாளர் ஆகலாம்.
நான் பி.இ. எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கிறேன். பொறியியல் படிப்பில் அளிக்கப்படும் சராசரி கிரேட் புள்ளிகளில் இதுவரை 6.5 ஜி.பி.ஏ. பெற்றுள்ளேன். அடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ள விருப்பம். என்ன செய்யலாம்?
- விஜய்
கேட் தேர்வெழுதி உயர் மதிப்பெண் பெறும்பட்சத்தில் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் M.S. by Research படிக்கலாம். அல்லது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் ஜெ.ஆர்.எஃப். தேர்வெழுதி ஜூனியர் ஆராய்ச்சியாளர் ஆகலாம். அல்லது கேட் தேர்வின் அடிப்படையில் எம்.டெக். முடித்துவிட்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம். அதற்கு முன்பு எந்தப் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்யுங்கள். அதற்கேற்றமாதிரி சரியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணுங்கள். இல்லையெனில் ஜெ.ஆர்.இ. தேர்வெழுதி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எம்.எஸ். படித்துவிட்டு பி.ஹெச்டி. தொடரலாம். உதவித்தொகை கிடைக்கும் அளவுக்குச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முயல வேண்டும்.
இந்த ஆண்டுதான் பி.இ. பையோமெடிக்கல் இஞ்ஜினீயரிங் படிப்பை 61.8 சதவீத மதிப்பெண் பெற்று முடித்தேன். இப்படிப்புக்குரிய அரசுப் பணி தமிழ்நாட்டில் உள்ளதா? என்னுடைய உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் இந்தப் படிப்புக்கு வெளிநாடுகளில்தான் வாய்ப்புள்ளது என்கின்றனர். எனக்கு வழிகாட்டுங்கள்.
-கார்த்திகேயன்.
பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றுக்கு வாய்ப்புகள் அதிகம். இதர பரிவுகளுக்கெனப் பிரத்யேகத் துறைகள் இந்தியாவில் இல்லை. ஆகவே, மற்ற பாடப் பிரிவுகளைப் படித்தவர்கள் தனியார் நிறுவங்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். தற்போது வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் பயோமெடிக்கலும் ஒன்று. மருத்துவத் துறையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் புதிய உபகரணங்கள் வரத் தொடங்கியுள்ளன. அத்தகைய உபகரணங்களை வடிவமைக்க வல்லுநர்களும் தேவைப்படுகிறார்கள். எனவே, தனியார் துறையின் கீழ் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிவாய்ப்பைப் பெற முயலலாம். அல்லது அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அலுவலர் பதவிக்கான பணி வாய்ப்புகளைப் பெற முயலலாம்.
‘வேலை வரும் வேளை’
கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா. நடராஜன். வாசகர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
|
Comments
Post a Comment