மாணவர் மனம் நலமா? 09: சந்தேகக் கண்ணோட்டத்தோடு எதிர்கொள்ளுங்கள்!


கல்லூரியில் கலை பாடப் பிரிவில் பட்ட படிப்பு படித்துவருகிறேன். கல்வி, பணிபுரியும் இடம், சமூக ஊடகங்கள் என எல்லாம் தொழில்நுட்ப மையமாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பிருந்த தொழில்நுட்பம் இப்போது பழையதாகிவிட்டது. கலைத் துறை மாணவன் என்பதால் இதை எப்படி எதிர்கொள்வது என்கிற அச்சம் எழுகிறது.

- சிங்காரவேலு, நெல்லிக்குப்பம்.
நீங்கள் சொல்வது உண்மைதான். கடந்த 30 வருடங்களில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றம் மிகவும் பிரமிப்பானது. அதிவேகத் தொழில்நுட்ப மாறுதலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்தால், நாம் தொலைந்துபோவோம். உதாரணமாக, இணைய வங்கி பரிவர்த்தனை, இணையக் கல்வி இல்லாமல் இனி டிஜிட்டல் இந்தியாவில் வாழ்வதுகூட சிரமம்தான்! அதற்காக அஞ்சி அஞ்சி வாழவேண்டிய அவசியம் இல்லை. எல்லா துறைகளுக்கும் கணினித் தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிவிட்டது என்கிற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
புலிட்சர் பரிசு பெற்ற தாமஸ் ஃபிரீட்மெனின் கருத்துகளைப் பதிவுசெய்வது இங்கு பொருத்தமாக இருக்கும்:
1. இன்றைய மாணவர்கள் அறிவுபூர்வமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமாக எதிர்மறை விஷயங்களை
எதிர்கொள்ளும் திறமையுடையவராக இருப்பது அவசியம்.
2. சுயமாக வாழ்க்கை முழுவதும் கற்பதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
3. கடின உழைப்பைச் செலுத்தும் திறன்களை வளர்த்துகொள்வதைவிடவும், எளிமையாகவும் துரிதமாகவும் புத்திக்கூர்மையோடு செயல்படத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.
4. ஒரு நாட்டில் புதிதாகக் குடியேறியவர்களைபோல் சிந்தியுங்கள். ஒருவிதச் சந்தேகக் கண்ணோட்டத்தோடு, சூழலை எதிர்கொள்ளுங்கள். தக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
5. கண்டுபிடிப்பாளரைபோல சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணங்கள் தேங்கும் அணைக்கட்டாக இருக்க வேண்டாம். ஒடும் நதிக்கு ஓய்வுமில்லை, சோர்வுமில்லை. அதுபோல், வாழ்நாள் முழுவதும் கற்க உங்களை நீங்களேத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
6. தொழில்முனைவோரைப்போல சிந்தியுங்கள். வித்தியாசமான எண்ணங்களின் விளைநிலமாக உங்களுடைய மனம் மாறும்போது, உங்களுள் ஏற்படும் புத்துணர்ச்சி பல முன்னேற்றங்களை ஏற்படுத்த வல்லது.
7. உணர்வுபூர்வமான ஈடுபாடு,பேரார்வத்தோடு சேரும் கூட்டணி ஆகியவை மிகுந்த அறிவுத்திறன் கொண்டவர்களைக்கூட வெற்றிகொள்ளக் கைகொடுக்கும்.
கல்வி என்பது பள்ளி, கல்லூரியோடு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. வாழ்வின் கடைசிவரை மாணவராக வாழ்பவர் தொலைந்துபோக வாய்ப்பில்லை

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?