ஆண்டாள் யார்னு தெரியுமா?- 1 பெண் ராமர்’... ஆண்டாள்!



காஞ்சிபுரம் வரதாரஜபெருமாள் உத்ஸவர்
ஆண்டாளின் பெருமை, எல்லையற்றது. அன்பின், ஒழுக்கத்தின், பக்தியின் எல்லையற்ற உதாரண மனுஷியாகத் திகழ்ந்த தெய்வாம்சம் ஆண்டாள். அதனால்தான் பன்னெடுங்காலம் கழித்தும் கூட, இன்றைக்கும் நம்மையெல்லாம் தெள்ளுதமிழால் நம்மை ஆண்டுகொண்டிருக்கிறாள். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் ஆள்வாள்; தமிழால் வாழ்வாள். நம்மையெல்லாம் வாழவைப்பாள்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர்
நீதியாய் நல்ல பக்தர்கள் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேத கோன் ஊர்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு !
ஓர் ஆத்திகனின், ஓர் பக்தனின், ஓர் சாதாரணனின் பார்வையில் கோதை நாச்சியார் எனும் ஸ்ரீஆண்டாளின் சரணாகதியை அடியேனின் சிறிய ஞானத்துக்குத் தெரிந்த அளவில் சொல்கிறேன் என்கிறார் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் கிட்டு பட்டர்.
’’ ஸ்ரீஆண்டாள் என்பவள் பெண் ராமாவதாரம் என்றுதான் சொல்வதே பொருத்தமாக இருக்கும். காரணம்... அவதாரங்களில் பகவான் ராமாவதாரத்தில் மானுடனாக அவதரித்ததால், சாதாரண மனிதனுக்கு உண்டான குணாதிசயங்களைக் கொண்டே வாழ்ந்தார். எந்த இடத்திலும் தன் தெய்வீக சக்தியை அவர் வெளிப்படுத்தவே இல்லை. அதேசமயம், தர்மத்தின் காவலனாகவும் ஏகபத்தினி விரதனாகவும் வாழ்ந்தார்.
அதேபோல, ஸ்ரீஆண்டாளும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் திருவுளப்படி, கிருஷ்ணாவதாரத்தில் ரிஷிபெருமக்கள் அனைவரும் கோபிகா ஸ்திரீகளாக அவதரித்து பகவான் கண்ணனுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள் அல்லவா. அதேபோல், பூமாதேவியின் அம்சமாக அவதரித்தாலும் தன்னுடைய அவதாரம் மானுடம் என்பதால், அதாவது சாதாரண பெண்ணைப் போல் அவதரித்திருப்பதால், அதற்கே உண்டான குணாதிசயங்களைக் கொண்டிருந்தாள்!
ஒரு பெண் தன் கணவனை நினைத்து, பாவை நோன்பு நோற்பதோ, அவன் மேல் உள்ள அபரிமிதமான அன்பை, காதலை, அழகிய தமிழ்நடையில் கவிதை வடிப்பது, பாடுவது என்பது சகஜமான ஒன்றுதான். அதில் ஆண்டாள், இருப்பது மானிடராக என்றாலும் கூட, தான் யாரென்பதை ஞானத்தால் அறியாமலா இருந்திருப்பாள்.
ஆனால் அதுவல்ல காரணம். பகவானின் நோக்கமே தர்மத்தை ரட்சிப்பது மட்டுமே. எப்படி ரிஷிகளும் முனிவர்களும் கோபிகா ஸ்திரீகளாக கிருஷ்ணாவதாரத்தில் பகவானுடன் ஆடிப்பாடி விளையாடி, களிப்புடன் இருந்தார்களோ, அதேபோல் தானும் தன் பதியுடன் அதே பிரேமையை பகவானிடம் காட்டுவதற்கான வழியாக, தானே ஒரு பிறப்பெடுத்து, தன் பக்தியை, பிரேமையை, அன்பை, காதலை அதாவது... இப்போது சொல்வது போல், உடல் பொருள் ஆவி என அனைத்தும் கண்ணனுக்கே என்று வாழ்ந்து, எம்பெருமாளைச் சரண்புகுந்தாள்.
தற்போதைய காலத்திலும் நாம் அங்கங்கே ஒருவிஷயத்தைக் கேள்விப்படுகிறோம். அவர்... ஜீவசமாதி ஆகிவிட்டார், ஜல சமாதி ஆகிவிட்டார் என்று! அப்படியிருக்க, ஆண்டாள்... எம்பெருமாளிடம் அந்தர்கதம் ஆனது ஒன்றும் ஆச்சரியமில்லை!
இப்போதும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திரு ஆடிப்பூர நாளில், அதாவது ஆண்டாளின் அவதார நட்சத்திர தினமான அன்று, பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, அவள் ஆழ்வார் கோஷ்டியிலும் உள்ளவள் என்பதால், நாச்சியார் திருமொழி ஸேவாகாலம் சாற்றுமுறை. அந்த சமயத்தில், ஆழ்வார் கோஷ்டியில் செய்யவேண்டிய பரிவட்டம், மாலை மரியாதைகளை பெருமாளுடன் சேர்ந்து பிராட்டியாக தன் அவதாரத்தைப் பூர்த்தி செய்துவிட்டபடியால்., அவற்றையெல்லாம் பெரியாழ்வாருக்கு செய்விப்பதுதானே நடைமுறை.
உண்மையில், திருக்கல்யாணத்தில் பெரியாழ்வார், பெருமாளுக்கு மாமனார் ஸ்தானம் அல்லவா. ஆனால் அவர் வளர்த்த ஆண்டாளின் மாலையே பெரியாழ்வாருக்கு மரியாதையாகும்! எப்படி இது? அதாவது, ஒரு பெரிய பதவியில் இருப்பவர், வயதில் இளையவராகவோ உறவு முறையில் இளையவராகவோ இருந்தால், அந்தப் பதவியின் பொருட்டு எவ்விதம் மரியாதை தருவார்களோ அதுபோலத்தான் இதுவும்!
இங்கே, எம்பெருமாள், பிராட்டி... மாப்பிள்ளை, மணமகள். ஆனாலும் அடியவர்கள் சரணாகதியாக வேண்டியது, பரமாத்மாவின் திருவடியில்தான்! அதனைப் பரிந்துரைக்க முதலில் பிரார்த்திக்க வேண்டியது பிராட்டியைத்தான்! ஒரு சொல்லுக்கும் எழுத்துக்கும் வார்த்தைக்கும் பல பொருள் உண்டு. ஆனால் எது நல்ல வழியை, தர்ம வழியை, உய்யும் வழியைக் காட்டுமோ... அதைப் பின்பற்றி நடப்பதுதான் தார்மிக வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அழகு!
இந்தக் கலியுகத்தில் தர்மத்தின் பங்கு, நியாயத்தின் பங்கு என்பதெல்லாம் குறைந்துவிட்டன. ஆகவே, பெரியவர்கள் அதாவது ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏதோவொரு வழியில் ஸ்தோத்திரங்களாகவும் எளிய நடையிலான பாடல்களாகவும் நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றி நடந்தாலே நாமும் நம் தேசமும் நம் நாட்டு மக்களும் இன்புற்றிருப்போம்!
எளிமையான இந்த வழியைப் பின்பற்றாமல் இருந்தால், வழி தவறினால், உண்மையில் நம்மை இந்த வையகம் சுமப்பது வம்புதான்! என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் கிட்டு பட்டர்.


Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?