நலம் தரும் நான்கெழுத்து 10: எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும்!
“திட்டமிடத் தவறுகிறீர்கள் என்றால் தவறுவதற்குத் திட்டமிடுகிறீர்கள் என்று அர்த்தம்”
– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
வெற்றி என்னும் மந்திர மாளிகையை அடைய மூன்று கதவுகளைத் திறக்க வேண்டும். அவை இலக்கு, திட்டம், முயற்சி. எந்த வெற்றியாக இருந்தாலும் இம்மூன்றும் தேவை. எல்லோருக்குமே இலக்கு இருக்கும் - பெரிய விளையாட்டு வீரராகவேண்டும், பணக்காரராக வேண்டும், நடிகராக வேண்டும் என்றெல்லாம். ஆனால் இலக்கை அடைய முக்கியமான தேவை திட்டமிடுதல். திட்டமிடுதல் இல்லாத இலக்கு என்பது வெறும் கனவுதான்.
சிலர் இலக்கையும் வைத்திருப்பார்கள். கடினமாக உழைக்கவும் செய்வார்கள். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாத உழைப்பு என்பது விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.
மனக்கண் கற்பனை
திட்டமிடும்போது என்ன நடக்கிறது? நாம் நம்முடைய பாதையை மனக்கண்ணில் காண்கிறோம். எந்த ஒரு மகத்தான விஷயமுமே இரண்டு முறை உருவாகின்றன என்பார்கள். முதலில் அது மனதில் மானசீகமாக நிகழ்த்திப் பார்க்கும்போது உருவாகிறது. இரண்டாவதாக நிஜத்தில் அதைச் செய்யும்போது உருவாகிறது.
புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களையெல்லாம் ஆய்வு செய்து பார்த்தபோது, அவர்கள் பலரும் போட்டிக்குக் களம் இறங்குவதற்கு முன்பு முழு ஆட்டத்தையும் ஓட்டத்தையும் மனக்கண்ணிலே கற்பனையாகக் காட்சிப்படுத்திப் பார்க்கிறார்கள் என்பது தெரியவந்தது. அவ்வாறு செய்யும்போது நிஜமாகவே ஓடும்போது மூளையில் எந்தெந்தப் பகுதிகளெல்லாம் செயல்படுகின்றனவோ, அவையெல்லாம் கற்பனை செய்யும்போதும் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். பின்னர் களத்திலே அவர்கள் செயல்படுத்தும்போது, ஏற்கெனவே சென்ற பாதையில் காலடித் தடங்களைப் பின்பற்றிச் செல்வதுபோல் சுலபமாக அவர்களால் செயல்படமுடிகிறது.
தெளிவான இலக்கு
திட்டமிடுதலில் செய்யக்கூடிய இன்னொரு விஷயம், நமது பெரிய இலக்கைப் பிரித்துக்கொண்டு, அடையக்கூடிய சின்னச் சின்ன இலக்குகளாக மாற்றுவது. முன்னூறு ரன்களை அடிக்க வேண்டும் என்பது இலக்கு என்றால், ஒவ்வொரு ஓவருக்கும் ஆறு ரன்களை அடிக்க வேண்டும் என்பது முன்திட்டம்.
திட்டமிடல் சரியாக இல்லாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. நமக்கான, சாத்தியப்படக்கூடிய இலக்கு என்ன என்பதே தெரியாமல் இருப்பது முதன்மையான காரணம். ஏற்கெனவே நாம் முந்தைய கட்டுரைகளில் பார்த்ததுபோல் உடனடிப் பலன்களை எதிர்பார்த்தல், பொறுமையின்மை ஆகியவற்றால் பலரும் திட்டமிடுதலுக்கு நேரம் ஓதுக்கத் தவறுகிறார்கள்.
எல்லாப் பண்புகளையும் போலவே திட்டமிடும் திறனும் மூளையில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படலாம். குறிப்பாக ‘ஃப்ராண்டல் லோப்’ என அழைக்கப்படும் மூளையின் முன்பகுதி பாதிக்கப்பட்டால் திட்டமிடும் திறன் வெகுவாகக் குறைந்துவிடும்.
விளைவுகளுக்கு ஏற்பத் திட்டமிடுதல்
ஆனால், எல்லா நேரமும் திட்டமிட்டபடியே நடக்கும் எனச் சொல்ல முடியாது. சில நேரம் நமது திட்டத்துக்கு மாறான சம்பவங்கள் நடக்கும். அப்போதும் என்னுடைய திட்டப்படியேதான் செயல்படுவேன் என்று நடந்துகொண்டிருப்பது பாதகமாக அமையும். ஏற்படும் எதிர்பாரா விளைவுகளுக்கு ஏற்ப நமது திட்டத்தை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.
நாளிதழ் ஒன்றில் நிருபர் வேலைக்குப் புதிதாக ஒருவர் சேர்ந்தாராம். நாளிதழின் ஆசிரியர் முதல்நாள் செய்தி சேகரிக்க அவரைத் துறைமுகத்திலிருந்து கப்பல் ஒன்று புறப்படும் நிகழ்வைப் பற்றிய செய்தியைச் சேகரித்து வருமாறு அனுப்பினார். செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் இரவாகியும் வரவேயில்லை. செல்பேசிகள் இல்லாத காலம் அது. கப்பல் கிளம்பும் செய்தி இல்லாமலேயே மறுநாளுக்கான நாளிதழ்களெல்லாம் அச்சடிக்கப்பட்டு முடிந்ததும், அந்தப் புது நிருபர் நள்ளிரவில் சோர்வாக வந்தாராம் .
அவரிடம் ஆசிரியர் ‘ஏன் இவ்வளவு தாமதம்?’ எனக் கேட்டார். உடனே நிருபர் சோகமாகச் சொன்னாராம் ‘கிளம்பிய கப்பல் கொஞ்ச நேரத்திலேயே கடலில் மூழ்கிப் பலர் பலியாகி விட்டார்கள். அந்தச் சோகமான செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டாமே என்றுதான் தாமதமாக வந்தேன்’ என்று!
‘அடப்பாவி! தலைப்புச் செய்தியாக வரவேண்டிய விஷயத்தைத் தவற விட்டுவிட்டாயே’ எனத் தலையில் அடித்துக்கொண்டாராம் ஆசிரியர் . பலரும் நம்முடைய சிலபஸில் இது இல்லையே என இப்படித்தான் நல்ல வாய்ப்புக்களைக் கோட்டைவிட்டு விடுகிறோம்.
சரியாக முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படியே செயல்படுவதற்கும் அத்திட்டத்தில் இல்லாதபடி நிகழ்வுகள் நடக்கும்போது சமாளித்துச் செல்வதற்குமான சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.
Comments
Post a Comment