மாணவர் மனம் நலமா? 10: தாமதம் ஆபத்தானது!


ஒரு விஷயத்தை உடனே செய்துவிட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்துக்காக அதைத் தள்ளிப்போடுகிறேன். கல்லூரிப் படிப்பில் தொடங்கி எல்லாவற்றிலும் தாமதிக்கும் சிக்கல் தொடர்கிறது. இதனால் எனக்குப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை.
- சிவசிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், கடலூர்.
‘தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதிக்குச் சமம்’ என்பார்கள். நீதிக்கு மட்டுமல்ல, மற்ற நிகழ்வுகளிலும் ஏற்படும் நேரடியான, மறைமுகமான தாமதத்தினால் பல பாதிப்புகள் உண்டாகும்.
செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் இருப்பது, முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை மேற்கொள்ளாமல் சாதாரணமான செயல்களை மேற்கொள்வது, கடைசி தருணத்தில் ஒரு செயலை மேற்கொள்வது இவை அனைத்தும் தாமதத்தால்தான்.
ஆரம்பத்தில் எப்போதாவது நிகழும் தாமதம் பழக்கமான பிறகு நம்மைப் பற்றிய சுயமரியாதையை, நம் நடத்தையைப் பாதிக்கும். நாளடைவில் தாமதப்படுத்துவது சாதாரண விஷயங்களைக்கூடக் கடினமாக்கிவிடும். தாமதம் என்பது, ஒருவர் அறிந்து செய்யும் நேரத் திருட்டு. பொறுப்பு என்கிற பொறியில் சிக்கிவிடுவோமோ என்கிற பயம் உருவாக்கிய சிறு தடுமாற்றம்.
ஒரு செயலை மேற்கொள்ளும்போது, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்கிற எதிர்மறையான உணர்வின் வெளிப்பாடு, மற்றவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகிவிடுவோமே என்கிற அச்சம் ஆகியவைதான் தாமதத்துக்கு முக்கியக் காரணங்கள்.
அமெரிக்காவில் உள்ள வெர்மாண்ட் பல்கலைக்கழகம் 1984-ம் ஆண்டில் நடத்திய ஆய்வு ஒன்றில் 76 சதவீத மாணவர்கள் படிக்கிற விஷயங்களில் மிகவும் தாமதிக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிரெடிட் கார்ட் உபயோகிக்கும்போது ஏற்படும் சந்தோஷம் தாமதிக்கும்போது ஏற்படுகிறது. கிரெடிட் கார்ட் பில் வரும்போது ஏற்படும் வருத்தம் தாமதிப்பதினால் ஏற்படும் விளைவுகளின்போது ஏற்படுகிறது.
தாமதப்படுத்துபவர்கள் மிகை உணர்ச்சியில் திடீர் முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்று ‘தி புரொகிராஸ்டினேஷன் ஈக்குவேஷன்’ (‘The Procrastination Equation’) புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் டாக்டர் பியர்ஸ் ஸ்டீல். பூரணத்துவத்துக்கான முயற்சியில் தாமதம் ஏற்படுகிறது எனச் சொல்லிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அது தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளும் சமாதானமே.

தாமதிப்பவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

செயலை முடிக்க வேண்டிய இடங்களை அல்லது சூழ்நிலைகளைத் தவிர்த்தல்.
முடிக்க வேண்டிய செயல்களை ‘சாதாரணம்’ என்று நம்பத் தொடங்குதல்.
தேவையில்லாத செயல்களில் ஈடுபடும்போது, மிகவும் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லிக்கொள்வது.
தான் மறுத்த செயல்களை, அடுத்தவர் மேற்கொள்ளும்போது, அவர்களைக் கேலி செய்வது.

தாமதிக்கும்போது உண்டாகும் சிக்கல்

நாளடைவில் பதற்றம் ஏற்படும்.
செயல் நிறைவேறாத நிலையில், குற்ற உணர்ச்சி ஏற்படலாம்.
தன்னம்பிக்கை பாதிக்கப்படும்.
கவனச் சிதறல் ஏற்படும்.

எப்படி மீள்வது?

1. தாமதப்படுத்துபவர்கள், தங்களைச் சாதாரணமானவர்களாக நினைத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் அறிவுஜீவிகள் என்கிற எண்ணத்திற்கோ மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கோ உட்படுத்திக்கொள்ளக் கூடாது.
2. ஒரு செயலை ஆரம்பிக்கும்போது, அதைத் தீவிரப் பிரச்சினையாக நினைத்துக்கொள்ளக் கூடாது. ஆர்வத்தோடு செயலில் இறங்க வேண்டும்.
3. தான் செய்ய நினைத்ததை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நினைப்பில் பலர் தாமதப்படுத்துகின்றனர். எதிலும் முழுமை சாத்தியம் இல்லை என்பதை உணரவேண்டும்.
4. தன்னுடைய ஆளுமையைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்.
5. தாமதிப்பவர் தங்களுடைய குறிக்கோளை முதலில் கண்டறிய வேண்டும்.
6. “நான் இந்த வேலையை இந்நேரம் முடித்திருக்க வேண்டும். ஆனால், இன்னமும் தொடங்கவே இல்லை” என்கிற எதிர்மறையான எண்ணம் பயத்தை உண்டாக்கி இன்னமும் தாமதத்துக்கு வழிவகுக்கும். பகுதி பகுதியாக அந்த எண்ணங்களை ஆராய்ந்து, மாற்று எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும்.
7. “நான் அந்த வேலையைச் செய்தாக வேண்டும்” என்று நினைக்கும்போது, ஒருவிதக் கட்டாயம் நம்முள் எழ வாய்ப்பு இருக்கிறது. அதனாலேயே, எதிர்மறை உணர்வுகளுக்கு ஆளாக நேரிடும். அதற்குப் பதிலாக, “நான் அந்த வேலையைத் தொடங்கப்போகிறேன்” அல்லது “அந்த வேலையைத் தொடங்குவேன்” என்று நினைப்பது நல்ல பலன் அளிக்கும்.
8. எண்ணங்களும், பழக்கவழக்கங்களும் தாமதத்துக்குக் காரணம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
9. வேலை தொடங்குவதைப் பற்றி மட்டும் யோசியுங்கள். அதைச் செய்து முடிப்பது பற்றி நினைக்க வேண்டாம்.
10. செய்யவேண்டிய வேலை பெரிதாக இருந்தால், அதைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியை முடித்தவுடன், உங்களை பாராட்டிக்கொள்ள வேண்டும். பின் அடுத்த நிலைக்குச் செல்வது எளிதாக இருக்கும்.
11. செயலைத் தொடங்கும் முன் பதற்றம் ஏதுமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
12. சிறிய அளவுப் பங்களிப்புகூடத் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
13. செயலில் ஈடுபடும்போது, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.
14. இடையூறுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

நினைவில் நிறுத்துங்கள்

1. 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மாதிரி, ஒரு செயல் உடனடியாகத் தொடங்கப்படவேண்டும்.
2. குறிக்கோளோடு ஒவ்வொரு முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.
3. ஒரு செயலை ஆரம்பிக்கும்போது, உங்களை நீங்களே பாராட்டத் தவற வேண்டாம்.
4. வெற்றி பெறுபவர்களின் ஆளுமைப் பண்புகளில் நேர மேலாண்மை முக்கியமானது.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?