நலம் தரும் நான்கெழுத்து 13: நீங்கள் ஒதெல்லோவா..?

‘தோல்விகளைவிடச் சந்தேகங்களே பல கனவுகளை அழித்திருக்கின்றன’

சென்ற வாரம் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்கும் பண்பு அதீதமானால் எப்படி பிரச்சினைகள் உருவாகின்றன எனப் பார்த்தோம். இந்த வாரம், அதன் வெர்ஷன் 2.0. அதாவது, சந்தேகத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
மனிதப் பண்புகள், குணாதிசயங்கள், உணர்ச்சிகள் என எல்லாவற்றின் பின்னும் ஏதோ ஒரு பரிணாமவியல் காரணம் இருக்கும். அதன் அடிப்படையிலேயே சந்தேகம் என்பதும் மனிதனுக்கு அவசியமான ஒரு பண்பு. எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான குணம். என்றோ யாரோ ஒரு தீவிரவாதி பயணம் செய்கிறான் என்பதற்காக விமானங்களில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகள் அனைவரையும் அரசாங்கம் சந்தேகக் கண்களோடு பரிசோதனைக்கு உட்படுத்துகிறதே அதுபோல் சந்தேகப்படுவது அவசியமாகிறது.

எச்சரிக்கும் சந்தேகம்

ஆதி மனிதன் புதிதாக ஒருவரைப் பார்த்ததும் அவர் எதிரியாக இருப்பாரோ எனச் சந்தேகப்பட்டான். வந்தவன் தன் கையில் ஆயுதம் எதுவுமில்லை எனச் செய்தி சொல்வதற்காகக் கைகளை அசைத்துக் காட்டினான். அந்தப் பழக்கமே இன்றும் ஒருவரைச் சந்திக்கும்போது கைகளை அசைத்துக் காட்டுவதாகத் தொடர்கிறது என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
குற்றங்களைப் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரிகள் ஒரு குற்றம் நடந்த இடத்தில் உள்ள அனைவரையுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள். மருத்துவர்கள் நெஞ்சுவலி எனச் சொல்லும் அனைவருக்குமே மாரடைப்பு இருக்குமோ எனச் சந்தேகப்பட்டுப் பரிசோதனைகள் செய்தால்தான், அந்நோய் தாக்கியவர்களைக் கண்டறிய முடியும். சில ஏமாற்றுப் பேர்வழிகள், சந்தேகமே வராமல் ஏமாற்றி மோசடிகள் செய்வதைப் பல முறை நாம் கேள்விப்படுகிறோம்.
சில வருடங்களுக்கு முன் நிதிநிறுவனங்கள் ஐம்பது சதவீத வட்டி, நூறு சதவீத வட்டி என்றெல்லாம் விளம்பரப்படுத்தி ஏமாற்றின. இவற்றில் பலரும் ஏமாந்தனர். என்ன கொடுமையென்றால் இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு நடத்துவோம் எனச் சிலர் பணம் வசூல்செய்து, அந்தப் பணத்தையும் மோசடி செய்து தலைமறைவானதுதான். இது போன்ற சந்தர்ப்பங்களில் நமது எச்சரிக்கை உணர்வும் சந்தேகமுமே நம்மைக் காப்பாற்ற உதவும்.

அதீதமே மனப்பிறழ்வு

ஆனால், அளவுக்கு அதிகமாகப் போகும் எல்லாவற்றையும் போன்றே சந்தேகமும் அதீதமாகும்போது நோய்க்கூறாக மாறுகிறது. சிலருக்கு, எல்லோருமே தனக்கு எதிராக இருப்பது போன்ற சந்தேகம் தோன்றும். தனக்கு எதிராகச் சதி செய்கிறார்கள் என நம்பத் தொடங்குவார்கள். சிலர் காவல்துறையில் புகார்கூட அளிப்பார்கள். இந்த மனப்பிறழ்வு ‘பாரனோயா’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். ஹிட்லருக்குக்கூட இம்மாதிரி மனப்பிறழ்வு இருந்ததென நம்பப்படுகிறது.
சந்தேகத்துக்குரிய விஷயங்களைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இவர்களது அறிவோ செயல்பாடுகளோ கொஞ்சமும் மாறுபாடின்றி இருப்பதால், பலருக்கும் இது ஒரு மனநல பாதிப்பு என்றே தோன்றாது. ‘பியூட்டிஃபுல் மைண்ட்’ என்ற திரைப்படம், ஜான் நாஷ் என்ற நோபல் பரிசு பெற்ற கணித அறிஞருக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வை அருமையாகச் சித்தரிக்கிறது. அவ்வளவு அறிவுத்திறன் உடையவருக்குத் தன்னை உளவுத்துறையினர் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்ற சந்தேகம் வந்து அவதிப்பட்டதை அப்படத்தில் சித்தரித்திருப்பார்கள்.

ஷேக்ஸ்பியர் தந்த ‘சந்தேகம்’

சந்தேகத்தின் இன்னொரு பரிமாணம் கணவன் அல்லது மனைவியைக் காரணமின்றிச் சந்தேகப்படுவது. எதிர்பாலினர் யாருடனாவது பேசினாலோ, ஏன் தற்செயலாகப் பார்த்தால்கூடச் சந்தேகப்படுவார்கள். கணவன்/மனைவியின் தொலைபேசியை அடிக்கடிச் சரிபார்ப்பது, அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்வது எனப் பல நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்குவார்கள்.
நீண்டகாலக் குடிப்பழக்கம் உடையவர்களுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பால் இதுபோன்ற சந்தேகங்கள் அதிகம் வரக்கூடும் . ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்தில் வரும் ஒதெல்லோ, குடிபோதையில் தனது மனைவி டெஸ்டிமோனாவைச் சந்தேகப்பட்டுக் கொலை செய்துவிடுகிறான். அதனால் இந்நோய்க்கு ‘ஒதெல்லோ சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது.
‘நம்பிக்கைவாதி விமானத்தைக் கண்டுபிடித்தான். அவநம்பிக்கைவாதி பாராசூட்டைக் கண்டுபிடித்தான்’ என்பார்கள். அதுபோலக் கொஞ்சம் சந்தேகம் தேவைதான். ஆனால், அளவுக்கு அதிகமானால் கண்மூடித்தனமான நம்பிக்கையும் சந்தேகமும் பெருந்துன்பத்தையே தந்துவிடுகின்றன. இரண்டுக்குமான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?