முதல் நண்பன் 15: மறக்கப்படும் வரலாறு!
கன்னி நாய் இனத்தில் பல மாறுபாடுகள் உடைய தலை அமைப்பைக் கொண்ட நாய்கள் இருக்கின்றன. அவற்றில் சங்குதலை அமைப்புடைய நாய்களை ‘கன்னி நாய்கள்’ என்ற வரையறையின் கீழ் இடம்பெறாதவை என்று கூறித் தவிர்ப்பதாக வைத்துக்கொள்வோம். அது, கிட்டத்தட்ட மத்திய கிழக்கு ஆசியா தொடங்கி தமிழகம்வரையில் வாணிபம் தொடங்கி படையெடுப்புவரையில் பரவிவந்த பல கூர்நாசி நாய்களுடைய பொதுக்கூறான சங்குதலை அமைப்பைத் தவிர்ப்பது போலாகும்.
இது ஒட்டுமொத்த வரலாற்றின் சரடை அறுப்பதுடன், நாய் இனத்தின் தோற்றம் பற்றிய புரிதலையும் அறிய முடியாமல் செய்கிறது. இதுபோன்றத் தவிர்ப்புகள் மூலமாக வரும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம்’, பல தரப்பட்ட மரபியல் கோளாறுகளையும் உயிரியல் கோளாறுகளையும்தான் அந்த இனத்துக்குக் கொண்டுவரும்.
பயன்பாட்டு அடிப்படையில்…
சரி, அப்போது கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மத்தியில் இதுபோன்ற இனம் காணும் வழக்கம் கிடையாதா என்றால், நிச்சயம் உண்டு. ஆனால் அவை பயன்பாட்டு அடிப்படையிலானவை. மிக வேகமாக ஓடக்கூடிய நாய்களின் வழி பிறந்த நாய்கள், நல்ல உடல் வாகு போன்றவற்றின் அடிப்படையில் நாய்கள் இனம் காணப்படும். மேலும் தொடக்கத்தில் அதிகப் பிரயத்தனத்துடன் நாய்களை வாக்கிய மக்கள், அதிக அளவில் உள்ளினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினர்.
இதனால், நாய்களுடைய உடல் அளவு குறுகத் தொடங்கியது. எனவே, நல்ல கன்னி நாய்கள் என்பவை அளவில் சிறியதாகவும், அவையே நல்ல வேட்டைத்திறன் கொண்டவை என்ற எண்ணமும் உருவாகத் தொடங்கியது. முதலில், கன்னி நாய்களில் அதிக உயரமும் உண்டு, குள்ளமும் உண்டு என்பதை உணர வேண்டும். கன்னி நாய் பயன்படுத்தப்பட்ட வேட்டைகளில் ‘பேக் ஆஃப் ஹவுண்ட்ஸ்’ என்பவை சட்டென வளைந்தோடவும், நீண்ட பரப்புகளில் விரட்டி ஓடவும், இரையை இடைமறித்து வேறு திசையில் திருப்பவும் முடியும்.
கன்னி நாய்கள் மீது ஆர்வத்துடன் வரும் பலர், தங்கள் தகவல்களுக்கு இணையத்தைச் சார்ந்திருப்பதன் விளைவாக இந்த ஒற்றை வரையறை மிகத்தீவிரமாகப் பரவத் தொடங்குகியது. புரிதலுடன் செயல்படாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அழிவை இந்தக் கன்னி நாய்கள் சந்திக்கும்!
Comments
Post a Comment