கர்வம் அழிக்க காத்திருக்கிறார்! சுவாமி சரணம்! 45


ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக...!
நினைக்க நினைக்க வியப்பும் மலைப்பும் கூடிக்கொண்டே இருக்கிற விஷயம்... சபரிமலை. பார்த்ததும் தரிசித்ததும் வியப்பு குறைவதுதானே இயல்பு. மலைப்பு காணாமல் போவதுதானே யதார்த்தம். ஆனால் பார்க்கப் பார்க்க வியப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க, மலைப்பு ஏறிக் கொண்டே இருக்கிறது. இதுதான் சபரிமலையின் விசேஷம்!
இதோ... மகரஜோதி விழா நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை. கார்த்திகை மாதம் தொடங்கி இன்று வரை பல லட்சக்கணக்கான ஐயப்பசாமிகள், இருமுடி சுமந்து ஐயன் ஐயப்ப சுவாமியைத் தரிசித்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். புத்தாண்டு தொடங்கிய ஜனவரி 1-ம் தேதியில் இருந்தே இன்னும் எகிறிக் கொண்டிருக்கிறது கூட்டம். பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்துதான் தர்மசாஸ்தாவைத் தரிசிக்கிறார்கள். அப்படிக் காத்திருந்துதான் தரிசிக்க முடியும்.
இங்கே ஒரு விஷயம்...
சபரிமலைக்கு இப்போது இரண்டு பாதைகள் இருக்கின்றன. பெரிய பாதை, சிறிய பாதை. அதாவது அந்தக் காலத்தில், சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்கு, எருமேலியில் இருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே ஒரே வழியாக இருந்தது. எருமேலியில் இருந்து சபரிமலை வரை காடுதான்... காட்டுப்பாதைதான்... காட்டுப்பாதையில் பயணம்தான்!
இரண்டுக்குமான தூரம் சுமார் 56 கிலோமீட்டர் தொலைவு. இதைத்தான் பெரியபாதை என்றும் பெருவழிப்பாதை என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். அந்தக் காலத்தில் இருந்த பாதை என்பதாலும் ஆதியில் இந்தப் பாதை வழியே சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்ததாலும் இந்தப் பெருவழிப் பாதையே சிறந்தது... அதாவது இப்படிச் சென்று தரிசிப்பதே சிறந்தது எனும் பொருள்பட சொல்கிறார்கள்.
இப்போதுதான் எருமேலி, எரிமேலி என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் எறிமேலி என்றுதான் சொல்லிவந்தார்கள் பக்தர்கள். சொல்லப்போனால்... இந்த எறிமேலி என்பது காரணகாரியமாகச் சொல்லப்பட்டது என்று சொல்வதே பொருந்தும்.
ஆமாம்.. மகிஷியை வதம் செய்ய, அவளுடன் மணிகண்ட சுவாமி போரிட்டார் அல்லவா. அவள் மீது அம்புகளாக விட்டு விளாசித்தள்ளினார் இல்லையா? அப்படி மணிகண்ட சுவாமி, மகிஷியை நோக்கி முதல் அம்பு விட்ட இடம் இதுவே! இந்த இடத்தில் இருந்துதான் மணிகண்ட சுவாமி, அம்பு தொடுத்தார். அம்பு விட்டார். மகிஷியைத் தாக்கினார். அப்படி அம்பு எறிந்த இடம் என்பதால் எறிமேலி என்று அழைக்கப்பட்டு, இப்போது அவை மருவி, எரிமேலி என்றாகிப் போனது.
இந்த எருமேலிக்கு இன்னொரு விளக்கமும் சொல்வார்கள். மகிஷி என்பவள் அரக்கி. அவள் எருமைத்தலையும் மனித உடலும் கொண்டு இருப்பவள். ஆகவே, அந்த எருமைத்தலைக்காரியை வதம் செய்த இடம் என்பதால், எருமைக்கொல்லி என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்டு, பின்னாளில் அது சுருங்கி எருமேலி என்றானதாகவும் கதை உண்டு என்கிறார் பிரபல ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ.
இங்கே... எருமேலியில் அழகான தர்மசாஸ்தாவின் கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலை அமைத்தவர்... பந்தள ராஜா. வேட்டைக்குச் செல்வதற்கு கையில் அம்பும் வில்லுமாய் தயார் நிலையில் நிற்கிறார் தர்மசாஸ்தா.
வேட்டை என்றால்... விலங்குகளை வேட்டையாடுவதற்கா. பறவைகளைப் பிடிப்பதற்கான ஆயத்தமா? மகிஷி எனும் அரக்கியைக் கொல்வதற்கான வேட்டையா? ‘இதை அப்படிப் பார்க்கக் கூடாது. மகிஷி என்பவளுக்கு அரக்ககுணம் எப்படி வந்தது. கர்வத்தால் வந்தது. ஆணவத்தால் வந்தது. எனக்கு மிஞ்சி எவருமில்லை எனும் செருக்கு கொடுத்த திமிர் இது. இந்தத் திமிரை, கர்வத்தை, ஆணவத்தை அழிப்பதற்காகத்தான் அம்பும் வில்லுமாகத் தயாராக நின்றபடி காட்சி தருகிறார், தர்மசாஸ்தா. ஆணவம் என்பது பொதுகுணம். இது அந்த அரக்கிக்கு மட்டுமா? மகிஷியின் குணம் மட்டுமா?
நம்மிலும் கர்வ குணங்களுடனும் அலட்டல் ஆணவத்துடனும் நிறைய பேர் இருக்கிறார்கள். நமக்குள்ளேயும் கூட இந்த குணங்கள் சிலசமயம் எட்டிப்பார்க்கத்தான் செய்கின்றன. எருமேலி தர்மசாஸ்தாவின் முன்னே நின்று, சிரம் தாழ்ந்து, மனமார வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டிக் கொள்ளுவோம். நம் கர்வத்தையும் ஆணவத்தையும் அழித்து, நம்மை இன்னும் இன்னும் மெருகேற்றித் தருவார் ஐயப்ப சுவாமி. வாழ்வில் ஒளியேற்றித் தருவார் மணிகண்டன்!
சபரிமலைக்கு மாலை அணியும்போதே, எருமேலி செல்லவேண்டும் என்றும் தர்மசாஸ்தாவை வணங்க வேண்டும் என்றும் நினைத்து உறுதி கொள்ளுங்கள். இருக்கிற கொஞ்சநஞ்ச கோபத்தையும் வன்மத்தையும் களைந்தெடுக்க, நமக்காக, நம் வரவுக்காக தர்மசாஸ்தா அங்கே காத்திருக்கிறார்!

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?