ஜோதிடம் அறிவோம்! 4 இதுதான்...இப்படித்தான்! செவ்வாய் தோஷ பரிகாரங்கள்!
ஸ்வீட் ஸ்டாலுக்குச் சென்று, ஏதேனும் வாங்கும் போது, அதன் ஒரு துண்டைக் கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டுப் பார்த்து வாங்கினால்தான் நமக்கு நிம்மதி; நிறைவு. இந்த அகண்ட உலகில், எல்லாவற்றுக்கும் ‘சாம்பிள்’ தேவையாய் இருக்கிறது.
ஆகாயம் போல மனசு, பால் போல் நிறத்தில் சட்டை என்று உதாரணங்களைச் சொல்லியும் பேசியும் பழகிவிட்டோமே!
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற செவ்வாய் தோஷ விஷயத்துக்கும் சில உதாரணங்கள் தேவைதான். அவற்றைச் சொன்னால், இந்த செவ்வாய் தோஷம் ‘ஒரு மேட்டரே இல்லை’ என்பது உங்களுக்கு எளிமையாய் புரியும்!
என்னிடம் வந்த சில செவ்வாய் தோஷ ஜாதகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதில் ஒரு ஜாதகம்... ஜாதகத்துக்கு உரியவர் ஒரு பெண். அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்ததால், பல வரன்கள் நிராகரித்த நிலை. இதனால் விரக்தியில் இருந்த பெற்றோர் என்னிடம் வந்தார்கள்.
அந்தப் பெண்ணின் ஜாதகம் இதில் இணைத்திருக்கிறேன்.
இந்த ஜாதகம் துலாம் லக்னம், மிதுன ராசி, செவ்வாய் மகரத்தில்!
எனவே லக்னத்திற்கு 4 ல் செவ்வாய், ராசிக்கு 8 ல் செவ்வாய், இது கடுமையான செவ்வாய் தோஷம் என ஜோதிடர்களால் சொல்லப்பட்டது.
நான் அவர்கள் கொண்டுவந்த ஜாதகத்தில் சில குறிப்புகள் எழுதித் தந்தேன். இப்போது இந்த ஜாதகத்தை அப்படியே நகல் (xerox) எடுத்து பிள்ளை வீட்டாருக்குக் கொடுங்கள் என்று சொன்னேன்.
அடுத்த ஒரு மாதத்திற்குள் வரன் தகைந்தது, அந்தக் குடும்பமே நெகிழ்ந்து போனது. வியந்து போனது.
அப்படி என்ன குறிப்பு அது?
“ இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என்பது சரிதான், ஆனால் உச்சம் பெற்ற செவ்வாய், எப்போதுமே தோஷம் தருவதில்லை, மற்றும் 7 மற்றும் 8 ம் இடம் சுத்தம் (7- ம் இடமான மேஷம், 8 - ம் இடமான ரிஷபம்) எனவே செவ்வாய் தோஷம் பலவீனமாகிவிட்டது. தோஷமும் நிவர்த்தி ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தேன்.
மாப்பிள்ளை வீட்டார் ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சென்ற போது, ஜோதிடர்கள் இந்தக் குறிப்பை கவனித்து தோஷ நிவர்த்தி என கூறி ஒப்புதல் தந்தார்கள்.
தற்போது அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், அவர், தன் கணவருடனும் குழந்தைகளுடனும் கனடா நாட்டில் வசித்து வருகிறார்கள். நல்ல செல்வ வளத்துடன், நலமாக வாழ்கிறார்கள்.
பெண்ணின் பெற்றோர் இன்னமும் எனக்கு நன்றி கூறி அவ்வப்போது பேசவும், நேரில் வேறு சில ஆலோசனைக்கும் வந்து கொண்டிருக்கின்றனர். நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான். அது... ’ எல்லாம் முருகன் செயல்’!
இப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகர்கள் என்ன விதமான பரிகாரங்கள் செய்யலாம் என பலரும் கேட்கின்றனர். உண்மையில் நான் பரிகாரம் என பரிந்துரைப்பது முருக வழிபாடு மட்டுமே! அதாவது, கந்தனை வேண்டினால், சகல தோஷங்களும் காணாது போகும். இதில் செவ்வாய் தோஷமெல்லாம் எம்மாத்திரம்?
அதாவது நான் பரிந்துரைக்கும் பரிகாரங்கள் பஞ்சபூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை,
மேஷம், சிம்மம், தனுசு:- நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி, மகரம்:- நில ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம்:- காற்று ராசிகள்
கடகம், விருச்சிகம், மீனம்:- நீர் ராசிகள்.
ஆக செவ்வாயானது, நெருப்பு ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால் ஆலயத்தில் விளக்கேற்றி தீப வழிபாடு செய்து வாருங்கள். அது ஒன்றே போதும்...விரைவில் தோஷ நிவர்த்தியாகிவிடும்!
செவ்வாயானது, நில ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால், அவரவர் நட்சத்திரங்களுக்கு உண்டான மரம் வளர்த்தல், அல்லது கோயிலில் உள்ள ஸ்தல விருட்சங்களுக்கு தண்ணீர் விட்டு வழிபடுதல் முதலானவை தோஷ நிவர்த்திக்கு வழிவகுக்கும்.
செவ்வாயானது, காற்று ராசியில் இருந்து, தோஷத்தைத் தந்தால், முருகனின் கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம், துர்கை கவசம், துர்கை அஷ்டோத்ரம் முதலானவற்றைப் படித்து வர, செவ்வாயால் உண்டான தோஷம் நிவர்த்தியாகி விடும் என்பது உறுதி!
செவ்வாயானது, நீர் ராசியில் இருந்து தோஷத்தைத் தந்தால். இறைவனுக்கு நடத்தப்படும் அபிஷேகப் பொருட்களான பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் அல்லது கோயில்களில் விளக்கேற்ற நல்லெண்ணெய் ஆகியவற்றை வழங்கி பிரார்த்திக்கலாம்.இவற்றாலும் தோஷங்கள் சீக்கிரமே நிவர்த்தியாகும்!
சரி... செவ்வாய் தோஷம் என்பதே இல்லை என்றீர்கள். இப்போது பார்த்தால், அதற்கு பரிகாரங்களைச் சொல்கிறீர்கள் என்று எவரேனும் கேட்கலாம்.
தோஷம் என்பது திருமணமே இல்லை என்ற நிலையை ஒருபோதும் எவருக்கும் தருவதில்லை, தாமதம் என்ற நிலையை மட்டுமே தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே
இந்த பரிகாரங்கள் உங்களுக்கோ, அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ விரைவில் திருமணம் நடந்து இல்லறம் சிறக்க வாழ வேண்டும் என்பதற்காகதான்!
இன்னும் தோஷங்கள் குறித்த பரிகாரங்கள் பல இருக்கின்றன. அவற்றை அடுத்தடுத்துப் பார்ப்போம்!
Comments
Post a Comment