7 வருடங்களுக்குப் பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவதில் மகிழ்ச்சி
பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் மது அருந்துவது போலவோ, புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது. 7 வருடங்களுக்குப் பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சூர்யா பேசினார்.
'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் சூர்யா பேசியதாவது:
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தைத் தொடங்க இருக்கும் ரஜினி சாருக்கும், கமல் சாருக்கும், விஷாலுக்கும் என்னுடைய வாழ்த்துகள். எல்லோருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைந்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்தக் கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்கப் போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ணுங்கள் என்றார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள்.
1987-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தானா சேர்ந்த கூட்டம் படம் எடுக்கபட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற அறிவிப்பு எங்கள் படத்தில் வராது அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்'' என்றார் சூர்யா.
Comments
Post a Comment