வெற்றிவேல் முருகனுக்கு... 8 'கரும்பு’ முருகன்!


கையில் கரும்பு ஏந்தியபடி முருகன்... படம்:ராஜேஷ்
ராஜராஜசோழன் காலத்தில் தஞ்சாவூரும் , ராஜேந்திர சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரமும் சோழ தேசத்தின் தலைநகராகத் திகழ்ந்தது . அதேபோல், ஒருகாலத்தில் உறையூரும் தலைநகராக விளங்கியது என்பது நமக்குத் தெரியும்தானே.
அப்படி, உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் ஆட்சி செய்த காலம் அது! இந்த ஊரைச் சேர்ந்த வணிகர் ஒருவர், வடக்கு நோக்கி பயணப்பட்டார். வழியில், இரவு நேரம் வந்தது. அங்கே இருந்த கடம்ப வனத்தில் தங்கிச் செல்ல முடிவெடுத்தார்.
அந்த கடம்ப வனத்தில், ஆலமரம் ஒன்று இருந்தது. அதன் மீதேறி, கிளையில் அப்படியே படுத்துக் கொண்டார் நள்ளிரவு... திடீரென தீப்பிழம்பு போல் வெளிச்சம் பரவியது. அந்த வெப்ப தகிப்பிலும் பேரொளியிலும் கண் திறந்து பார்த்தார். சிலிர்த்து வியந்தார். தேவர்களும் முனிவர் பெருமக்களும் சூழ்ந்திருக்க, தீப்பிழம்பின் நடுவே சிவலிங்கம் இருந்தது!
எப்போது விடியும் எனக் காத்திருந்தவர், விடிந்ததும் மீண்டும் உறையூருக்கு ஓடினார். அரண்மனைக்கு வந்து, பராந்தகச் சோழனிடம் தெரிவித்தார். அப்போது சோழ தேசத்தின் விருந்தாளியாக, குலசேகரப் பாண்டியன் வந்திருந்தார்கள். மன்னர்கள் பரவசமாகிப் போனார்கள். உடனே கடம்பவனம் வந்தார்கள்.
ஆனால், சிவலிங்கம் இல்லை. எங்கு தேடியும் கண்ணில் தென்படவில்லை. அயர்ச்சியும் சோகமும் ஒருசேர, தவித்தார்கள். மருகினார்கள். கலங்கினார்கள். அப்போது, அங்கே... கையில் செங்கரும்பை ஏந்தியபடி, முதிர்ந்த கிழவர் ஒருவர் வந்தார்; ‘சிவலிங்கத்தை தேடுறீங்களா? எங்கே இருக்குதுன்னு நான் காட்டட்டுமா?’ என்று சொல்லி விட்டு நடந்தார்.
அவர் சொன்னது கேட்டு அதிர்ந்து போனார்கள் மன்னர்கள். இவருக்கு எப்படித் தெரியும். யாரிவர். இந்தக் காட்டில் இவருக்கு என்ன வேலை என்றெல்லாம் யோசித்தபடியே, தன் படையினருடன் முதியவரைப் பின்தொடர்ந்தனர். ஆனால் வயதளவில்தான் அவர் முதியவர். ஆனால் வாலிபனைப் போல் விறுவிறுவென வேகமாக நடந்தார் முதியவர்.
சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் காட்டினார்; தகதகவென மின்னும் ஜோதியாக லிங்கத்தைக் கண்டு சிலிர்த்தனர்; வணங்கினர்; மனமே நிறைந்து போனது மன்னர்களுக்கு! முதியவருக்கு நன்றி சொல்லத் திரும்பினார்கள். ஆனால் முதியவரைக் காணோம்!
நாலாதிசையெங்கும் பார்க்க... அருகில் இருந்த மலையில், முதியவர் நின்று கொண்டிருந்தார். அந்த நிமிடமே... அழகனாக, தண்டாயுதபாணியாக, முருகக் கடவுளாகக் காட்சி தந்தார்.
அதுவும் எப்படி? கையில் முதியவர் வைத்திருந்த செங்கரும்புடன்!
ஒருபக்கம் சிவ தரிசனம். இன்னொரு பக்கம்... சிவமைந்தன் முருகனின் தரிசனம். விருந்தினரான குலசேகரப் பாண்டியன், மலைக்கு அருகில் சிவாலயத்தையும் மலையின் மேலே முருகன் கோயிலையும் எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில், சமயபுரத்தைக் கடந்ததும் திருப்பட்டூர் செல்வதற்கான சிறுகனூர் வரும். அதையடுத்து செட்டிகுளம் வளைவு வரும். பைபாஸ் சாலையில் இருந்து சுமார் 7 கி.மீ. பயணித்தால், செட்டிகுளம் எனும் கிராமத்தை அடையலாம். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் நுழைவாயில் வளைவு எப்படி அங்கே இருக்கிறதோ... அதேபோல் பைபாஸ் சாலையில், செட்டிகுளம் நுழைவு வளைவு இருக்கிறது.
ஊருக்குள் நுழையும்போதே, வலது பக்கத்தில் சின்னதாக மலை ஒன்று உள்ளது. அங்குதான் தண்டாயுதபாணி எனும் திருநாமத்துடன் கையில் கரும்பு ஏந்தி, காட்சி தந்து அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான்.
சின்ன மலைதான். ஆனால், நம் வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நீக்கி, நமக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் கந்தக்கடவுள். கையில் கரும்பு ஏந்திய முருகனை தரிசித்தால் போதும்... நம் வாழ்க்கையையும் இனிக்கச் செய்வான் கந்தவேலன்!
ஆமாம்... அதென்ன செட்டிகுளம்?
அந்தக் காலத்தில் இந்தப் பகுதி கடம்ப மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்தது அல்லவா. அப்போது அகத்திய மாமுனிவர் இங்கே வந்து, தவத்தில் இருந்தாராம். அந்தக் காட்டில் உள்ள பஞ்சநதிக் குளத்தில் நித்திய அனுஷ்டானங்களைச் செய்வதற்காக, நீராட வந்தார் அகத்தியர். அங்கே... அப்போது... வளையல் விற்கும் செட்டி வணிகர் போல் அகத்தியருக்கு காட்சி தந்து அருளினார் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.
செட்டி மக்கள், எப்போதுமே முருக வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இங்கே, இந்தத் தலத்தில், செட்டி வணிகராகவே முருகக் கடவுள் வந்து, அகத்திய மாமுனிக்கு காட்சி தந்ததால், இந்த ஊருக்கு வட பழநிமலை என்று பெயர் இருந்தாலும், செட்டிகுளம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?