வரலாறு தந்த வார்த்தை மதியின் அழகு!
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல சினிமாவாக ‘அறம்’ வெளியாகியுள்ளது. பார்த்தவர்கள் கொண்டாடுகிறார்கள். கொண்டாடியவர்கள் மீண்டும் பார்க்கிறார்கள். மீண்டும் பார்ப்பவர்களைப் பார்த்து, புதிதாகப் படத்தைப் பார்க்கச் செல்கிறார்கள் பலர்.
தமிழ் சினிமாவில் ‘அத்தி பூத்தாற் போல’ இப்படி எப்போதாவது ஏதேனும் ஒரு படம் வரும். இப்படி ஒரு படத்தை எடுக்க இயக்குநருக்குத் துணிவு வேண்டும். அவருக்குத் துணையாக நடிகர்கள் அமைய வேண்டும். ‘அற’த்தைப் பொறுத்த வரை, நயன்தாரா, தூணாக நின்று இந்தப் படத்தைத் தாங்குகிறார். அப்படிப் பார்த்தால், ‘மதி’வதனியின் நடிப்பு… ‘அறத்தின் அழகு!’ அந்த ‘மதி’க்கு இன்னொரு பெயரும் உண்டு. அது இக்கட்டுரையின் கடைசி வரியில்!
சரி… விஷயத்துக்கு வருவோம். எப்போதாவது, அரிதிலும் அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வை, தமிழில் ‘அத்தி பூத்தாற் போல’ என்பார்கள். ஆங்கிலத்தில் இந்தச் சொற்றொடருக்கு நிகராக ஒரு சொற்றொடர் உண்டு. அது: ‘Once in a blue moon’.
முழு நிலவு தெரியும். அதென்ன, முழு நீல நிலவு..? 1883-ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள க்ரகடோவா எனும் தீவில் எரிமலை வெடித்தது. அப்போது வளி மண்டலத்தில் எழுந்த தூசுகளால், சிவப்பு நிற ஒளிக்கதிர்ச் சிதைவு ஏற்பட்டது. அதன் காரணமாக அப்போது நிலா, நீலமாகத் தெரிந்தது. வரலாற்றில் அதற்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. அதற்குப் பிறகும் அப்படி ஒன்று நிகழ்ந்ததாக ஏதும் தகவல் இல்லை. அது ஒரு அரிதான நிகழ்வு. ‘நீல நிலா’ அப்படித்தான் தோன்றியது.
நிற்க, இன்று இந்தச் சொற்றொடரை நாம் புரிந்துகொள்ளும் அர்த்தத்தில் (அதாவது, மிகவும் அரிதான என்ற பொருளில்), முதன் முதலில் பயன்படுத்தியது இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் பியர்ஸ் ஈகன். அவர் தன்னுடைய ‘ரியல் லைஃப் இன் லண்டன்’ எனும் புத்தகத்தில் பயன்படுத்தினார்.
மொழியை விடுங்கள். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது பவுர்ணமியை, ‘ப்ளூ மூன்’ என்று வரையறுக்கிறது நவீன வானியல். ஆம், நிலவுக்கு, மதி என்றும் பெயர்!
Comments
Post a Comment