ஊடகங்களில் பணியாற்ற ஆசையா?


கவல் தொழில்நுட்ப யுகத்தில் அச்சு, காட்சி ஊடகம், சினிமா, தொலைக்காட்சி மற்றம் விளம்பர உலகம், சமூக ஊடகங்கள் என பலவிதமான ஊடகங்கள் சுவாரசியமான வேலைவாய்ப்புகளை அள்ளித்தரக் காத்திருக்கின்றன. இத்துறைகளுக்குள் நுழைவதற்கு உங்களைத் தயார்ப்படுத்தும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகள், அவற்றை பயிற்றுவிக்கும் முன்னணி கல்வி நிறுவனங்கள், அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை அறிந்துகொள்வோம்.

பிளஸ் டூவுக்குப் பிறகு

பிளஸ் டூவில் எந்தப் பாடப் பிரிவில் படித்தவர்களும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பை மேற்கொள்ளலாம். இதில் பி.ஏ., பி.எஸ்சி. பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக கலை அல்லது அறிவியல் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கு பிளஸ் டூவில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தால் போதுமானது. பிற துறைகளில் இளநிலை பட்டம் முடித்தவர்களும் மாஸ் கம்யூனிகேஷனில் முதுநிலை பட்டயப் படிப்பில் சேரலாம்.

வேலைவாய்ப்புக்கான துறைகள்

வளர்ந்து வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் ஆகியவை துடிப்பான இளைஞர்களை வரவேற்க காத்திருக்கின்றன. தடையற்ற இணைய வசதியின் பெருக்கத்தால் கைப்பேசி இயங்குதளத்தைக் குறிவைத்தும், செயலிகளின் வாயிலாகவும் புதிய தலைமுறைக்கான ஊடகங்கள் தலைதூக்கிவருகின்றன. ஆர்வமும், மாறுபட்ட திறனும், படைப்பாற்றலும் கொண்ட துடிப்பான இளைஞர்களுக்கு இது மிகவும் பொருத்தமான துறை. மேலும் பண்பலை வானொலிகள், மக்கள் தொடர்பாளர்கள், சமூக ஊடகத் துறை பொறுப்பாளர்கள் என மாஸ் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கான வாய்ப்புகள் பிரமாண்டமாக விரிவடைந்திருக்கின்றன.

எங்கே படிக்கலாம்?

மாஸ் கம்யூனிகேஷனில் பெரும்பாலானோரின் தேர்வு பி.ஏ., இளங்கலை பட்டப் படிப்பாக உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அடிப்படை அறிவியல் பாடங்களையும் உள்ளடக்கிய பி.எஸ்சி. பட்டப்படிப்பு உள்ளது. இவை தவிர்த்து டிசைனிங், நுண்கலை சார்ந்தும் பட்டம், பட்டய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இப்படிப்பை மற்ற பட்டப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் படிப்பதைவிட அதற்கான சிறப்புக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதே நல்லது.
இதழியல் துறையை இலக்காகக் கொண்டவர்களுக்கு பி.ஏ. ஜர்னலிசம் உகந்த படிப்பாகும். புனேவில் இயங்கும் எஸ்.சி.எம்.சி. கல்வி மையம் (https://www.scmc.edu.in/) ‘மாஸ் கம்யூனிகேஷன் இன் ஜர்னலிசம் இன் பிரிண்ட், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்’ என்ற இளங்கலைப் பட்டப்படிப்பை வழங்குகிறது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பி.ஏ. ஜர்னலிசம் அண்டு கம்யூனிகேஷன் வழங்குகிறது. இவை தவிர்த்துப் பெருவாரியான பல்கலைக்கழகங்கள் பி.ஏ.ஜர்னலிசப் படிப்புகளை வழங்குகின்றன.

முக்கியமான நுழைவுத் தேர்வுகள்

எத்துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் மாஸ் கம்யூனிகேஷனில் பல்வேறு முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளைப் படிக்கலாம். முன்னணி கல்வி நிறுவனங்கள் இதற்கெனத் தனியாக நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்துகின்றன. 10 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் பொது நுழைவுத் தேர்வு இதற்கு முதன்மையான உதாரணம். இவற்றில் திருவாரூர் உள்ளிட்ட 8 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாஸ் கம்யூனிகேஷன் எம்.ஏ., முதுகலைப் படிப்புகளில் சேரலாம்.
ஏப்ரல் 2018 சேர்க்கைக்கு மார்ச் மாதம் ஆன்லைனில் (http://admissions.cutn.ac.in/) விண்ணப்பிக்கலாம். சென்னையைச் சேர்ந்த ஏஷியன் இதழியல் கல்லூரி (http://asianmedia.in/) முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் தேர்வை மே மாதம் நடத்துகிறது. இதேபோன்று மணிபால் பல்கலைக்கழகத்தின் MU-OET, XIC-OET, IPU CET உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகள் உள்ளன.
டெல்லி பல்கலைக்கழகம் இதழியலில் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை நுழைவுத் தேர்வு வாயிலாகத் தேர்வு செய்கிறது. பிளஸ் டூ தேர்ச்சியுடன் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும், தேர்வு முடிவுக்குக் காத்திருப்போரும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இளநிலைப் படிப்புகளுக்கும் டெல்லி பல்கலைக்கழகம், மணிபால் பல்கலைக்கழகம் போன்றவை நுழைவுத் தேர்வு வாயிலாகச் சேர்க்கை மேற்கொள்கின்றன.
கற்பிக்கும் செய்தி நிறுவனங்கள்
இந்தியாவில் பல்வேறு தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பிரத்யேகக் கல்வி நிறுவனங்கள் வாயிலாகத் தொலைக்காட்சிக்கான இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை வழங்குகின்றன. இந்தியா டுடே (http://indiatoday.intoday.in/itmi/) மாஸ்கம்யூனிகேஷன் மற்றும் பிராட்காஸ்டிங் முதுநிலை பட்டயப் படிப்பு வழங்குகிறது. இதைப்போன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் (http://www.exims.in/), ஐ.டி.வி. (http://www.itvsmm.c om/about-us.php), ஏ.பீ.பி. (http://cmi.net.in/) மற்றும் என்.டி.டி.வி., பயனியர் உள்ளிட்டவை முதுநிலை பட்டயப் படிப்புகளை வழங்குகின்றன.
வெள்ளித்திரையில் கால்பதிக்க
திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் உள்ள தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் படிப்புகளை இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. அனிமேஷன் அண்ட் ஃபிலிம் டிசைன், ஃபிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன் ஆகிய இளநிலை டிசைனிங் படிப்புகளை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் (http://www.nid.edu/index.html) நிறுவனத்தின் அகமதாபாத், பெங்களூரு மையங்கள் வழங்குகின்றன.
சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கலைத் துறைக்கான படைப்பு, தொழில்நுட்பங்களுக்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்குகிறது.
ஒளிப்படக் கலையில் விருப்பமுள்ளவர்களுக்கு பி.எஃப்.ஏ. (BFA) ஃபோட்டோகிராஃபி படிப்பை ஒஸ்மானியா, பெங்களூரு சி.எம்.ஆர் ஆகிய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. புவனேஸ்வர் கே.ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் (http://film.kiit.ac.in/index.html) BFTP பட்டம் வழங்குகிறது.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?