ஒரே ஒரு கிராமத்திலே…
தர்பூசணித் தோட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனம்
ப
ருவநிலை மாற்றம்தான் இன்றைக்கு விவசாயத்தைப் பாதிக்கும் மிக முக்கியப் பிரச்சினை. ஆனால், பருவநிலை மாற்றம் ஏற்படக் காரணமே அதிக அளவு மீத்தேன் எனும் பசுமை இல்ல வாயுவை வெளியேற்றச் செய்யும் விவசாயம்தான் என்று தொடர்ந்து, மூன்றாம் உலக நாடுகள் மீது வல்லரசு நாடுகள் குற்றம் சுமத்திவருகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாம்பட்டு எனும் கிராமத்தைத் தத்தெடுத்து, அதை ‘பருவநிலை மாற்ற பாதிப்புகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட கிராமமாக’ (கிளைமேட் ஸ்மார்ட் வில்லேஜ்) மாற்ற முன் வந்துள்ளது ‘தேசிய வேளாண்மை அறக்கட்டளை’ (நேஷனல் அக்ரோ ஃபவுண்டேஷன்) எனும் அமைப்பு.
விவசாயம், விவசாயிகளுக்காக…
முன்னாள் மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர்களில் ஒருவர் சி.சுப்பிரமணியம். இவர், உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர், பசுமைப் புரட்சியின் காரணகர்த்தாக்களில் ஒருவர்.
60-களில் பசுமைப் புரட்சி கொண்டு வரப்பட்டபோது, பட்டினியால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதே அன்றைய அரசுக்கு முக்கியக் குறிக்கோளாக இருந்தது. எனவே அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் சில பத்தாண்டுகளுக்கு, நாட்டில் உணவு உற்பத்தி கூடியது.
90-களில், பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட விளைவுகளை சுப்பிரமணியம் ஆராய்ந்தார். பசுமைப் புரட்சி காலகட்டத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றால் நிலமும், நீரும் மாசடைந்து விளைச்சல் குறைந்திருப்பதை அறிந்தார் அவர். மண் வளத்தைப் பற்றி நெடுங்காலமாக நமது நாடு கவனத்தில் கொள்ளவில்லை என்பதில் அவருக்கு ஆழ்ந்த வருத்தம் இருந்தது.
இந்த நிலையை மாற்றுவதற்கு நாட்டில் ‘இரண்டாவது பசுமைப் புரட்சி’ உருவாக வேண்டும் என்று நினைத்தார். அதன் பலனாக, புத்தாயிரத்தில் தனது 90-வது பிறந்தநாளில், ‘தேசிய வேளாண்மை அறக்கட்டளை’யைத் தொடங்கினார் சுப்பிரமணியம்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள…
பருவம் தப்பிப் பெய்கிற மழையும், மழையே பெய்யாமல் வறட்சியால் வாடுவதும் என, இனி வரும் காலம் எல்லாம் விவசாயத்துக்கு மாபெரும் சவால்கள் காத்திருக்கின்றன. விவசாயம் பார்ப்பதே பெரிய சாதனை என்று சொல்லும் நிலைகூட வந்தால், அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
இந்நிலையில், விவசாயிகளை அத்தகைய சவால்களைச் சந்திப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களைத் தயார்படுத்துவது இந்த அறக்கட்டளையின் நோக்கங்களுள் ஒன்றாக உள்ளது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘கிளைமேட் ஸ்மார்ட் வில்லேஜ்’ எனும் திட்டம்.
“இந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி, இந்த அறக்கட்டளையின் நிறுவனர் சி.சுப்பிரமணியத்தின் 17-வது நினைவு தினத்தின்போது, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ‘கார்பன் ஸீக்குவெஸ்ட்ரேஷன்’ எனப்படும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துதல், இயற்கை உரம், சூரிய எரிசக்தி மின்சாரம், காடு வளர்ப்பு மற்றும் வானிலைத் தகவல் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது ஆகிய ஐந்து விஷயங்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பி.என்.ஒய் மெல்லன், ஐநாட்டிக்ஸ் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்கிறார் இந்த அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்.ராமசுப்பிரமணியன்.
களைகளைக் கட்டுப்படுத்த அசோலா
மரங்கள், கரியமில வாயுவை உள்ளே எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன என்பது அடிப்படை அறிவியல். அதனால், நாவல், மாம்பழம் போன்ற பழ வகை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதன் மூலம் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த முடியும். சரி ஏன் பழ வகை மரங்கள்? காரணம், அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்களைச் சந்தைப்படுத்துவதன் மூலம், விவசாயிகளுக்கு உபரி வருமானமும் கிடைக்கும். இதனால், வறட்சி, வெள்ளம் போன்ற காலங்களில் விவசாயத்திலிருந்து லாபம் கிடைக்காவிட்டாலும், பழ விற்பனை மூலம் ஓரளவு பொருளாதார இழப்பைச் சரிகட்ட முடியும்.
அதேபோல, கால்நடைகளுக்கு அசோலா எனும் தீவனம் வழங்கப்படுகிறது. இதை உண்ணும் பசுக்கள் அதிக அளவில் பால் தரும். மேலும், இதை வயல்வெளியில் களைக்கொல்லியாகவும் பயன்படுத்த முடியும். தவிர, இந்தக் கிராமத்தில் பல விவசாயிகள், தக்கைப்பூண்டு விதையை விதைத்து, அது வளர்ந்த பிறகு, அதை மடக்கி நிலத்தை உழுகிறார்கள். இதனால், நிலம் இயற்கையான முறையில் தனக்கான சத்தைப் பெற்றுக்கொள்கிறது. தனியே உரம் போட அவசியமில்லை.
மாறி வரும் பருவநிலையால், ‘இன்றைக்கு மழை பெய்யுமா? மருந்து தெளிக்கலாமா? இன்று வெயில் இருக்குமா? காற்று எந்தப் பக்கம் வீசும்?’ என்று ஒவ்வொரு நாளும் பல விவசாயிகள் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். பல நேரம் தவறான முடிவெடுத்து, அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். இதைத் தடுப்பதற்காக, வானிலைத் தகவலின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
“இதற்காக, கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் கைப்பேசி எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை, எங்களின் வானிலைத் தகவல் மையத்துடன் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளின் வானிலைத் தகவல், அவர்களுக்குக் குறுஞ்செய்தியாகச் செல்லும்படி இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கிறோம்” என்கிறார் ராமசுப்பிரமணியன்.
“இவை எல்லாவற்றையும் விட, சொட்டு நீர்ப் பாசனத்தைப் பின்பற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறோம். காரணம், இதில் பயன்படுத்தப்படும் நீர், மிகச் சரியாக ஒரு பயிரின் வேர் வரைக்கும் செல்கிறது. இதனால் நீர் வீணாகாமல் தடுக்கப்படுவதுடன், பயிர்களும் வளமாக இருக்கும்” என்கிறார் அவர்.
Comments
Post a Comment