தினமும் திருப்பாவை பாடுவோம்!
திருப்பாவை - 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்கமுரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல் வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே! கொடியே! விதானமே
ஆலினைலையாய்! அருளோலோரெம்பாவாய்!
அதாவது, திருமாலே. மால்மாயம் செய்பவனே. அதாவது மாமாயனாயிருந்து அனைத்தையும் அறிந்தவனே. நவரத்தினங்களில் நீலம் சிறப்புமிக்க கல். அவ்வாறான நீலரத்தினம் போன்ற வண்ணத்தை உடையவனே! ’நீலமேக ஸ்யாமளன்’ என கண்ணனுக்கு பெயர் உண்டு.
மார்கழி மாதத்தில் விடியற்காலை நீராடி, நோன்பு நோற்பது என்பது முன்னோர் காலத்தில் இருந்து நடைபெறும் வழக்கமல்லவா! எனவே, முன்னோர் செய்தவற்றை நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அவ்வாறு நோன்பு இருந்து வேண்டிக் கேட்பது யாதெனில், உலகத்தையெல்லாம் நடுங்கும்படியாக ஒலியெழுப்பக் கூடிய உனது பாஞ்சசன்யம் எனும் சங்கம் வேண்டும். எப்படி ருக்மிணிதேவியின் திருமணத்தன்று, நீ வருவதை தொலைவில் இருந்தே தெரிவிக்க, உனது பாஞ்சசன்யத்தால் சங்கநாதம் எழுப்பி, உன் வருகையைத் தெரிவித்தாயோ, அதன் பொருட்டு, அவளது உயிரைக் காப்பாற்றினாயோ, அதேபோல் நோன் பு நோற்பார் யாருமில்லையா? என ஏங்கும் உனது அடியார்களை கூவி அழைக்க., உனது பாஞ்சசன்யம் வேண்டும்.
டமாரம் போன்று பேரோசை எழுப்பும் உனது பறை எனும் வாத்தியம் வேண்டும்.. கூடி நின்று இசை முழக்க பல்லாண்டு இசைப்போர் வேண்டும். ஆயர்குடியின் விளக்காகத் தோன்றியவனே. விடியற்காலை நேரடியான இந்தத் தருணத்தில், நோன்பு நோற்கிறோம் நாங்கள். உன் திருமுகம் காண ஒளிவிளக்கு வேண்டும்!
நாங்கள் இங்கே ஒன்று கூடி, நோன்பு நோற்பதை தொலைவில் இருந்து வருபவர்கள், அறிந்து கொள்ள காற்றில் அசைந்தாடும் கொடிகள் வேண்டும். தலை மீது பனி பெய்யாது, தடுக்கின்ற விதானம் வேண்டும். இவற்றையெல்லாம் நீ தந்துவிட்டால், எங்கள் நோன்பை நீ ஏற்றுக் கொண்டாய் என அறிகிறோம்.
ஈரடியால் உலகத்தை அளந்த திரிவிக்கிரமனே! உனது உடலைச் சுருக்கி பிரளயக் காலத்தில் ஒரு சிறு ஆலிலையில் அதனினும் சிறிய குழந்தையாக படுத்துக் கொண்டு, உலகம் அனைத்தையும் உனது சிறுவயிற்றில் அடக்கியவனே! எங்களுக்கு உனது அருளைப் புரிவாயாக! என்று ஆண்டாள் தமது 26வது பாசுரத்தில் மனமுருக வேண்டிக் கொள்கிறார்.
இறைவனுக்கே பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். ஆண்டாள், அவரின் குமாரத்தி அல்லவா. அதனால்தான், இறைவனுக்கு பல்லாண்டு இசைப்பவர்களுடன் கூடியிருந்து, நோன்பு நோற்கிறோம் என்று தெரிவிக்கிறாள் ஆண்டாள்!
இந்தப் பாடலை மனமுருக, மெய்யுருகப் பாடுங்கள். கண்ண பரமாத்மா, மனம் மகிழ்ந்து நமக்கு அருள்பாலிப்பார்! கல்யாணம் முதலான சகல சம்பத்துகளையும் வழங்கி அருள்வார்!
Comments
Post a Comment