வெற்றி நூலகம்: கனவுப் பணிவாழ்க்கையைக் கண்டுபிடிக்கலாம்!
“நீங்கள் நேசிக்கும் பணியைத் தேர்ந்தெடுங்கள். அதற்குப் பிறகு ஒருநாளும் நீங்கள் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்காது” என்பது பணிவாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிரபலமான மேற்கோள். இன்றைய 21-ம் நூற்றாண்டு இளைஞர்கள் சந்திக்கும் சவால்களில் ஒன்று ‘பணிவாழ்க்கைத் தேர்வு’. இந்தச் சவாலை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது ‘The Ultimate Guide to 21st Century Careers’ புத்தகம். இந்த நூலின் ஆசிரியர் ரிச்சா திவிவேதி, பணிவாழ்க்கை ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்.
எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு முடித்தவுடனே தங்கள் பணிவாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கப்போகும் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனால், தற்போதைய போட்டி உலகத்தில் வெற்றிவாய்ப்புகளை வழங்கக்கூடிய பணிவாழ்க்கைக்கான துறைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய துறைகளை அறிமுகப்படுத்தும் பணியை இந்தப் புத்தகம் எளிமையான முறையில் செய்கிறது.
இந்தப் புத்தகம் 31 துறைகளைப் பற்றி விளக்குகிறது. புதிய கருத்தாக்கங்களை உருவாக்குபவர்கள் விளம்பரம், திரைப்படம், தொழில்முனைவு போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். புதிதாகப் படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்குக் கலை, எழுத்து, ஒளிப்படக் கலை, நடிப்பு, இசை, நடனம், கட்டிடக் கலை போன்ற துறைகள் ஏற்றவையாக இருக்கும். அழகான விஷயங்களை உருவாக்க நினைப்பவர்கள் வடிவமைப்பு, அனிமேஷன்-கேமிங் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு விற்பனை - சந்தைப்படுத்துதல், கல்வித் துறை ஆகியவை சரியான தேர்வாக இருக்கும். இப்படி மாணவர்களுக்கு எந்தெந்த விஷயங்களின் மீது ஆர்வமிருக்கிறதோ அவை தொடர்பாக எந்தெந்த துறைகள் இருக்கின்றன என்பதை இந்தப் புத்தகம் பட்டியலிடுகிறது.
எங்கே படிக்கலாம், எவ்வளவு சம்பளம்?
இந்தப் புத்தகத்தில் துறை அறிமுகத்தைத் தாண்டி, அந்தத் துறைகளைக் கொண்டு சிறப்பான முறையில் கல்வி அளிக்கும் இந்தியக் கல்லூரிகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன், அந்தக் குறிப்பிட்ட துறையில் எந்த மாதிரியான வேலைகள் இருக்கின்றன, சாதிப்பதற்கு எந்த மாதிரியான திறன்கள் தேவை போன்ற விஷயங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஊதிய விவரங்களும் இதில் உண்டு. துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துகளும் எளிமையாக விளக்கப்பட்டிருக்கின்றன.
நமக்கான கனவுப் பணிவாழ்க்கையைச் சரியாகத் தேர்ந்தெடுக்கும்போது, அது வாழ்க்கையின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை இந்தப் புத்தகம் விளக்கியிருக்கிறது.
Comments
Post a Comment