வேலை வேண்டுமா? - கனரா வங்கி அதிகாரி ஆகலாம்
கனரா வங்கி 450 அதிகாரிகளை (Probationary Officer) நேரடி நியமனம் செய்யவிருக்கிறது. தகுதி உடையவர்கள் முதல்கட்டமாக வங்கி, நிதி தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்புக்கு (Post Graduate Diploma in Banking and Finance) தேர்வுசெய்யப்படுவார்கள். 9 மாதங்கள் கொண்ட இந்தப் படிப்பைப் பெங்களூரு மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் கல்வி நிறுவனத்தில் அல்லது மங்களூரு என்.ஐ.டி.டி.இ. எஜுகேஷன் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் படிக்க வேண்டும்.
கல்விக் கடனுடன் பயிற்சி
பயிற்சிக் கட்டணம் தோராயமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.4.13 லட்சம் வரை இருக்கும். இந்தக் கட்டணத்தை இரண்டு தவணைகளில் செலுத்தலாம். இல்லாவிட்டால் கனரா வங்கியில் கல்விக் கடன் பெறலாம். 9 மாதப் படிப்பை முடித்ததும் 3 மாதம் கனரா வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் பணியிடைப் பயிற்சி (Internship) பெற வேண்டும். அதன் பிறகு வங்கி அதிகாரியாகப் பணியமர்த்தப்படுவார்கள்.
படித்து முடித்ததும் உடனடியாக வங்கி அதிகாரி வேலை தரக்கூடிய இந்த முதுகலை டிப்ளமா படிப்பில் சேர ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதிபடைத்தவர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
தேர்வுமுறை
எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இத்தேர்வில் ரீசனிங், அடிப்படைக் கணிதம், ஆங்கிலம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 200. தேர்வு நேரம் 2 மணி நேரம். எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்ததும் 5-ம் ஆண்டு முதல் கல்விக் கட்டணமானது சிறப்பு போனஸ் என்ற வகையில் திரும்பிக் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடைய பட்டதாரிகள் கனரா வங்கியின் இணையதளத்தைப் (www.canarabank.com) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வங்கியின் இணையதளத்தில் பிப்ரவரி 20-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணபிக்கக் கடைசி நாள்
2018 ஜனவரி 31
எழுத்துத் தேர்வு
2018 மார்ச் 4
Comments
Post a Comment