திங்களன்று இரவு மட்டும்... பொங்கலன்று பகலிலும்..! பரக்கலகோட்டை சிவன் கோயில் அற்புதம்!
கோயில் என்றால், தினமும் காலையில் நடை திறப்பார்கள். பிறகு உச்சிகால பூஜைக்குப் பிறகு மதியம் 12 முதல் 1 மணிக்குள் நடை சார்த்துவார்கள். அதையடுத்து, மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8 முதல் 9 மணிக்குள் நடை சார்த்துவார்கள். கோயில்களில், நடை திறக்கும் முறையும் சார்த்தப்படும் நேரமும் இப்படித்தானே!
ஆனால், திங்கட்கிழமை தோறும் இரவு பத்து மணிக்கு மேல் நடை திறக்கும் கோயிலைத் தெரியுமா உங்களுக்கு? அதாவது வாரத்தில், திங்கட்கிழமை மட்டும் நடை திறக்கப்படும். அதுவும் இரவில் மட்டும் நடை திறந்திருக்கும். வருடத்தில் ஒரேயொரு நாள், பகலிலும் திறந்திருக்கும். அதுவும் எந்த நாளில் தெரியுமா? பொங்கல் பண்டிகை நன்னாளில்தான்!
அந்தக் கோயில் எது? முன்னதாக அந்தச் சம்பவத்தைப் பார்த்துவிடுவோமா?
‘‘திருச்சிற்றம்பலத்தில் இந்நேரம் அர்த்தஜாம பூஜை துவங்கியிருக்கும்!’’ பொய்கைநல்லூரின் வனப்பகுதியில், வெள்ளால மரத்துக்கு அருகில் அமர்ந்தபடி ஸ்ரீவான்கோபர் கேட்க, ‘‘ஆமாம்... அனைத்துக் கோயில்களில் உள்ள சிவபெருமான் யாவரும் தில்லையம்பதிக்கு இந்நேரம் வந்திருப்பார்கள். சற்று நேரத்தில் திரை விலக்கி, தீபாராதனை காட்டுவார்கள். ஆடல்வல்லானின் அற்புத தரிசனத்தில் பக்தர்கள் சிலிர்த்துவிடுவார்கள்’’ என்று பரவசத்துடன் சொன்னார் ஸ்ரீமகாகோபர்!
அந்தப் பேச்சுக்கு நடுவே வந்த பேச்சு, முக்கியத்துவம் பெற்றது. அதுவே முதன்மையானதாகிப் போனது. ‘இறைவனை அடைவதற்கு சிறந்த வழி இல்லறமா... துறவறமா?’ என்று இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட... இந்திரனிடம் சென்று விளக்கம் கேட்டனர். ‘முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது’ என்று பதறிய இந்திரன், ‘’தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள். பதில் கிடைக்கும்‘’ என்றான்.
அதன்படி முனிவர்கள், சிதம்பரத்துக்குச் சென்று, ஈசனைப் பணிந்தனர். சந்தேகத்தைச் சொல்லி விளக்கம் கேட்டு வேண்டினர். ‘’நீங்கள் தவம் செய்யும் இடத்தில் வெள்ளால மரம் உள்ளது. அதற்கு அருகில், உறங்கு புளி, உறங்கா புளி என இரண்டு மரங்கள் இருக்கின்றன. அங்கே காத்திருங்கள். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வருகிறேன்’’ என்று அனுப்பிவைத்தார் தில்லையம்பலத்தான்!
இப்போது, ஆடல்வல்லானுக்காகக் காத்திருக்கின்றனர்.
தில்லையம்பதியில், அதாவது சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்தது. மெள்ள பக்தர்கள் வெளியேறினர். கோயில் நடை சாத்தப்பட்டது; மறு நிமிடம்... முனிவர்களுக்கு காட்சி தந்தார் நடராஜ ர். சிலிர்ப்பு பொங்க தில்லைக் கூத்தனை வணங்கினர், முனிவர்கள்.
‘’இல்லறமாக இருந்தாலென்ன, துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், நேர்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் அடைவது எளிது. இதில் உயர்வு தாழ்வு பேதமேதும் இல்லை.!’’ என்று அருளினார் ஈசன். .
இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்று அழைக்கப்பட்டார் சிவனார். இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு வழங்கியதால், அந்தத் தலத்தின் சிவபெருமானுக்கு, ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் திருநாமம் அமைந்தது!
‘‘தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்‘’ என்று முனிவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற ஈசன், ‘’அப்படியே ஆகட்டும்‘’ என்றார். அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். அந்தப் பகுதி பொய்கைநல்லூர் என அப்போது சொல்லப்பட்டு, இப்போது பரக்கலக்கோட்டை என அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கே... ஆலயத்தில் வெள்ளால மரமாகவே காட்சி தந்து அருள்பாலிக்கிறார் பொதுஆவுடையார்!
அதாவது,. மற்ற தலங்களில் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருக்கும் சிவனார், இங்கே மரமாகவே காட்சி தந்து வரம் அனைத்தும் தருகிறார்.
முனிவர் பெருமக்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் அதாவது திங்கட் கிழமை அன்று திருக்காட்சி தந்து உபதேசித்தார். எனவே வாரந்தோறும் திங்கட்கிழமை இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இன்னொரு விஷயம்... சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விமரிசையாக பூஜைகள் அமர்க்களப்படும்! அம்பாளுக்கு இங்கே சந்நிதி இல்லை.
திங்கள்தோறும் இரவில் திறக்கப்படும் ஆலயம், வருடத்தில் ஒரேயொரு நாள் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது; அப்போது அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அந்த நாளில்... லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர். அந்த நாள்... தைத் திருநாளாம் பொங்கல் நன்னாள்!
இவரை வேண்டிக் கொண்டு, ஸ்வீட் ஸ்டால், பேக்கரிக்கடை, துணிக் கடை,நகைக்கடை, என எந்த வியாபாரம் துவங்கினாலும் லாபம் நிச்சயம் என்று பூரிக்கிறார்கள் பக்தர்கள். இதில் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாக, சிவனாருக்கு நெல் தருகின்றனர். கம்பு தருகின்றனர். கேழ்வரகு தருகின்றனர். தானியங்கள் தருகின்றனர். தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் தேங்காயையும் மாந்தோப்பு வைத்திருப்பவர்கள் மாங்காயையும் தருகின்றனர். ஆடு, கோழி, மாடு என தருகின்றனர். பேனா, நோட்டுப் புத்தகம் தருகின்றனர். சிலர், விளக்குமாறு காணிக்கை கூட வழங்குகின்றனர்.
இவற்றையெல்லாம் பொங்கல் திருநாளின் போது ஏலத்துக்கு விடுவார்கள். இதை ஏலம் எடுத்துச் சென்றால், செல்வச் செழிப்புடன் திகழலாம். சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து திகழலாம் என்பது நம்பிக்கை!
ஸ்ரீவான்கோபர், ஸ்ரீமகாகோபர் ஆகிய இரண்டு முனிவர் களுக்கும், ஆலமரத்தின் ஒரு வகையான வெள்ளால மரத்தடியில் அமர்ந்தபடி, நடராஜ பெருமான் உபதேசித்து அருளினார். ஆகவே குரு தட்சிணாமூர்த்தியின் சொரூபமாகவே வழிபடுகின்றனர். இங்கு வந்து இறைவனை வழிபட, குருவருள் நிச்சயம் என்று போற்றுகின்றனர்!
ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. திறந்ததும் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். அதாவது வாராவாரம் திங்கட்கிழமை மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர்.
வெள்ளால மரத்தினுள், ஸ்ரீநடராஜபெருமான் ஐக்கிய மானதாகச் சொல்கிறது தல புராணம். கருவறையில் காலூன்றி, பரந்து விரிந்து கிளை பரப்பி நிற்கும் வெள்ளால மரம்தான், இங்கே ஸ்தல விருட்சம்!
இந்த மரத்தின் ஒரேயொரு இலையை பறித்துச் சென்று, வீட்டு பூஜையறை, பீரோ, பணப் பெட்டி, தானிய அறை ஆகியவற்றில் வைத்து வழிபட்டால்... வளமான வாழ்வு பெறலாம்; மங்காத நிம்மதி வீட்டில் தங்கி, லக்ஷ்மி கடாட்சம் திகழ வாழலாம் என்று பெருமிதம் பொங்கச் சொல்கின்றனர். பக்தர்கள்!
Comments
Post a Comment