ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி! பூஜித்து வழிபடுவது இப்படித்தான்..!


சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
சூரிய பகவானைப் போற்றி வணங்கும் ரத சப்தமி வரும் 24.1.18 அன்று புதன் கிழமை கொண்டாடப்படுகிறது.
ரத சப்தமி நாளில், சூரிய உதயத்தின் போது விரதத்தை மேற்கொள்ளவேண்டும். வீட்டில் அல்லது நதிக்கரைகளில் சுத்தமான இடத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள், அங்கே சூரிய ரதத்தை கோலமாக வரைந்து கொள்ளுங்கள். அந்த ரதத்தில் சூரிய சந்திரர்கள் அமர்ந்து பவனி வருவதாக பாவித்துக் கொள்ளவேண்டும்..
அடுத்து, சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, செந்நிற மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள். பிறகு அந்த மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். அப்போது, ஆதித்ய ஹ்ருதயம் முதலான ஸ்லோகங்கள் படிப்பது கூடுதல் பலன்களைத் தரும். அதாவது ரத சப்தமி நாளில், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து, சூரியனாரை வணங்கினால், ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகும். ஏழு தலைமுறை சந்ததியினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
சூரியன் தொடர்பான ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை முதலானவற்றை நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். கோதுமை கலந்த உணவு மற்றும் அன்னம் ஆகியவற்றை பசுவுக்கு வழங்குவது, சந்ததிக்கு பலம் சேர்க்கும்! வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்!
ரத சப்தமி நன்னாளில் துவங்குகிற தொழில் மற்றும் பணிகள் எதுவாயினும் தடையின்றி நடந்தேறும். லாபம் சிறந்து விளங்கும். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!
முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம். ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்கிறார்கள்.
ரத சப்தமி நன்னாள். சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.


Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?