வேலை வேண்டுமா? - இந்தியன் ஆயில் நிறுவனப் பணி
மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென்பிராந்திய அலுவலகங்களில் விற்பனை பிரிவில் ஜுனியர் ஆபரேட்டர் (கிரேடு-1 மற்றும் ஏவியேஷன்) பதவியில் 97 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. கிரேடு-1 பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி.-க்குப் பிறகு 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சியை (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்) முடித்திருக்க வேண்டும். ஓராண்டு கால பணிஅனுபவமும் அவசியம்.
தகுதியும் தேர்வுமுறையும்
அதேபோல், ஏவியேஷன் பிரிவு ஜுனியர் ஆபரேட்டர் பதவிக்கு பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓராண்டு கனரக வாகனத்தை ஓட்டிய அனுபவமும் தேவை. இரு வகை பதவிகளுக்கும் வயது வரம்பு 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (Skill Test) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். ஜுனியர் ஆபரேட்டர் பணிக்கான தேர்வில், சம்பந்தப்பட்ட தொழில்பிரிவு பாடம், பொது அறிவு, அடிப்படை கணிதம், ரீசனிங், அடிப்படை ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 100 கேள்விகள் இடம்பெறும். அதேபோல், ஏவியேஷன் பணிக்கான தேர்வில் தொழில் பிரிவு பாடம் தவிர்த்து எஞ்சிய பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
தகுதியுடையோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தை (www.iocl.com) பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தென்பிராந்திய தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுமுறை, சம்பளம் உள்ளிட்ட மற்ற விவரங்களை அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
முக்கியத் தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7
விண்ணப்பத்தை அலுவலகத்துக்கு அனுப்ப கடைசி தேதி: பிப்ரவரி 16
எழுத்துத் தேர்வு: பிப்ரவரி 25
Comments
Post a Comment