தினமும் திருப்பாவை பாடுவோம்!
திருப்பாவை - 23
மாரி மழை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந் துதறி
மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரிய மாராய்ந்து அருளேளோ ரெம்பாவாய்!
அதாவது, கார்காலம் எனப்படும் மழைக்காலம் முடிந்துவிட்டதை அறிந்த சிங்கம் (அதாவது மழைக்காலத்தில் சிங்கம் தனது குகையிலேயே அடைந்து கிடக்குமாம்), தான் எழுந்திருக்க வேண்டும் என நினைத்த மாத்திரத்தில், கண்களில் தீஜ்வாலை தெறிப்பதைப் போல், தீ விழி விழித்து பிடரி மலர் சிலிர்த்து நிற்க, உடம்பை முறுக்கி நிமிர்ந்துவிட்டு, ஒரு கர்ஜனை செய்து கம்பீரமாக வெளியே வருமாம்!
அதேபோல் எங்களுக்கு அருளவேண்டிய நேரம் வந்துவிட்டதை எண்ணி நீயும் உன் விழிகள் மலர, பரிமளம் வீசும் உன் மேனியில் புரளும் மாலைகளையும் உதறி, உன் களைப்பைப் போக்க உடம்பை ஒரு முறை, முறித்து நிமிர்த்தி, நீயும் கனைத்துக் கொண்டு கம்பீரமாக நடந்து... இதோ வந்துவிட்டேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது போல் வரவேண்டும் என்கிறாள் ஆண்டாள்.
காயாம்பூவைப் போன்ற நிறம் படைத்தவனே! உன் கோயிலை விட்டு இங்கு வந்து, பரமபதத்திலே தர்மாதீபீடத்தில் அமர்ந்து பிரபஞ்சங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம்
ஆராய்ந்து செய்து வருவது போல், நாங்கள் வந்த காரியங்களை ஆராய்ந்து, அருள் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறாள் ஆண்டாள்.
பரமபதத்தில் ஒரு கட்டில் உள்ளது. தர்மம், அறிவு, வைராக்கியம், நியமை, அதர்மம், அஞ்ஞானம், அழிவு, அநாச்சார்யம் (தண்டனை) எனும் எட்டு தத்துவங்களை உணர்த்தும் எட்டுக்கால்களை உடைய கட்டில் பீடம். அதற்கு தர்மாதீபீடம் என்று பெயர்.
ஸ்ரீபகவான் தர்மாதீபீடத்தில் அமர்ந்துதான், அனைத்து பிரபஞ்சங்களுக்கும் தேவையானவற்றை ஆராய்ந்து அருள்பாலித்துக் கொண்டிருப்பார்.
பக்த பிரகலாதனுக்காக அவனுடைய வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டும் என தூணிலும் துரும்பிலும் நிறைந்திருந்த ஸ்ரீமகாவிஷ்ணு, ஹிரண்யகசிபு ஒரு தூணைக்காட்டி இங்கு உள்ளானா நாராயணன், என்று கேட்டு, அதை உதைத்ததுடன் உடனே நரசிம்மமாக அவதாரம் எடுத்து பிரகலாதனுக்கு அருள்பாலித்தார் ஸ்ரீநரசிம்மர்.
எனவேதான், ஆண்டாள் தம்மை சரணாகதி அடைந்தோருக்கு சிம்மத்தின் வேகத்தில் வந்து அருள்புரிவான் என உணர்த்துவதற்காக, சிம்மத்தின் நடையை இதில் மறைமுகமாக வைத்துள்ளார்.
மேலும், இந்தப் பாடலை தினந்தோறும் பாடி வருவோருக்கு அவர்களின் கோரிக்கைகளை அதாவது நேர்மையான, நியாயமான கோரிக்கைகளை, பகவான் ஆராய்ந்து அருள் செய்வார் என்பது உறுதி. கேட்பவர்களுக்கு நன்மை யாதென்று தெரியாது. அதை அளிக்கும் பகவானுக்கு மட்டும் ... தாய் தன் குழந்தைகளுக்கு நன்மை பயப்பதையே அளிப்பது போல், நன்மையே அருள்வார் என்பதை சூசகமாகவும் நயமாகவும் சொல்லி உணர்த்திப் பாடுகிறாள் ஆண்டாள்!
Comments
Post a Comment