சந்திர கிரகணம்... மறக்காதீங்க! தோஷம் போக்கும் கிரகண தர்ப்பணம்!
தைப்பூச நாளான 31.1.18 புதன் கிழமை அன்று சந்திர கிரகணம். எனவே மறக்காமல், கிரகண தர்ப்பணம் செய்வதும் இறை வழிபாடு செய்து பூஜிப்பதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும். தோஷங்களைப் போக்கி, மனத்தெளிவைத் தந்தருளும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
தைப்பூசத் திருநாள், வரும் 31.1.18 அன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் விசேஷ தரிசனங்களும் அமர்க்களப்படும். இந்த நாளில், முருகப்பெருமானைத் தரிசித்துப் பலன்களைப் பெறுவதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயிலுக்கு வந்து வழிபடுவார்கள்.
பழநியம்பதி என்று போற்றப்படும் பழநி கோயிலில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிவார்கள். மலையளவு மக்கள் கூடியிருந்து தரிசிப்பார்கள். செட்டிநாடு உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள், பாதயாத்திரையாக வந்து பழநி முருகனைத் தரிசிப்பார்கள்.
மேலும் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியபடியும் அலகு குத்திக் கொண்டும் வந்து வழிபடுவார்கள் பக்தர்கள். ஏராளமான பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தியும் சேவல்களை ஆலயங்களுக்கு வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
அதேபோல், நெய்வேலி அருகில் உள்ள வடலூர் வள்ளலார் கோயிலில், தைப்பூச விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பயிர்களும் உயிர்களே என்று அனைத்து உயிர்களிடம் அன்பு பாராட்டிய, அன்பைப் போதித்த வள்ளலார் பெருமான் ஜோதியில் ஜோதியாகக் கலந்த நன்னாள், இந்த தைப்பூசத் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், வடலூர் வள்ளலார் கோயிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை என்று கோஷங்கள் முழங்க, வள்ளலாரை வணங்குவார்கள். வருவோருக்கெல்லாம் அன்னதானம் தடையின்றி நடந்து கொண்டே இருக்கும்.
31ம் தேதி புதன்கிழமை, தைப்பூச நன்னாள் வேளையில், இன்னொரு விஷயமும் நடைபெறுகிறது. இந்த நாளில்தான் சந்திர கிரகணம் நிகழ்கிறது என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
31ம் தேதி புதன் கிழமை, மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரை சந்திர கிரகணம் பிடிக்கிறது. எனவே இந்த சமயத்தில் வெளியில் வருவதைத் தவிர்ப்பது தேக ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
இன்னொரு விஷயம்... சந்திரனை மனோகாரகன் என்பார்கள். அதாவது, நம் மனதை ஆட்டிவைப்பவன் சந்திர பகவான். நாம் நல்லது நினைத்தாலும் அது சந்திர பகவானால்தான். அதேபோல் தீய சிந்தனைகளுடன் இருந்தாலும் அதற்குக் காரணம் சந்திரனே என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதனால்தான் சந்திரனை, மனோகாரகன், மனதுக்கு அதிபதியாகத் திகழ்பவன் என்றெல்லாம் சொல்லிவைத்திருக்கிறார்கள்.
சந்திர கிரகண வேளையில், அதன் ஆதிக்கம் இன்னும் விஸ்தரித்திருக்கும். இன்னும் இன்னுமாக வியாபித்திருக்கும். அந்த வேளையில், சந்திரனின் ஒளியானது நம் மீது படாமல் இருப்பதும் நாம் சந்திரனைப் பார்க்காமல் இருப்பதும் மிகவும் உத்தமம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும் சந்திர கிரகண வேளையில், அதாவது மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரையிலான அந்த வேளையில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். வழக்கமாக, நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது, ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் தந்தருளக் கூடியது என்கிறார் பாலாஜி வாத்தியார்.
இந்த சந்திர கிரகண வேளையில், இறை பக்தியுடன் இருப்பது உத்தமம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பாராயணம் செய்து ஜபிக்கலாம். கிரகண நேரம் முடிந்ததும் குளித்துவிட்டு, பூஜித்த பிறகு சாப்பிடவேண்டும்.
குறிப்பாக, கிரகண வேளையின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தந்தருளும் என்கிறது சாஸ்திரம். மேலும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும். இதனை கிரகணத் தர்ப்பணம் என்றே தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கிரகண வேளையில், ஆலயங்களும் நடை சார்த்தப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் ஆலயம் திறக்கப்பட்டு, பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் செய்யப்படும். கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட கையுடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அர்ச்சித்து வழிபடுவது, இன்னும் வளம் சேர்க்கும். பலம் கூட்டும். மனவலிமை தரும். மங்கல காரியங்களைத் தடையின்றி நடத்தித் தந்தருளும் என்கிறார் பாலாஜி வாத்தியார்.
Comments
Post a Comment