உணவே இயற்கை மருந்து!
இ
ன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவுக்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதனால் பல நோய்களுக்கு ஆளாகிறோம். நாம் ஏன் நோய் பாதிப்பில் சிக்கிக்கொள்கிறோம்?
இதற்கான விடை தெரிந்துவிட்டால் நோயற்ற, நலமான வாழ்க்கையை வாழ முடியும். அந்த விடை, மிகவும் எளிமையானது. எதை, எப்போது உண்ண வேண்டும் என்பது தெரிந்துவிட்டால் போதும்!
எதையும் கால, நேரம் பார்த்துச் செய்ய வேண்டும் என்பார்கள். அது சுப, துக்க நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல, உண்ணும் உணவுக்கும்தான். இதைக் கடைப்பிடிக்காததன் விளைவே, நோய் நம்மைப் பின்தொடர்கிறது.
“பித்தம், வாயு, கபம் ஆகிய மூன்றில் இருந்துதான், உடல் ஆரோக்கியக் குறைபாடே ஆரம்பமாகிறது. உணவு உண்பதற்கும் நேரம், காலம் உண்டு. காலை 6 முதல் பகல் 12 மணிவரை உடலில் 3 மடங்கு அமிலம் உற்பத்தியாகும் என்பதால், பித்தத்துக்கான சாத்தியம் அதிகம். இந்த நேரத்தில் புளித்த மாவால் தயாரிக்கப்படும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார், ஜிதேந்திரா. கோவையில், இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்துவரும் இவர், சரியான நேரத்தில் சரியானபடி உணவை எடுத்துக்கொண்டால், பல உடல்நல பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும் என்கிறார்.
“பகல் 12 முதல் மாலை 6 மணிவரை வாயு உருவாகும் நேரம். இந்த நேரத்தில் கிழங்கு, பருப்பு, பயறு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மாலை 6 முதல் காலை 6 மணிவரை (சூரியன் மறைந்த பிறகு) கபம் உருவாகும் நேரம். சூரியக் கதிர்கள் இல்லாததால் பாக்டீரியா எளிதில் நம் உணவில் தஞ்சமடையும். இந்த நேரத்தில் உணவைச் சூடாக உண்ண வேண்டும்” என்கிறார்.
இயற்கையான உணவே சிறந்த மருந்து எனக் கூறும் அவர், இயற்கை மருத்துவத்தில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்:
மாற்றம் தந்த மாற்று
“கோவையில் வணிகக் குடும்பத்தில் பிறந்தேன். திருமணமாகி வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் எனக்கு ‘ஹைப்பர் தைராய்டு’ நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சையில் இருந்தேன். இருந்தாலும் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமானது. ஒரு நாளில் ஒரு கிலோ என ஒரு மாதத்தில் 28 கிலோ எடை குறைந்தேன். ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அளவுக்கு அதிகமான மருந்து, அதனால் ஏற்பட்ட பக்கவிளைவால் மனமும் உடலும் தளர்ந்து போனேன். அன்றோடு அலோபதி மருத்துவத்தைக் கைவிட்டேன்.
இந்த நோயிலிருந்து விடுபட என்னை நானே ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டேன். ஆரம்பத்தில் மருத்துவம், மனித உடற்கூறியல் தொடர்பாகப் படிக்க ஆர்வமிருந்தது. அதன் அடுத்த கட்டமாக, நோய் பாதிப்புகளுக்கு இயற்கையாகவே மருத்துவம் பார்ப்பது தொடர்பாகப் படிக்கவும் ஆராய்ச்சில் ஈடுபடவும் முடிவுசெய்தேன். ‘ஆல்டர்நேட்டிவ் மெடிசின்’ எனும் மாற்று மருத்துவ முறையைப் பின்பற்றத் தொடங்கினேன்.
கசப்பே மருந்து
பருப்புடன் சமைக்கப்பட்ட முருங்கைக்காய், முருங்கைக் கீரையை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டேன். உடலில் அமிலத்தின் அளவைக் குறைப்பதற்காக, புளித்த உணவு வகைகளைச் சேர்க்கமாட்டேன். நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்ட, முடிந்த அளவுக்கு கசப்பு உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்துக்கொண்டேன்.
இதன் மூலமாக உடல் நலனில் நல்ல மாற்றத்தை உணர்ந்தேன். தொடர் ஆராய்ச்சி மூலமாக 3 மாதங்களுக்குள் தைராய்டு நோய் பாதிப்பிலிருந்து முழுவதும் மீண்டுவந்தேன். மருத்துவ அறிவியலில் அறுவைசிகிச்சை செய்யாமல், முழு பலன் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வெற்றிதான் இயற்கை மருத்துவராக மாற ஊன்றுகோலாக இருந்தது.
அப்போதிலிருந்து, இயற்கை மருத்துவம் மூலமாக மக்களிடம் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்து, ஆராய்ச்சி சூத்திரம், வீட்டு வைத்திய முறைகளைக் கொண்டு, சொந்தமாக 1993-ம் ஆண்டு முதல் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்துவருகிறேன். இந்தத் துறையில் இருந்த அனுபவத்தால் மாற்று மருத்துவ முறை ஆணையத்தின் மூலமாக, மருத்துவர் என்ற அங்கீகாரமும் கிடைத்தது. தற்போது பெரும்பாலான மக்களுக்கு இயற்கை மருத்துவம் மூலமாகத் தீர்வு அளித்துவருகிறேன்” என்கிறார் ஜிதேந்திரா.
உணவே மருந்து என்பது சரிதான். அந்த மருந்தை சரியான நேரத்தில் உட்கொள்வோம்!
Comments
Post a Comment