குரு - சிஷ்யன்: ஒரு மாணவனின் விஸ்வரூபம்!
ஓவியம்: வாசன்
எ
ங்கள் கல்லூரியில் அப்போது சுமார் 2,600 மாணவர்கள் படித்தனர். பழனியையொட்டி சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கும் சேர்ந்த ஒரே கல்லூரி அது. அரசின் இந்து அறநிலையத் துறையால் நடத்தப்பட்ட கல்லூரி என்பதால், கட்டணம் மிகக் குறைவு ( 2008-ம் ஆண்டிலிருந்து கல்விக் கட்டணம் கிடையாது). ஆனாலும், அதைக்கூட மாணவர்களால் கட்ட முடியாமல், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றவர்களும் உண்டு.
15 ஆண்டுகளுக்கு முன்பு, நான் விலங்கியல் துறைத்தலைவராகப் பொறுப்பேற்றேன். விலங்கியல் பாடத்தில் முதலாம் ஆண்டில் 25 மாணவர்கள் இருந்தனர். முதல் நாள் வகுப்பில் மாணவர்கள் வருகை முழுவதும் இருந்தால், அடுத்த நாள் அப்படியே பாதியாகக் குறைந்துவிடும். சில நாட்கள் காலை வகுப்பில் இருப்பார்கள்; மாலையில் இருக்க மாட்டார்கள்.
இதற்குக் காரணம் அறிய முற்பட்டேன். பாதி மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாகப் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டே படித்துவந்தனர். அவர்களது வாழ்வாதாரம் மோசமாக இருந்தது. திருமணம் அதிகம் நடக்கும் காலங்களில், மாணவர்கள் கல்லூரிக்கு வராமல், திருமணத்துக்கு சமையல் உதவி செய்ய, பந்தி பரிமாற சென்றுவிடுவார்கள். அன்றைக்கு நல்ல உணவும் வேலைக்கான சம்பளமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும். அதை அவர்கள் கல்லூரிச் செலவுக்கும் வீட்டுக்கும் கொடுத்துவந்தனர்.
இதுதான் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பொதுவான நிலை. ஆனாலும், என் வகுப்பில் மட்டும் மாணவர்கள் அனைவரும் இருப்பார்கள். மற்ற ஆசிரியர்கள் என்னைப் பார்த்து, “உங்க வகுப்புக்கு மட்டும் எல்லா ஸ்டூடண்ட்ஸும் வந்துடுறாங்க!” என்று அதிசயமாகக் கேட்பார்கள். வகுப்பில் வெறுமனே பாடத்தை மட்டும் நடத்த மாட்டேன். வகுப்பில் பாடம் தவிர, பல கதைகள், அறிவியல் தகவல்கள், அரசியல் செய்திகள் ஆகியவற்றைப் பேசுவது என் வழக்கம். என் வகுப்பில் மாணவர்கள் தயங்காமல் கேள்விகள் கேட்பார்கள்.
என் வகுப்பில் ரங்கசாமி, ராமச்சந்திரன், அசோக் போன்ற மாணவர்கள் தினமும் வரவே மாட்டார்கள். இதில், அசோக், ராமச்சந்திரனுக்கு அப்பா இல்லை. ரங்கசாமியை அவருடைய அப்பா, அம்மா, தங்கை மூவரும் வேலை பார்த்து படிக்கவைத்தனர். இவர்கள் மூவரும் படிக்கக்கூடிய மாணவர்கள். அதனால், அவர்களை மாலை நேரத்தில் கல்லூரிக்கோ வீட்டுக்கோ வரச்சொல்லி, நானும் சில பேராசியர்களும் சிறப்பு வகுப்புகளை எடுத்தோம். கிராமப்புற மாணவர்கள் என்பதால் ஆங்கிலமும் இலக்கணமும் சொல்லித் தந்தோம். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகளும் அளித்தோம்.
சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தாலும், நன்றாகப் படித்து, தன் குடும்ப வறுமையைப் போக்க வேண்டுமென்ற எண்ணம் ரங்கசாமியிடம் இருந்தது. வகுப்பில் சொல்வதை ஆர்வமாகக் கேட்பான். கேள்வி கேட்கத் தயங்கினால், “தயங்காமக் கேளு” என்பேன். சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வான். பாடங்களைக் கூர்ந்து கவனிப்பான். பாடம் சார்ந்து அவன் கேட்கும் கேள்விகள் யோசிக்கவைப்பதாக இருக்கும்.
“எங்களுக்கு ஆங்கிலம் வராது” என்று சொன்ன ரங்கசாமியும் கர்ணனும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்புக்காகச் சேர்ந்தார்கள். இதில், ரங்கசாமி அங்குள்ள பல்கலைக்கழக கேண்டீனில் வேலை செய்துகொண்டே படித்தான்.
அங்கே படிப்பை முடித்த பின்னர், அந்தமானில் இந்திய விலங்கியல் சர்வே நிறுவனத்தில் (Zoological Survey of India) பிஎச்.டி ஆய்வுக்காகச் சேர்ந்தான் ரங்கசாமி. கடந்த பத்தாண்டுகளாக யாரும் கண்டுபிடிக்காத அரிய நத்தைகள், பாலூட்டிகளைக் கண்டுபிடித்தான். 110 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நிகோபாரின் ஒரு பாலூட்டியைக் கண்டறிந்தான். பின்னர், கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் இந்திய வன சர்வே நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். ஓராண்டில் 5 மாநிலங்களைக் கணக்கெடுக்க வேண்டும்.
இந்தியாவின் வடக்கில் உள்ள காடுகளையும் 13 மாநில காடுகளையும் கணக்கெடுப்பதுதான் அவனது பணி. இப்போது ரங்கசாமி இந்தியாவின் வட கிழக்கு எல்லையில் நின்றுகொண்டிருப்பான். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ரங்கசாமி நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு பெரிய பொறுப்பில் வேலையில் இருக்கிறான் என்பதையே அவனது குடும்பத்தினர் இன்னும் நம்பவில்லை.
என்னிடம் படித்த பல நூறு மாணவர்கள் இன்றைக்குப் பல அரசு, தனியார் நிறுவன உயர்ந்த பதவிகளில் இருந்தாலும், நான் ரங்கசாமியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியக் காரணம் என்ன தெரியுமா? எவர் ஒருவரின் திறமையும் அவரது பிறப்பால் வருவதல்ல. சூழலும் முயற்சியுமே ஒருவரின் திறமையையும் அறிவையும் நிர்ணயிக்கிறது. அதற்கு ரங்கசாமி ஓர் எடுத்துக்காட்டு!
Comments
Post a Comment