சனிக்கிழமை... அடுத்து ஏகாதசி... சகல யோகமும் தருவார் பெருமாள்!
பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமையும் பெருமாளுக்கு உகந்த ஏகாதசியும் அடுத்தடுத்து வருவதால், மறக்காமல் பெருமாளை வழிபடுங்கள்.சகல யோகமும் கிடைத்து, சங்கடங்கள் யாவும் தீரும் என்று சிலாகிக்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்!
பெருமாளுக்கு உகந்த நாள் என்று சனிக்கிழமையைச் சொல்லுவார்கள். ஆகவே சனிக்கிழமையில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று, வழிபாடு செய்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் மிகவும் பலன்கள் தரக்கூடியவை என்பதால், சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் ஏகத்துக்கும் இருக்கும்.
இன்னும் பல பக்தர்கள், சனிக்கிழமை தோறும் தவறாமல், பெருமாள் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சென்னைப் பகுதியில் இருப்பவர்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், சைதாபேட்டை பெருமாள் கோயில் என பல கோயில்களுக்குத் தொடர்ந்து சனிக்கிழமை தோறும் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல், திருச்சியில் உள்ளவர்கள் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலுக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் பீமநகர் பெருமாள் கோயிலுக்கும் என பல கோயில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர்.
மதுரையில் கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், ஒத்தக்கடை நரசிம்மர் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் என வாரம் தவறாமல் சனிக்கிழமைகளில் சென்று தரிசித்து வருகின்றனர்.
அதேபோல், மாதந்தோறும் ஏகாதசி வரும் அல்லவா. இந்த ஏகாதசி நாளில், பெருமாளை நினைத்து விரதமிருந்து பாராயாணங்கள் படித்து, ஆலயங்களுக்குச் சென்று. பெருமாளை ஸேவிப்பார்கள் பக்தர்கள். ஏகாதசி நாளில் விரதம் மேற்கொண்டு, பெருமாளை ஸேவித்தால், எண்ணிய காரியம் யாவும் கைகூடும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
நாளைய தினம் சனிக்கிழமை. திருமாலுக்கு உரிய நாள். திருமாலை வணங்கி வழிபடக் கூடிய அற்புதமான நாள். இதற்கு மறுநாள் 28.1.18 ஏகாதசி. இந்தநாளில் முடியுமெனில் ஏகாதசி விரதம் மேற்கொள்ளுங்கள். விரதம் இருந்து அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள்.
தை மாத ஏகாதசி விரதம் இன்னும் சிறப்பு. சனிக்கிழமை நன்னாளில் பெருமாள் தரிசனம் விசேஷம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையில் ஏகாதசி விரதம். இந்த இரண்டு நாளுமே பெருமாளை வழிபடுவதற்கு உரிய அற்புத நாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
முடிந்தால், நான்குபேருக்கேனும் புளியோதரையோ தயிர்சாதமோ வழங்குங்கள். சகல யோகங்களும் தந்து நம்மையும் நம் குடும்பத்தையும் இனிதே வாழச் செய்வார் பெருமாள்!
Comments
Post a Comment