லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கணுமா? பசுக்களை வணங்குங்க!
மாட்டுப் பொங்கல் நன்னாள் இன்று. ஏதோ மாடு வைத்திருப்பவர்களுக்குத்தான் இந்த விழா என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், மாட்டுப் பொங்கல் எனும் இந்த நன்னாள், நம் எல்லோரும் கொண்டாடவேண்டிய பண்டிகை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகள் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விழா. அதேபொல், விவசாயிகளுக்கு நாமெல்லாரும் நன்றி சொல்லும் விழாவும் கூட! அதேபோல், மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளை நீராட்டி, அலங்கரித்து, மஞ்சள் குங்குமமிட்டு வணங்குகிறார்கள். அதேபோல், அந்தப் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாமும் வணங்கும் நாளே மாட்டுப் பொங்கல்!
வருடம் 365 நாளும் பசுவின் தேவை நமக்கு இருக்கிறது. அதன் பாலும் பாலில் இருந்து கிடைக்கிற வெண்ணெயும் நெய்யும் மோரும் என பசுவினின்றி நமக்கான உணவில்லை என்பதே உண்மை.
மேலும் கிரகப் பிரவேசம் முதலான நாட்களில் பசுவும் கன்றுமாக வரச்செய்து, கோபூஜை செய்து வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் நிகழ்வுதான் கிரகப்பிரவேசத்தின் முக்கியமானதொரு நிகழ்வு, நிறைவு என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
இன்னொரு விஷயம்... பசுவில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஆகவே , பசுவை வணங்கினால், மகாலக்ஷ்மியின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பது சத்தியம். வீட்டில், லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் என்பது உறுதி.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களை நீராட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரிப்பார்கள். லட்சுமியின் முழு சாந்நித்தியம் உள்ள இடம் பசுவின் உடல் என்பது ஐதீகம்! காலையில் எழுந்தவுடன் பசுவின் பின்பாகத்தை தரிசிப்பது, லட்சுமியை தரிசிப்பதற்குச் சமம். இந்த தரிசனத்தால் நம் பாவங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை!
மகாலக்ஷ்மி மட்டுமா? பசுவின் உடலில் உலகின் அனைத்து தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். ஆகவே இந்த நாளில், பசுவை வணங்குங்கள். பசுவுக்கு உணவளியுங்கள். மேலும் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சீரும் சிறப்புமாக, சகல செளபாக்கியங்களுடன் சுபிட்சமாக வாழ்வீர்கள் என்பது உறுதி!
Comments
Post a Comment