மாணவர் மனம் நலமா? ரிமோட் கன்ட்ரோலை ஒளித்து வையுங்கள்!
பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சி பார்ப்பதில் மிக அதிக நேரம் செலவிடுகிறேன். படிப்பில் சரிவரக் கவனம் செலுத்த முடியவில்லை. இதிலிருந்து எப்படி மீள்வது?
- சித்ரா, மதுரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
மற்றவர்களிடமிருந்து தன்னுடைய ஆசைகள், நம்பிக்கைகள், நோக்கங்களைப் பகுத்தறியும் திறன் ‘மனதின் கோட்பாடு’ (Theory of Mind) எனப்படுகிறது. அதிகப்படியாகத் தொலைக்காட்சி பார்க்கும் இளஞ்சிறார்களுக்கு ‘மனதின் கோட்பாடு’ குறைவதாக ஆய்வாளர்கள் அச்சுறுத்துகிறார்கள். உங்களுடைய கட்டுப்பாட்டை மீறித் தொலைக்காட்சியைப் பார்க்கும் தூண்டுதல் ஏற்படுவதாகக் கவலைப்படுகிறீர்கள். தினசரி ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாகத் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, அதனால் படிப்பு, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனால் மட்டுமே பிரச்னையாகக் கருதலாம்.
நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் என்னவாகும்?
1. அதிகப்படியான நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, தண்டுவடத்தைப் பாதித்து, தசை வலி ஏற்படுத்தும்.
2. இடைவேளை இன்றி தினசரி இரண்டு மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களில் 23 சதவிகிதத்தினர் எடை கூடி, சர்க்கரைநோய்க்கு ஆளாகி இருப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று உறுதிப்படுத்துகிறது.
3. தூக்கம் வருவதில் சிரமம், குறைவான ஆழ்ந்த தூக்கம், மறுநாள் காலை குழப்பநிலை போன்றவையும் ஏற்படலாம்.
4. சோம்பேறித்தனமாக எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்தபடி இருப்பவரை ஆங்கிலத்தில் ‘கவுச் போடேடோ’ (படுத்துக்கிடக்கும் உருளைக்கிழங்கு) என்பார்கள். இப்படித் தொடர்ந்து தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் படுத்துக்கிடப்பவர்கள் அதிகப்படியான நொறுக்குத்தீனி சாப்பிட வாய்ப்புண்டு. இதனாலேயே பல உடல் உபாதைகள் ஏற்படலாம்.
தொலைக்காட்சி முன்பு வரம்புமீறி நேரம் செலவழிப்பது, நம்முடைய அன்றாட அலுவல்களை மட்டும் பாதிக்காமல், உடல் மற்றும் மனநலத்துக்கும் கேடு விளைவிக்கும்.
விடுபடுவது எப்படி?
1. உங்களுக்குப் பிடித்த பயனுள்ள நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கவேண்டுமென்று முடிவெடுங்கள்.
2. ரிமோட் கன்ட்ரோலைப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் சேனலை மாற்ற தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்துக்கு எழுந்துச் செல்லுங்கள்.
3. படுத்துக்கொண்டு அல்லது சாய்ந்தபடி தொலைக்காட்சிப் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். வகுப்பறையில்
உட்கார்ந்திருக்கும் நாற்காலி போன்ற ஒன்றில் உட்கார்ந்தபடி தொலைக்காட்சிப் பாருங்கள்.
4. வாரத்துக்கு எந்தெந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்று முன்பே முடிவு செய்துகொண்டு அதன்படி இருக்க முயலுங்கள்.
5. தினசரி 30 பக்கங்கள்வரை வாசிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.
6. ஒரு டைரியில், தினசரி தொலைக்காட்சிப் பார்ப்பதற்காகவும், மற்றச் செயல்பாடுகளுக்காகவும் எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்
என்பதை எழுதிவையுங்கள். நாளடைவில், பயனுள்ள செயல்களுக்கு அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பது
தெரியவரும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
7. ஒருபோதும் தூங்கும் நேரத்தை தொலைக்காட்சிப் பார்ப்பதற்காக குறைத்துவிட வேண்டாம்.
தொலைக்காட்சி பார்ப்பதற்கு பதிலாக...
1. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், பைக் சவாரி போன்ற உடலுக்கும் மனதுக்கும் உற்சாகமூட்டும் செயல்களில் ஈடுபடலாம்.
2. ஓவியம் தீட்டுதல், நடனம் ஆடுதல் போன்ற படைப்பாற்றல் மிக்க செயல்களில் ஈடுபடலாம்.
3. ஆன்லைன் வணிகம் அல்லது வலைப்பூ பதிவிடுதல் போன்ற செயல்களும் நல்ல பலன் அளிக்கும்.
‘மனோதிடத்தின் உள்ளுணர்வு’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர்.கெல்லி மெக்கோனிகல், சுயகட்டுப்பாட்டுக்கான ‘விந்தையான மருந்தாக’ உடற்பயிற்சியை வழிமொழிகிறார். அவருடைய ஆராய்ச்சியில், தினசரி உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், மது அருந்துதல், புகைபிடித்தல், காபி அருந்துதல் போன்றவற்றில் மிதமான போக்கைக் கொண்டிருப்பதாகவும், முக்கியமாக தொலைக்காட்சிப் பார்ப்பதை மிகவும் குறைத்துக்கொண்டதாகவும் சொல்கிறார்.
ஆகவே, உடற்பயிற்சி நிச்சயம் கைகொடுக்கும்.
Comments
Post a Comment