பாதையில்லா ஊரில் படிப்பு!
நடராஜ்
ஆ
லமரத்தின் நிழல், வீட்டுத் திண்ணை, முற்றம் இப்படிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் குழந்தைகள் படிக்கிறார்கள். தாளவாடி, பர்கூர் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினக் குழந்தைகளும் மலைவாழ் மக்களின் குழந்தைகளும்தான் அவர்கள். பேருந்தைக் கண்ணால் காணவே இந்தக் குழந்தைகள் 60 கி.மீ. பயணிக்க வேண்டும். ரயிலைப் பார்ப்பதற்காகவே நகரப் பகுதிக்கு ஒரு சுற்றுலா சென்றுவந்திருக்கின்றனர் இந்தக் குழந்தைகள். இவர்களுக்காக முறைசாரா கல்வியைச் சுடர் அறக்கட்டளையின் மூலம் வழங்குவதில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுவருக்கிறார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த எஸ்.சி. நடராஜ்.
அரசு உதவியோடு முறைசாராக் கல்வி
2009-ல் மத்திய அரசின் தொழிலாளா் அமைச்சகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது தேசியக் குழந்தைத் தொழிலாளார் திட்டம். இத்திட்டத்தின் கீழ் சுடா் அமைப்பின் மூலமாகத் தாளவாடி மலைப் பகுதிகளில் 5 குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிதல், பள்ளிக்கான கட்டிடத்தை ஏற்பாடு செய்தல், மதிய உணவு சமைப்பதற்கான சமையல் பாத்திரங்கள் வாங்குதல் உள்ளிட்டவற்றை ஏற்பாடுசெய்து இப்பள்ளியை நிர்வாகித்து, குழந்தைகளைப் பயிற்றுவித்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அவர்களை முறைசார் பள்ளிகளில் சேர்த்தல் ஆகியவற்றை இத்திட்டத்தின் கீழ் செய்வதே அரசால் அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் பணி.
மத்திய அரசு இந்தச் சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.6000-த்தை மதிப்பூதியமாக வழங்குகிறது. மதிய உணவு, பள்ளிப் பாடநூல், சீருடைகளைப் பிற மாணவர்களைப் போல் இவர்களுக்கும் வழங்குகிறது. கல்வி ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150-ஐ மத்திய அரசு வழங்குகிறது. மற்றபடி தனிப் பயிற்சியாளர்களை ஏற்பாடுசெய்வதற்கும் நிர்வாகச் செலவுகளுக்கும் கொடையாளர்கள் தரும் நன்கொடைதான் உதவுகிறது
“தொடக்கத்தில் சுய உதவிக் குழு, பெண்களுக்கான கல்விப் பயிற்சிகள் போன்றவற்றைத்தான் செய்துகொண்டிருந்தோம். ஒரு வனச் சரக அதிகாரிதான் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கும் பழங்குடியினக் குழந்தைகளுக்கும் கல்வி வசதியே இல்லாத நிலையையும் குழந்தைத் தொழிலாளிகளாகப் பல குழந்தைகள் விவசாயக் கூலிகளாக இருப்பதையும் தெரிவித்தார். அதன் பிறகுதான் குழந்தைகளுக்கு முறைசாராக் கல்வியை அரசின் உதவியோடு வழங்கத் தொடங்கினோம்.
கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் எட்டாத கடைக்கோடி மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக எங்களின் கல்விப் பணியைத் தொடங்கினோம்” என்கிறார் சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜ்.
மீட்கப்பட்ட துளிர்கள்
பள்ளிக்குச் செல்லும் வயதில் கரும்புவெட்டுதல், செங்கல் தயாரித்தல், ஆலைத் தொழில்களில் ஈடுபடுதல் ஆகியவற்றைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள். அவர்களை மீட்டு மத்திய அரசின் உதவியுடன் கல்வி வழங்கிட மலைக் கிராமங்களில் 9 குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளை நடத்திவருகிறது சுடர் அமைப்பு. இந்த முறையில் ஏறக்குறைய 300 குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது பழங்குடியினச் சமூகத்திலிருந்து இரண்டு குழந்தைகள் மட்டுமே கல்லூரிக்குச் சென்று படித்துவருகின்றனர். இவர்கள் பணி மேற்கொண்ட 30 இடங்களில் 10 இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு தொடக்கப்பள்ளிகளை அரசு ஆரம்பித்திருக்கிறது.
“கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 800 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டதையே எங்களின் சாதனையாகப் பார்க்கிறோம். இவர்களில் 500 குழந்தைகள்வரை முறைசார் பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். 300 குழந்தைகள்வரை தற்போது வெவ்வேறு படிப்புகளில் படித்துவருகின்றனர். முறைசாராக் கல்வி என்பதால் ஆரிகாமி, விளையாட்டு, ஓவியம், கதைசொல்லல், பாட்டு எனப் பல கலைகளின் வழியாகத்தான் பாடத்திட்டத்தில் இருக்கும் பாடங்களை மெதுவாகச் சொல்லிக்கொடுத்து, அவர்களை எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் அளவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுதான் மிகப் பெரிய சவால்” என்கிறார் நடராஜ்.
குழந்தைகளின் வயது நிலைக்கேற்ப ஆண்டுக்கு ஒருமுறை இங்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதிகபட்சம் 8-வது வகுப்புத் தேர்வை எழுதும் அளவுக்குத் தயாராகும் மாணவர்களை முறைசார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். “கொடையாளர்களைக் கொண்டுதான் 3 லட்சம் செலவில் சில இடங்களில் கட்டிடங்கள் கட்டியிருக்கிறோம். ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று 10, 12-ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கும் மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் அளிக்கிறோம். கல்லூரி மாணவர்களுக்கு ஐந்தாயிரம் அளிக்கிறோம்” என்கிறார் நடராஜ். குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் மேன்மையானது அதில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை மீட்டு கல்வி அளிப்பது. இப்படி சுடர்விடும் அறிவுடன் குழந்தைகள் ஒளிர இடைவிடாது முயன்றுவருகிறது சுடர் அறக்கட்டளை.
Comments
Post a Comment