ஹெல்மெட் இல்லையென்றால் பூஜை கிடையாது!


ஹெ
ல்மெட்டின் அவசியத்தை உணர்த்த எத்தனை வழிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜகத்சிங்பூர் சரளா ஆலயமாகும்.
 


புதிதாக வாகனம் வாங்கியவுடன் இந்த ஆலயத்துக்கு சென்று பூஜை செய்வது இங்குள்ள பெரும்பாலானவர்களின் வழக்கமாகும். குறிப்பாக அமாவாசை தினங்களில் இந்த ஆலயத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும். வாகனங்களுக்கு பூஜை போடுவதற்கு வசதியாக கோயிலின் உள் பகுதி வரை வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியும். அர்ச்சகர் வந்து மாலை போட்டு வாகனத்துக்கு பூஜை நடத்துவது வழக்கம்.
சமீபத்தில் இந்த ஆலய நிர்வாகம் ஒரு அறிவிப்புப் பலகையை கோவிலில் வைத்துள்ளது. அதாவது இரு சக்கர வாகன ஓட்டிகள் பூஜை போடுவதற்கு வாகனத்தைக் கொண்டு வரும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஹெல்மெட் இல்லையெனில் பூஜை நடத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்த பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வந்த மாவட்ட காவல்துறை இப்போது மத ரீதியாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வந்துள்ளது. இதற்காக ஆலய நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு பூஜை போட வேண்டாம் என கேட்டுக் கொண்டது.
 
பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகமும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. மகர சங்கராந்தியிலிருந்து ஹெல்மெட் இல்லாத வாகனங்களுக்கு பூஜை போடுவதில்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களைக் கொண்டு வந்திருந்த 20 பேருக்கு பூஜை மறுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினசரி சராசரியாக 50 வாகனங்கள் பூஜைக்காக இந்த ஆலயத்திற்கு கொண்டு வரப்படுகிறது. விசேஷ நாள்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என்று கோவிலின் தலைமை பூசாரி சுதம் சரண் பாண்டா தெரிவிக்கிறார். 2016-ம் ஆண்டில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆகும். இந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்காக பாடுபடும் காவல் துறையோடு தாங்களும் கைகோர்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடுமையான சட்டங்களால் நிறைவேற்ற முடியாத பல விஷயங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள் மூலம் ஏற்படும். இதைப் போன்று ஆங்காங்கு உள்ள கோயில் நிர்வாகமும் ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்தினால் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை நிச்சயம் குறையும்.


Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?