வரலாறு தந்த வார்த்தை லீவுதான்… ஆனால் வேலை!
க
டந்த சில வாரங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால், பணிக்குச் செல்பவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இன்னொரு வெள்ளத்தைச் சமாளிக்கத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர், விடுப்பு எடுத்தாலும், வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். அதிலும், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பலர் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்று சொல்லி, சூடான தேநீரை அருந்தியபடியே தங்களின் கடமையை ‘ஆற்றினார்கள்!’
இவ்வாறு, விடுமுறை அல்லது விடுப்பு நாட்களிலும் பணியாற்றுவதை ஆங்கிலத்தில் ‘Busman’s holiday’ என்கிறார்கள். அந்தச் சொற்றொடர், பெயருக்கேற்ப பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து பிறந்தது. லண்டனில், அந்தக் காலத்தில், பேருந்துகள் எல்லாம் குதிரைகளால் இழுக்கப்பட்டுவந்தன. நம் ஊரில் உள்ளது போன்ற குதிரை வண்டிதான். ஆனால் கதவு, ஜன்னல்கள், படிக்கட்டுகள், தலைக்கு மேலே கூரை என எல்லாம் வைத்து, பார்ப்பதற்கு அசல் பேருந்து போல இருக்கும்.
உயிர்த் தோழர்கள்
இந்தப் பேருந்துகளை இரண்டு குதிரைகள் இழுக்கும். அவற்றைப் பராமரிப்பது அந்தப் பேருந்து ஓட்டுநரின் கடமை. மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக இணைந்து உயிர்த் தோழர்கள்போலப் பணியாற்றிய காலம் அது. அந்த ஓட்டுநர் விடுமுறையில் அல்லது விடுப்பில் சென்றால், அவருக்குப் பதிலாக, வேறொரு ஓட்டுநரை ‘சப்ஸ்டிட்யூட்’ ஆக நியமிப்பார்கள். ஆனால், அவர் புதியவர் என்பதால், குதிரைகள் மிரளும். குதிரைகளைப் பணியவைக்க, அவர் சாட்டையால் அடிக்கலாம். வேகமாக ஓடச் செய்யலாம். அல்லது வேறு ஏதேனும் கஷ்டத்தை அந்தக் குதிரைகளுக்குத் தரலாம்.
எனவே, தன்னுடைய குதிரைகள், புதிய ஓட்டுநரால் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா, நல்லவிதமாக அவற்றிடம் வேலை வாங்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க, வழக்கமான ஓட்டுநரும் அந்தப் பேருந்தில், ஒரு சாதாரணப் பயணியாகப் பயணிப்பார். மேலோட்டமாகப் பார்த்தால், அவர் விடுப்பில்தான் இருக்கிறார். ஆனால், விடுப்பில் இருந்தாலும், அவர் தனது வழக்கமான பணியை, அதாவது தனது குதிரைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைக் கவனித்துக்கொண்டே, அவ்வப்போது புதிய ஓட்டுநருக்குக் குதிரைகளை எப்படிச் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவார். சொல்லப்போனால், அவருடைய மேற்பார்வையில்தான் அந்தப் பேருந்து ஓட்டப்படுகிறது. ஆக, அவர் விடுப்பில் இருந்தாலும், தனது ‘கடமை’யிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.
இதிலிருந்துதான் மேற்கண்ட சொற்றொடர் பிறந்தது. அதற்காக, இனி விடுப்பில் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, யாராவது உங்களைக் கேட்டால், ‘பஸ் ஓட்டிக்கிட்டிருக்கேன்’னு சொல்லிடாதீங்க!
Comments
Post a Comment