தை அமாவாசையில் புனித நீராடுவோம்!
சமுத்திர ஸ்நானம் எப்போதும் செய்யக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள். அதாவது கடல் குளியல் எல்லா காலத்திலும் செய்யக் கூடாது என்று தெரிவிக்கின்றன ஞானநூல்கள். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கடல் நீராடுவது உத்தமம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
தை அமாவாசை எனப்படும் புண்ணிய காலத்தில், இந்தப் புனிதமான நாளில், கடலில் ஸ்நானம் செய்வது விசேஷ பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், கடல் மட்டுமின்றி நதி நீராடலும் நல்லன எல்லாவற்றையும் தந்தருளும் என்கின்றனர்.
ராமேஸ்வரம் கடல், திருப்புல்லாணி சேதுக்கரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கடல்மல்லை என்று போற்றப்படுகிற மாமல்லபுரம் முதலான இடங்களில், கடலில் நீராடினால், முன்னோருக்கு கடன் தீர்க்காத பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியங்கள் பெருகும்!
முன்னோரின் ஆத்மா குளிர்ந்து, நம்மை, நம் குடும்பத்தை, சந்ததியை ஆசீர்வதிக்கும் என்பது ஐதீகம். நம் வாழையடி வாழையென தழைக்கும் என்பது உறுதி!
ஆகவே, தை மாத புண்ணிய கால அமாவாசையில், கடல் நீராடுங்கள். கடற்கரையில் தர்ப்பணம் செய்யுங்கள். இயலாதவர்கள், காவிரிக்கரைகளில், ஈரோடு பவானி கூடுதுறை, திருவையாறு காவிரிக்கரை முதலான புண்ணிய நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்யுங்கள்! எல்லா வளமும் நலமும் பெற்று, தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷமாக வாழ்வீர்கள்!
அதேபோல், தானம் செய்வதற்கும் தருமங்கள் செய்வதற்கும் நாளும் தேவையில்லை. கோளும் அவசியமில்லை. அதேசமயம் முக்கியமான நாட்களில், புண்ணியம் நிறைந்த நன்னாளில், தானங்கள் செய்வது, நம் வாழ்வுக்கு இன்னும் இன்னும் பலம் சேர்க்கும் என வலியுறுத்துகிறார் பாலாஜி வாத்தியார். .
தை அமாவாசை நாளில், வேதம் அறிந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் பசு தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம். சொர்ணம் எனப்படும் தங்கத்தை தானமாகத் தரலாம். எள் தானம் வழங்குங்கள். நெய் தானம் வழங்கலாம். வஸ்திரம் கொடுக்கலாம். நவதானியங்கள், வெல்லம், வெள்ளி, உப்பு, புத்தகம், பூஜை மணி, தீர்த்தப் பாத்திரம், பழங்கள், காய்கறிகள் முதலானவற்றை தானமாக வழங்கலாம்.
முக்கியமாக, அமாவாசை நாளில், நம்மால் முடிந்த அளவு யாருக்கேனும் ஒரு பொட்டலம் தயிர்சாதமாவது வாங்கிக் கொடுங்கள். பித்ருக்கள் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, இனிதே வாழ்வீர்கள்!
Comments
Post a Comment