மாரடைப்பு சிகிச்சை தாம்பத்தியத்துக்குத் தடையா?


என் வயது 43. எனக்குச் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை செய்துகொண்டுள்ளேன். பல மாத்திரைகள் எடுத்துவருகிறேன். இனிமேல் மாரடைப்பு வராமல் தடுத்துக்கொள்ளவும், நலமான, தரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் நான் என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
-ரவி வீரன், மின்னஞ்சல்.
ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்று, உயிர் பெற்றுத் திரும்புகிறவர்களை, எல்லையில் நடக்கும் போரில் வெற்றி பெற்று மறுபடியும் படைக்குத் திரும்பும் வீரர்களுடன் ஒப்பிடலாம். மரணத்தின் வாசலுக்குச் சென்று திரும்பும் இவர்களுக்கு மரணம் பற்றிய பயம், சிறிது காலம் நீடிக்கலாம். மறுபடியும் மாரடைப்பு ஏற்படுமா எனும் கேள்வி மனத்தைக் குடையும். இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா எனும் சந்தேகம் அரிக்கும். குடும்பத்தின் முக்கியப் பொறுப்புகளைக் கவனிக்கும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு இந்தக் கவலைகள் அவரோடு முடியாது; குடும்பத்தினரையும் தொற்றிக்கொள்ளும்.
மாரடைப்புக்குப் பிறகான வாழ்க்கையை ஒருவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்து அவருடைய உடல்நிலையும் மனநிலையும் நலம் பெறும் என்பது பொதுவான விதி. என்றாலும், சின்னச் சின்ன வாழ்க்கைமுறை மாற்றங்களால் இவை எல்லாவற்றையும் எல்லோராலும் வெற்றிகொள்ள முடியும் என்றுதான் நவீன மருத்துவம் நம்பிக்கை தருகிறது. அதற்கான வழிகள்:
# இதய நிபுணர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம்.
# குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மறு பரிசோதனைகளுக்குச் செல்வது முக்கியம்.
# புகைபிடிப்பது கூடவே கூடாது.
# மது அருந்துவதும் ஆகாது.
# உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். முக்கியமாக, உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
# ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், கொழுப்புணவைக் குறைத்து, ரத்த கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்த வேண்டும்.
# உணவு, உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். சிகிச்சை பெற்றுக்கொண்ட ஒரு வாரத்தில் வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். ஒரு மாதம் கழிந்தபின் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மிகவும் தீவிரமான உடற்பயிற்சிகளையும் ‘ஜிம்’ போன்ற தசைப்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம்.
# தினமும் 40 நிமிட நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். குறைந்தது வாரம் 5 நாட்களுக்கு இப்பயிற்சி தேவை.
# மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவரிடம் கேட்கத் தயங்கும் கேள்வி இதுதான்: ‘மாரடைப்புக்குப் பிறகு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா?’ சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். ‘வயாக்ரா’ போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம். அவை மிகவும் அவசியம் என்றால் இதய நிபுணரின் சம்மதம் தேவை.
# குறைந்தது 6 வார ஓய்வுக்குப் பின் வழக்கமான பணிகளைச் செய்யலாம். அலுவல் பணிகளையும் செய்யலாம். கடுமையான உடலுழைப்பு தேவைப்படுபவர்கள் மட்டும் இதய நிபுணரின் ஆலோசனைப்படி பணிக்குத் திரும்புவது நல்லது. அரிதாக ஒரு சிலர் மட்டும் தங்கள் பணியை மாற்றிக்கொள்ள வேண்டி வரலாம்.
# மாரடைப்புக்குப் பிறகு வெகு சிலருக்கு இதயம் பலவீனமாகிவிடும். இவர்களுக்கென்றே ‘கார்டியாக் ரீஹாபிலிடேஷன் சென்டர்கள்’ (Cardiac rehabilitation centers) உள்ளன. இவற்றில் இதயம் வலுப்பெறுவதற்கான சிறப்புப் பயிற்சிகள் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.
# தேவையில்லாமல் பிறருடன் வாக்குவாதம் செய்வதைத் தவிருங்கள். கோபம், எரிச்சல், டென்ஷன் போன்றவை உண்டாகிற சூழ்நிலைகளைத் தவிருங்கள். அடிக்கடி இந்தச் சூழ்நிலைகளுக்கு ஆளாகிற பணிகளில் உள்ளவர்கள் அவசியம் தியானம் செய்யுங்கள்.
# குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மனம்விட்டுப் பேசினால், மனம் நலமும் பலமும் பெறும். தேவையில்லாத பயம் விலகும்.
# இப்போது மாரடைப்புக்கான முன்சிகிச்சைச் செலவுகள் மட்டுமன்றி பின்சிகிச்சைச் செலவுகளும் பெரிதும் அதிகரித்துவிட்டன. சாமானிய இந்தியர் இதைச் சமாளிப்பது கடினம். ஆகவே, மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள். சிகிச்சைக்கான பொருளாதாரச் சிக்கல் வராமல் தொடர் சிகிச்சைக்கு வழி அமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மாரடைப்பிலிருந்து முழுமையாகப் பாதுகாப்புப் பெறலாம்.
மாரடைப்புக்கு ஸ்டென்ட் பொருத்திக்கொண்டவர்கள் மட்டுமன்றி, பைபாஸ் ஆபரேஷன் மேற்கொண்டவர்களுக்கும் இந்த ஆலோசனைகள் பொருந்தும்.


Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?