சுடச்சுட சப்பாத்தி: சுவையான வாழ்க்கை
ஓசூர் ஒன்றியத்தில் உள்ள கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் ஓம் சக்தி மகளிர் சங்கம், கோகுல லட்சுமி மகளிர் சங்கம், சிவசக்தி மகளிர் சங்கம், மாரியம்மன் மகளிர் சங்கம், புவனேஸ்வரி மகளிர் சங்கம், திரிவேணி மகளிர் சங்கம் ஆகிய 6 மகளிர் சங்கங்கள் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த மகளிர் சங்கங்களில் ஒரு சங்கத்தில் 10 பெண்கள் என மொத்தம் 60 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மகளிர் சங்கங்களில் உள்ள பெண்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சப்பாத்தி தயாரிப்பில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தை சுற்றிலும் உள்ள ஓசூர் சிப்காட் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உணவு தேவைக்காக சுகாதாரமான முறையில் சுவையான சப்பாத்திகளை இந்த மகளிர் சங்கங்கள் வழங்கி வருகின்றன. இதற்காக ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரையிலான சப்பாத்திகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதனால் தங்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்து, பிள்ளைகளையும் நல்ல முறையில் படிக்க வைக்க முடிகிறது என்று மகளிர் சங்க உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
ஜிஎஸ்டி பாதிப்பு
சுய உதவி குழுக்கள் மூலமாக பெண்கள் இணைந்து தன்னம்பிக்கையுடன் சப்பாத்தி தயாரிக்கும் தொழிலில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் உற்சாகத்தை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி உள்ளதாக சங்கத்தில் உள்ள அனைத்து பெண்களும் ஒரே குரலில் கூறுகின்றனர். ஜிஎஸ்டி அமல் படுத்துவதற்கு முன்பு வரை மாதத்தில் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை சம்பளம் கிடைத்து வந்தது, ஜிஎஸ்டி வந்த பிறகு சப்பாத்தி மாவு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், மாத சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் வரை குறைந்து விட்டதாக சங்கத்தில் உள்ள பெண்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோகுல லட்சுமி மகளிர் சங்கம் தலைவி முருகேசம்மா(38) கூறியதாவது, இங்குள்ள 6 மகளிர் சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், சமூதாயத்தில் கவுரவமும் கிடைத்துள்ளது. 7-வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நானும், ஒரு சங்கத்தை நிர்வகிப்பதுடன், எனது குடும்பத்திற்கும் பொருளாதார உயர்விற்கு உதவியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் 6 மணி வரையும் வேலை செய்கிறோம்.
இங்கு தினமும் சுழற்சி முறையில் இரண்டு சங்கங்களைச் சேர்ந்த பெண்கள் சப்பாத்தி தயாரிப்பில் ஈடுபடுகிறோம். ஒரு சங்கத்தில் 6 ஆயிரம் சப்பாத்தி என இரண்டு சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் சப்பாத்திகளை வாங்கிச் செல்ல தனியார் தொழிற்சாலைகள், உணவகங்கள் என நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு மாதத்திற்கு செலவுகள் போக சங்கத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை சம்பளமாக கிடைத்து வந்தது. தற்போது ஜிஎஸ்டி காரணமாக செலவுகள் அதிகரித்து, சம்பளம் குறைந்துள்ளதால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதக்கணககில் சப்பாத்தி வாங்கும் நிறுவனங்களுக்கு காலை உணவுக்கு ஒரு சப்பாத்தி ரூ. 2.05 எனவும் மதிய உணவுக்கு ஒரு சப்பாத்தி ரூ. 1.95 என்ற விலையிலும் வழங்கி வருகிறோம். தற்போது ஜிஎஸ்டி உயர்வினால் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், ஒரு சப்பாத்திக்கு காலை உணவுக்கு ரூ. 2.60 என்றும், மதியம் உணவு ஒரு சப்பாத்திக்கு ரூ. 2.50 எனவும் விலை உயர்த்தி வழங்க நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அப்படி விலை உயரும் பட்சத்தில் சங்க உறுப்பினர்களின் ஊதியமும் உயர வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உணவுத் தேவைக்கு எங்கள் சங்கங்களின் மூலமாக 1.80 லட்சம் சப்பாத்தி தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment