சந்தேகம் சரியா உப்பு அதிகம் உள்ள உணவைச் சாப்பிட்டால் தப்பா?


ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உப்பு அதிகம் உள்ள உணவைச் சாப்பிட்டால், அது தப்பு என்று கூறுகிறார்கள். இது உண்மையா?
உண்மைதான்.
உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்புதான். ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென்னிந்தியாவிலோ தினசரி 20 கிராம்வரை உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இது மிகப் பெரிய தப்புதான். எப்படி எனப் பார்ப்போம்:
சமையல் உப்பு என்பது 40 சதவீதம் சோடியத்தாலும் 60 சதவீதம் குளோரைடாலும் ஆனது. நாளொன்றுக்கு நமக்குத் தேவையான சோடியம் அளவு 4 மி.கி. மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் உப்பில் 2.3 மி.கி. சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். ஏற்கெனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும்.
சிறுநீரகமும் ரத்த அழுத்தமும்
உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகத்துக்கு அதிகப் பங்கு உண்டு. ‘ரெனின்-ஆஞ்சியோடென்சின் - ஆல்டோஸ்டீரான் அமைப்பு’ (Renin - Angiotensin - Aldosterone System - RAAS) என்று ஒரு அமைப்பு நம் உடலில் உள்ளது. இதுதான் ரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இதில் ரெனின், ஆஞ்சியோடென்சினைச் சிறுநீரகம் உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டும் உடலில் ரத்தக் குழாய்களைச் சுருங்கி விரியச்செய்கின்றன.
இவை சரியாகச் சுரந்தால், ரத்தக் குழாய்களும் சரியாகவே சுருங்கி விரியும்; அதிகமாகச் சுரந்தால், ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கிவிடும். இப்படிச் சுருங்கிப் போன ரத்தக் குழாயில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலில் அதிகமானால், அதிலுள்ள சோடியம் ரெனின், ஆஞ்சியோடென்சின் சுரப்பதை அதிகப்படுத்திவிடும். இதனால் ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கி ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும்.
அடுத்த காரணம், உப்பு அதிகரிக்கும்போது, அதிலுள்ள அதீத சோடியம் உடல் செல்களிலுள்ள தண்ணீரை ரத்த ஓட்டத்துக்குக் கொண்டுவந்துவிடும். இதனால் ரத்தத்தில் தண்ணீர் அளவு அதிகமாகி, அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி இன்னும் பல வழிகளில் உடலில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவேதான் உப்பு அதிகம் சாப்பிட்டால் தப்பு.
வேண்டவே வேண்டாம்
உப்பு நிறைந்த உணவுப் பொருட் களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், புளித்த மோர், பாலாடைக்கட்டி, சேவு, சீவல், சாக்லேட், முந்திரிப் பருப்பு போன்ற நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
இரைப்பைப் புண்ணுக்குத் தரப்படும் சில அமில எதிர்ப்பு திரவ மருந்துகளில் (Antacids) சோடியம் உள்ளது. இவற்றை மருத்துவர் சொல்லாமல் நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது. அப்படி உட்கொண்டால், சோடியம் அதிகரித்து ரத்த அழுத்தமும் அதிகரித்துவிடும்.
எதிரிக்கு எதிரி நண்பன்
நமக்கு சோடியம் தேவைதான். ஆனால், நமக்குத் தேவையான சோடியம் இயற்கைக் காய்கறிகளில் இருந்தே கிடைத்துவிடும். தனியாக உப்பு எனும் பெயரில் சோடியம் தேவையில்லை.
எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்வதைப் போல், சோடியம் ரத்தஅழுத்தத்தை அதிகப்படுத்துகிறது என்றால் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதனால் இந்தச் சத்துகள் உள்ள உணவை அதிகப்படுத்திக்கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
தினமும் பால் குடிக்கலாம். இதில் கால்சியம் உள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர், மீன் உணவு ஆகியவற்றில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உதிரியாக ஒரு கூடுதல் செய்தி! உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் 1.8 மி.கி. சோடியத்தைக் குறைத்தால் 6 மி.மீ. மெர்குரி என்ற அளவுக்கு ரத்த அழுத்தம் குறையும். இதை மறந்துவிடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?