தொட்டனைத்து ஊறும்: மருத நில வேளாண்மை


குறிஞ்சியில் மக்கள் உழவில்லா வேளாண்மை செய்தும், முல்லையில் கால்நடை வேளாண்மை செய்தும் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.
முல்லையிலேயே எளிய ஆட்சியமைப்பு தோன்றிவிட்டது. அதாவது ஒரு சிறு கூட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் தோன்றிவிட்டனர். பாரி முதல் ஓரி வரையான வள்ளல்கள் எனப்படும் இனக்குழுத் தலைவர்கள் அதற்கான சான்றுகள்.
தலைமை ‘கோல்’
கோல் என்பது கால்நடைகளை மேய்ப்பதற்காகத் தொடக்கத்தில் இருந்தாலும், பின்னாளில் அது ஆட்சிக்கான அடையாளமாக மாறியது. கோல் என்பது கோன் என்று ஆனது. கோன்மை என்றால் தலைமை என்று பொருள் கொள்ளப்பட்டது. மதுரைக் காஞ்சி என்ற சங்க இலக்கியத்தில் ‘கொற்றவர்தம் கோன் ஆகுவை’ என்ற வரிகள் ‘வெற்றிபெற்றவர் தலைமைப்பண்பு பெறுகின்ற’ என்று விளக்குகின்றன.
கோல் - வலன் என்பதே பின்னர் கோவலன் என்று ஆயிற்று. ஏசு பெருமானை ‘நல்ல மேய்ப்பர்’ என்று கூறுவதும், கிறிஸ்தவ மறை மண்டலத் தலைவர்களை ‘ஆயர்’ என்று கூறுவதும் இந்தப் பின்னணியில்தான். இன்று குடியாட்சி மேலோங்கிய நிலையிலும் நமது அரசியல்வாதிகளுக்கு ‘செங்கோல்’ வழங்குவதும் இதன் தொல் எச்சங்களே!
ஆக, முல்லை நிலம் என்பது ஆளுமைக் குடிகளின் தோற்றத்தைக் கொண்டது. புறப்பொருள் வெண்பாமாலை ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி’ என்பதன் உண்மைப் பொருள், ‘கல் என்ற குறிஞ்சி வாழ்வு தோன்றி, மண் என்ற மருத, நெய்தல் வாழ்வு தோன்றாத காலத்தில் தோன்றியது’ என்பதாகும்.
பகடுகள்… மாடுகள்…
குறிஞ்சியையும் முல்லையையும்விட விளைச்சலில் முந்திச் சென்ற நிலம் மருதம் என்றால், அது மிகையாகாது. ஏனென்றால், நிலையான நீர்ப்பாசன வசதி, வண்டல் படிந்த ஆற்றுப்படுகைகள் என்று விளைச்சலுக்கு ஏற்ற பரப்பாக மருத நிலம் இருந்தது.
ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த மிகையான ஊட்டங்கள் நிறைந்த மண், பல மடங்கு விளைச்சலைக் கொடுத்தது. தொழில்நுட்பம் மேம்பட்டது, குறிப்பாகக் கலப்பைகளின் வடிவம் மாறியது. இரும்பாலான கொழுக்களைப் பொருத்திப் பயன்படுத்தி உழவு செய்தனர்.
பெரும்பாணாற்றுப் படையில்,
‘குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி’
- என்று, பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கிற பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை, மருத நிலத்தில் வருகிறது. இதை ஆழமாக ஊன்றி இழுப்பவை வலிமையான பகடுகள் எனப்படும் பெரிய மாடுகள். இவை எவ்வளவு பள்ளம் இருந்தாலும் மண்டி போட்டு இழுக்கும் ஆற்றல் பெற்றவை.
இதை வள்ளுவப் பெருமான் ‘மடுத்தவாயெல்லாம் பகடன்னான்’ என்று, மிகுந்த முயற்சி உடையவனுக்கு இணையாகப் பகடைக் கூறுகிறார். அகன்ற கலப்பைகளில் உடும்பு என்ற விலங்கின் முகத்தைப் போன்ற கொழுக்கள் வலுவான மாடுகள் மீது பொருத்தப்பட்டிருந்தன.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?