உடலே மந்திரம்... இணையம் தந்திரம்!
‘பெரும்பாலான நேரம் நாம் பயப்படுவதைவிட மிகக் குறைவாகவே பாதிப்படைந்திருப்போம். நிஜத்தைவிடக் கற்பனையே மனிதனை அதிகம் வதைக்கிறது’
- லூயி செனெகா, ரோமானியத் தத்துவ ஞானி
உடல்நலனைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருப்பது ஒரு துருவம் என்றால் அளவுக்கு அதிகமாக உடலைப் பற்றிக் கவலைப்படுவதும் ஒரு நோய்தான். இல்லாத நோய்களெல்லாம் நமக்கு இருக்கின்றனவோ எனக் கவலைப்படுவதும் ஒரு நோயே. இதை ‘ஹைப்போகோண்டிரியாசிஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
சிலர், நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளைக்கூடப் பார்க்காமல் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை முதலில் வரிவிடாமல் படிப்பார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அந்தக் கட்டுரைகளில் இருக்கும் நோய்கள் எல்லாம் தனக்கும் இருப்பதாகப் பயப்படுவார்கள். ‘இடது கையில் வலியா? இதய நோயாக இருக்கலாம்!’ எனப் படித்தவுடன் எங்கேயாவது இடித்துக்கொண்டு இடதுகை வலித்தாலும்கூட மாரடைப்புதான் வந்திருக்கிறது எனப் பதைபதைப்பார்கள். அடிக்கடி நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் எனச் சொல்லி தெரு முனையிலேயே ஆட்டோக்களோடு ஒரு ஆம்புலன்ஸையும் நிரந்தரமாக நிற்க வைத்துவிடுவார்கள்.
இணையம், டாக்டர் அல்ல..!
பதற்றப்படும்போது நமது உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கை நடுங்கும். மூச்சு முட்டும். இவற்றையெல்லாம் கவனிக்க ஆரம்பித்துவிட்டால், அவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்.
அதிலும் இணைய வசதிகள் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் இணையத்தில் மருத்துவம் தொடர்பான தகவல்களை மிக எளிதில் பெற முடிகிறது. மருத்துவத் தகவல்கள் பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்தால்தான் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் சிகிச்சை முறைகளையும் பக்க விளைவுகளையும் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஒரு காலத்தில் மருத்துவர்கள் மட்டுமே அறியக்கூடிய தகவல்கள் பலவற்றை, இப்போது ஸ்மார்ட்ஃபோன் உள்ள யார் வேண்டுமானாலும் அறிய முடியும். இது விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்ற வகையில் வரவேற்கத்தக்கதே.
மருத்துவர்கள்கூட நகைச்சுவையாகச் சொல்வதுண்டு ‘எல்லா நோயாளிகளும் முதலில் டாக்டர் கூகுளிடம் காட்டிவிட்டுப் பின் இரண்டாவது ஆலோசனை கேட்கத்தான் மருத்துவர்களிடம் வருகிறார்கள்’ என. ஏனென்றால், ‘டாக்டர் கூகுள்’ நம்மைக் காக்க வைப்பதில்லை. அதைவிட மிக முக்கியம் நம்மிடம் ஃபீஸ் வாங்குவதில்லை.
இருப்பதைக் கொண்டு திருப்தி
சிலருக்கு இதுவே தொந்தரவு கொடுப்பதாக அமைந்துவிடுகிறது. இணையதளங்களில் தரமான மருத்துவப் பக்கங்கள் உள்ளன. ஆனால், பல தளங்கள் ‘அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள்’, ‘மானமுள்ள தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணுங்கள்’ என நமக்கு வாட்ஸ் அப்பில் வருவது போன்ற தகவல்களைத் தரும் தளங்களாகவே இருக்கின்றன. விளைவு? மருத்துவப் புத்தகங்களில் மட்டுமே இருக்கக்கூடிய அபூர்வமான நோய்களெல்லாம் தமக்கு இருப்பதாகப் பலரும் கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த வகை இணைய நோயர்களுக்கு ‘சைபர்கோண்டிரியாக்’ என்று பெயர்.
இன்னும் சிலருக்கு வேறு வகையான தொந்தரவு இருக்கும். தங்கள் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வார்கள். மூக்கு வளைந்திருக்கிறது, முகம் கோணலாக இருக்கிறது என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு பிளாஸ்டிக் சர்ஜன்களிடம் சென்று தங்கள் உடல் உறுப்பைத் திருத்தி அமைக்குமாறு சொல்வார்கள். அதற்கு உலகப் புகழ்பெற்ற உதாரணம்... மைக்கேல் ஜாக்சன்! ‘அனாரக்ஸியா’ என்ற பாதிப்புக்கு உள்ளாகும் சிலர் ஒல்லியாக இருந்தும் உடல் எடை அதிகமாக இருக்கிறது என சைஸ் ஜீரோவை நோக்கிக் கடும் தவமிருந்து விரதமிருப்பார்கள். இப்படிப் பல உதாரணங்களை அடுக்கலாம்.
குட்டையான கால்கள் உள்ள ஒருவரிடம் நண்பர் ஒருவர் கிண்டலாகக் கேட்டாராம் “ஒரு மனிதனின் கால்கள் சராசரியாக எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?” என. அதற்கு அவர் நிதானமாகப் பதிலளித்தாராம் “தரையைத் தொடுமளவுக்கு நீளமாக இருந்தால்போதும்” என. இதுபோல் நமக்குக் கிடைத்துள்ள உடலமைப்பைத் திருப்தியுடன் ஏற்காததன் விளைவே, இதுபோன்ற மனச்சிக்கல்கள்.
உடலைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதற்கும் அளவுக்கு மீறிக் கவனித்துப் பதற்றப்படுவதற்கும் இடையேயான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.
Comments
Post a Comment