பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தவறல்ல!


பட்ட மேற்படிப்பு படித்துவருகிறேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். இருந்தாலும் ஒவ்வொருமுறை தேர்வுக்குத் தயாராகும்போதும், எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. படிக்கிற விஷயங்களில் மட்டுமல்ல; வாழ்க்கை பற்றிகூட அவ்வளவாக நம்பிக்கை ஏற்படுவதில்லை. என்ன செய்வது?

- நடராஜ் மூர்த்தி, நாகர்கோவில்.
நம்பிக்கை என்பது தானாகவே நிகழ்கிறதா, புரிதல் என்பது நிகழ்ந்த பின்பு நம்பிக்கை ஏற்படுகிறதா என்கிற சர்ச்சை வெகு காலமாக இருந்துவந்திருக்கிறது. கணித மேதையும் இயற்பியல் விஞ்ஞானியுமான பிரெஞ்சு தத்துவச் சிந்தனையாளர் ரெனெ தெக்கார்தே (Rene Descartes), “புரிந்துகொள்வதும் நம்புவதும் வெவ்வேறு முறைகளில் நிகழ்கின்றன. கவனிப்பதன் மூலம் மக்கள் ஒரு செய்தியை அறிந்துகொள்கிறார்கள்.
அதற்குப் பிறகு அந்தச் செய்தியை அலசி ஆராய்ந்து, ஏற்றுக்கொள்ளவோ விலக்கவோ செய்கிறார்கள். ஏற்புடைய செய்தி நாளடைவில் நம்பிக்கையாக மாறுகிறது” என்றார். இதற்கு மாறாக, டச்சுத் தத்துவவாதியான பரூச் ஸ்பினோஸா, ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போதே, அதை நம்ப ஆரம்பித்துவிடுவது நிகழ்கிறது என்றார். ஒரு நபர் ஒரு கருத்தைப் பின்னாளில் மாற்றிக்கொள்ள நேரிட்டாலும் அதுவரை அவர் அந்தச் செய்தியில் நம்பிக்கை வைத்திருந்தார் என்று தத்துவ விசாரணைசெய்தார்.
இதைப் பரிசோதித்து உண்மையைக் கண்டறிய அமெரிக்க உளவியலாளர் டேனியல் கில்பெர்ட் முடிவெடுத்தார். இந்தச் சோதனையில் ஈடுபட 71 பேர் முன்வந்தனர். அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தார். இரண்டு கொள்ளைகளைப் பற்றிய செய்திகளை அவர்கள் படித்தபின் அவர்கள் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
அவர்களுடைய மனப்போக்கை மாற்ற, நடுநடுவே பொய்யான செய்திகளும் அவர்கள் படிக்க வேண்டிய விஷயத்தில் இணைக்கப்பட்டன. உதாரணத்துக்கு, படிப்பவர்களின் கோபத்தை அதிகரிக்க, ‘அந்தக் கொள்ளையர்கள் துப்பாக்கியை வைத்திருந்தார்கள்’ என்றும், படிப்பவர்களின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்த, ‘கொள்ளையர்களுக்குப் பசியால் வாடும் சில குழந்தைகள் இருந்தார்கள்’ என்கிற செய்தியும் இணைக்கப்பட்டது.
ஒரு பிரிவினருக்கு உண்மையான செய்திகள் பச்சை வண்ணத்திலும் பொய்யான செய்திகள் சிவப்பு வண்ணத்திலும் கொடுக்கப்பட்டன. இன்னொரு பிரிவினருக்கு வண்ணங்கள் ஏதுமின்றிப் பொய்யான விஷயங்கள் உண்மை செய்திகளுடன் சேர்த்துத் தரப்பட்டன.

முடிவு என்ன?

வண்ணங்களால் வேறுபடுத்தப்படாத பொய்யான செய்தியை வாசித்தவர்கள், வாசித்த செய்தியை நம்பிக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மீது உடனடியாக அனுதாபம் அல்லது கோபம் தெரிவித்தனர். வண்ணங்களால் பிரிக்கப்பட்ட செய்திகளை வாசித்தவர்கள், கிட்டத்தட்ட 6 வருடத்திலிருந்து 11 வருடங்கள் வரை தண்டனை கொடுத்திருந்தனர்.
ஆனாலும், இரு குழுக்களுமே நிர்ணயித்த தண்டனையில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால்,நேரம் கிடைக்கும்போது மனிதர்கள் யோசித்துத் தங்கள் கருத்துகளை அல்லது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்கின்றனர். ஆனாலும் ஸ்பினோஸா வாதிட்டதுபோல முதன்முதலாகப் படிக்கும்போது அல்லது அறியும்போது, நம்பிக்கைகொள்வதும் நிகழ்ந்துவிடுகிறது. இதைப் புரிந்துகொண்டோம் என்றால் ஒரு சாதாரண எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அது நம்பிக்கையாக மாறுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
அறிவியல் தேர்வில் ஒருமுறை தோல்வியடையும் மாணவர், தனக்கு விஞ்ஞானமே வராது என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார். ஆனால், தொலைத்த இடத்தில் பொருளைத் தேட வேண்டும் என்பதைப் போல், எதில் தோல்வியடைந்தோமோ மறுபடியும் அதையே மேற்கொள்ள வேண்டும். சரித்திரம் வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், வெற்றி பெற்றவர்களின் விலாசங்களை விசாரிக்கும்போது, அவர்கள் தொடர் தோல்விகளை மீறித்தான், வாகை சூடியிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

எப்படி நம்பிக்கை வளர்ப்பது?

1. எல்லா நிலைகளிலும் நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை.வெற்றிபெற்ற தருணங்களைவிட, தோல்வியடைந்த சம்பவங்களை ஆய்வுக்கு உள்ளாக்குவது நல்லது.
2. திடீர் வெற்றி என்று எதுவுமில்லை. பல தோல்விகளைக் கடந்துதான்,வெற்றி ஒருவரைச் சந்திக்கிறது.
3. நட்புவட்டத்தை விரித்துக்கொள்வதன் மூலம், ஆழமான வாசிப்பின் மூலம் மற்றவர்களின் அனுபவங்கள், அவர்கள் அடைந்த தோல்விகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் கொண்ட பிரிவை பிளஸ் டூவில் படித்துவருகிறேன். என்னுடைய வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வருவேன். ஆர்க்கிடெக்ட் ஆக ஆசை. ஆனால், மருத்துவம் படிக்க முயலும்படி அப்பா வற்புறுத்துகிறார். அதிலும் எனக்கு விருப்பமிருக்கிறது. இதனால், ஒரே குழப்பமாக இருக்கிறது.

- குமர குருபரன், சென்னை .
பொதுவாக இத்தகைய கேள்விகள் பணிவாழ்க்கைத் தொடர்பானதாக மட்டுமே கருதப்படுகின்றன. ஆனால், இதில் நம் மனதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் மிகவும் உள்ளது. எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இந்த வயதில் வருவது சகஜம்தான். தங்களால் படிக்க முடியாத ஒரு கல்வியை, தங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்கிற பெற்றோரின் எதிர்பார்ப்பைத் தவறாகக் கருத வேண்டியது இல்லை. குழந்தைகளுக்கு பிடிக்காத, அவர்கள் மறுக்கும் படிப்பைத் திணிப்பதுதான் தவறான விளைவுகளை உண்டாக்கும்.
உங்களுடைய கேள்வியிலிருந்து தெரிகிறது, மேற்படிப்பைப் பொறுத்தவரை நீங்கள் இன்னமும் எந்த முடிவுக்கும் வரவில்லை. கணிதமும் உயிரியலும் உங்களின் பாடத்திட்டத்தில் இருப்பதால், இரண்டு விதமான நுழைவுத் தேர்வுகளையும் உங்களால் எழுத முடியும்.
உதாரணத்துக்கு, ஒருவருக்குப் பொறியியல் படிப்பு மீது அதீத ஆர்வம் இருந்து, பெற்றோரின் வற்புறுத்தலால் வெறுப்போடு மருத்துவப் படிப்பில் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த அதீத வெறுப்பில், ஆர்வம் குறைந்து, அவருடைய கவனம் சிதறுவதற்கு வாய்ப்புண்டு. அந்த நிலை உங்களைப் பொறுத்தவரை இல்லை. நீங்கள் இரண்டு படிப்பிலும் சோபிக்க முடியும். குழம்பாமல், இரண்டு விதமான நுழைவுத் தேர்வுகளையும் எழுதுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள்.

சரியான முடிவை எடுப்பது எப்படி?

1. மனதை எதற்கும் ஏற்ற நிலையில் வைத்திருங்கள். கடலில் இருக்கும் திமிங்கிலமாக மட்டும் இருக்க விரும்பாமல், எல்லா நீர்நிலைகளிலும் பிரவேசிக்கும் சிறு மீன் போன்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
2. சில நேரம், நீரை எதிர்த்து நீச்சலடித்துச் செல்வதைவிட, நீரின் போக்கிலேயே நகருவது நல்லது.
3. வீட்டின் கீழ்த்தளத்தைக் கட்டி முடித்துவிட்டு அதற்கு மேலே முதல் தளம் எழுப்புவதைப் போல, ஓரளவு பாதுகாப்பான நிலையை அடைந்த பிறகு, நம் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.
4. விடாமுயற்சி, திறமை, சரியான சந்தர்ப்பங்களில் ஒரு தீர்க்கமான முடிவு, சந்தர்ப்பங்கள் அனுகூலமாக இல்லாதபோது அதனை ஏற்றுக்கொள்வது போன்ற நிலைப்பாட்டில் மனதுக்கு எந்தத் துக்கமுமில்லை.
5. இறுதி முடிவு என்று எதுவுமில்லை. எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால், எந்தவிதமான கல்வியும் நமக்குப் பலனளிக்கும்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?