பொறியியல் என்னும் பொறி: மீட்சிக்கான வழிகள் சில
பொ
றியியல் படிப்பைச் சரிவிலிருந்து மீட்பதற்கான வழிவகைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகின்றன. இதைச் செய்வதில் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களும் இதர கல்வியாளர்களும் பல யோசனைகளை முன்வைக்கிறார்கள்.
மாணவர் மேம்பாடு
இவற்றில் முதன்மையானது பள்ளிக் கல்வியில் மேம்பாடு. ஆங்கிலம், அறிவியல் பாடங்களின் அடிப்படைகளைத் தெளிவாகக் கற்றுக்கொள்ளாமல் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களில் பலர் எதிர்காலத்தில் தடுமாறுகிறார்கள். பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம், கற்றல் – கற்பித்தல் முறையில் மேம்பாடு, பிளஸ் 1 மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்வு ஆகியவை எதிர்கால மாணவர்களுக்கு உதவும் என்று கல்வியாளர்கள் நம்புகின்றனர்.
ஆசிரியரின் தகுதிக்கான அளவுகோல்
பெரும்பாலான பொறியியல் ஆசிரியர்கள் தொழில்நுட்ப அறிவில் மேம்பட்டிருந்தாலும், அவற்றை மாணவர்களுக்குக் கற்றுத்தருவதற்கான முறையான பயிற்சியைப் பெற்றிருப்பதில்லை. துறைசார் அறிவு என்பது வேறு, அதைக் கற்பிக்கும் ஆற்றல் என்பது வேறு. ஆக, ஆசிரியர் தேர்வுக்கான முறையில் கற்பிக்கும் ஆற்றல் முழுமையாகச் சோதிக்கப்பட வேண்டும். அதிலும் சந்தையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும்போது அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய கற்பித்தல் மேம்பாட்டுப் பயிற்சிகளை அவ்வப்போது கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
தரவரிசைப் பட்டியலில் வெளிப்படை
கல்லூரிகளின் தரத்தை அறிய NAAC மற்றும் NBA போன்ற தரச் சான்றுகள் உதவும். இதில் பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை இரண்டாவதான தேசியத் தரச் சான்றிதழ் முக்கியமானது. இவற்றுக்கு அப்பால் தரமான பொறியியல் கல்லூரிகளை அடையாளம் காண உதவியாக அவற்றைப் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை வேண்டுமெனப் பெற்றோர்கள் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள். இதற்காக நீதிமன்றங்களில் முறையிட்டுப் பட்டியல்களை வெளியிடச் செய்ததும் பலமுறை நடந்திருக்கிறது. அப்படி வெளியான பட்டியல்களும் முழுமையானவையாக இல்லை. தமிழகத்தில் வருடந்தோறும் மாணவர்களின் தேர்ச்சியின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியாகிறது. கலந்தாய்வுக்குச் சற்று முன்னதாக வெளியாகும் அவற்றில் முழுமையான தர வரிசைக்குப் பதிலாகத் தற்போது தேர்ச்சி சதவீதம் பட்டியலிடப்படுகிறது. இதர அளவுகோல்கள் அடிப்படையிலான தரவரிசைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
வளாகத் தேர்வுக்கும் கிடுக்கிப்பிடி
அதிக அளவிலான மாணவர்கள் சேர்க்கைக்காக, கவர்ச்சிகரமான ‘வளாகத் தேர்வு’ அறிவிப்புகளைக் கல்லூரிகள் வெளியிடுகின்றன. ஆனால், படோடாபமாய் நடக்கும் இந்த வளாகத் தேர்வுகளின் மூலமாகப் பணிவாய்ப்புப் பெறும் பட்டதாரிகளில் பலருக்கு போதுமான திறன் இல்லாததால் சில மாதங்களில் அந்நிறுவனங்கள் அவர்களை நீக்கும் பரிதாபமும் நிகழ்ந்துவருகிறது. சேர்க்கையைக் குறிவைத்து நடக்கும் இந்த வளாகத் தேர்வுகள் மற்றும் அவற்றின் வழியிலான பணிவாய்ப்புகள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தரமான கல்லூரிகள் மற்றும் அவை அளிக்கும் நேர்மையான வளாகத் தேர்வுகள் மாணவர்களுக்குத் தெளிவாகப் புலனாகும்.
அதற்கும் மேலே போகலாம்
பொறியியல் கல்லூரிகள் புற்றீசலாய்ப் பெருகப் பொதுமக்களின் பொறியியல் கல்வி மீதான மோகமே முக்கியக் காரணம். தற்போது அந்த நிலை படிப்படியாக மாறிவந்தாலும், பொறியியல் படிப்பில் உண்மையான ஆர்வம் கொண்ட மாணவர்கள் உரிய தரமான கல்லூரியில் இடம் கிடைத்தால் மட்டுமே பொறியியல் திசைக்குத் திரும்பலாம். தரமான கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள, பயனுள்ள வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
உதாரணத்துக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் போன்ற இன்னமும் வரவேற்பு இழக்காத பாரம்பரிய அறிவியல் படிப்புகளைப் படிக்கலாம். ஏதோவொரு தனியார் கல்லூரியில் பல லட்சம் செலவழித்துப் பொறியியல் படிப்பதைவிட, நல்லதொரு அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் இந்தப் படிப்புகளை மேற்கொள்ளலாம். பட்டப் படிப்பு முடித்த கையோடு அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதுதல் முதல் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள்வரை இந்தப் படிப்புகளில் சாத்தியமாகும்.
Comments
Post a Comment