சங்கடஹர சதுர்த்தி... ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை... சங்கடம் தீர்ப்பார்; சந்தோஷம் தருவார்!
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்தி, நாளைய தினம் சங்கடஹர சதுர்த்தி நாளில், வழிபடுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் சங்கரன் மைந்தன்.
சிவனாருக்கு மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். இந்தநாளில், விரதம் மேற்கொண்டு சிவ வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். இந்த நாளில் பல பக்தர்கள், ஒரு பொழுது மட்டுமே சாப்பிட்டு, விரதம் மேற்கொள்வார்கள்.
முருகப்பெருமானுக்கு மாதாமாதம் வருகிற சஷ்டி ரொம்பவே அற்புதமான நாள். கந்த சஷ்டி போல், மாதந்தோறும் வருகிற சஷ்டியில் விரதமிருந்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று, வெற்றிவடிவேலனைத் தரிசிப்பார்கள், பக்தர்கள்!
திருவோணம் நட்சத்திர நாளில், திருமால் தரிசனம், வாழ்வில் பல மகோன்னதங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். அதேபோல் ஏகாதசி நாளிலும் விரதம் இருந்து பெருமாளை ஸேவிப்பார்கள் பக்தர்கள்.
மேலும், செவ்வாய் வெள்ளியில் அம்பாளையும் கந்தவேளையும் வழிபடுவது போல், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணுவையும் அனுமனையும் வழிபடுவார்கள். சிரசில் சந்திரனையே பிறையெனச் சூடிக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த நாளாக திங்கட்கிழமையையும் பிரதோஷ நாளையும் குறிப்பிட்டுச் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சரி... விநாயகருக்கு?
கணபதியப்பன், முழுமுதற் கடவுள் அல்லவா. எனவே எல்லா நாளும் பிள்ளையாரப்பனுக்கு உகந்த நாட்களே! மேலும் எல்லா தெய்வங்களை வணங்குவதற்கு முன்னதாகவும் வீட்டில் ஹோமம் மற்றும் பூஜைகளைச் செய்யும் போதும், முதலில் விநாயகர் வழிபாட்டில் இருந்துதான் தொடங்குவார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆனாலும் மாதந்தோறும் வருகிற சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. இந்த சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், எவரொருவர் பிள்ளையாரின் சந்நிதியில் நின்று, மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்கிறாரோ, அவரின் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து அவர்களை சந்தோஷக் கடலில் நீந்தச் செய்வார் சங்கரன் மைந்தன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்!
நாளை வியாழக்கிழமை 5ம் தேதி, சங்கட ஹர சதுர்த்தி. இந்த அற்புதமான நாளில், மாலையில் சிவாலயங்களில் , அம்மன் கோயில்களில், முருகன் கோயில்களில் உள்ள விநாயகர் சந்நிதியில், அவருக்கு பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களப்படும். அப்படியிருக்க, தனியாக, கோயில் கொண்டிருக்கும் தலங்களில், பூஜை வழிபாட்டுக்கும், ஆராதனை அலங்காரங்களுக்கும் சொல்ல வேண்டுமா என்ன?
சங்கடங்கள் தீரவேண்டும்தானே. நாளைய சங்கடஹர சதுர்த்தியை மறந்துடாதீங்க. விநாயகருக்கு ஒரேயொரு அருகம்புல் மாலை வாங்கிச் சார்த்தினாலே போதும்... அதில் குளிர்ந்து போய், நமக்கு அருளும் பொருளும் அள்ளித் தருவார் ஆனைமுகத்தான்!
முடிந்தால், சுண்டலோ பொங்கலோ, கேசரியோ பாயசமோ நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையும் இனிக்கச் செய்வார் பிள்ளையாரப்பன்!
Comments
Post a Comment