வெற்றிவேல் முருகனுக்கு... நகரத்தார் ஏற்படுத்திய பழநி பாதயாத்திரை
முருகப்பெருமான் என்றதும் ஆறுபடை வீடு நினைவுக்கு வரும். ஆறுபடை வீடு பற்றி யோசிக்கும் போதே, அதில் முக்கியமான, எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிற பழநி ஞாபகத்துக்கு வரும். பழநியம்பதியை நினைக்கும் போதே, தைப்பூசத் திருநாள் சட்டென்று நம் நினைவில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.
அப்படி தைப்பூச விழா கண்ணில் நிழலாடுகிற அதேவேளையில், பாதயாத்திரையும் மனதில் வந்துபோகும். அந்தப் பாதயாத்திரையை உருவாக்கியவர்கள், செட்டிநாட்டு மக்கள். குறிப்பாக... நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டி மக்கள்!
திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம், கோவை, பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி… என பல்வேறு ஊர்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், பாத யாத்திரையாக பழநிக்கு வருகின்றனர். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது செட்டிநாடு; துவக்கி வைத்த பெருமைக்கு உரியவர்கள் நகரத்தார் எனப்படும் செட்டிமக்கள்தான்!
வியாபாரம் செழிப்பதற்கு இறையருளே காரணம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, இறைவனுக்குக் கொடுக்க வேண்டும் என அதை செயல்படுத்தி வருகின்றனர் செட்டி இனத்தவர். ஆன்மிகம் ஒரு கண்... வியாபாரம் இன்னொரு கண்!
காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை முதலான பெரிய நகரங்களைக் கொண்ட அற்புதமான பகுதி- செட்டிநாடு! மலேசியா, சிங்கப்பூர் என கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்றவர்களில் பெரும்பாலானோர் செட்டிமக்கள்தான்! கடிதமோ கணக்கோ… பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, அடுத்து ‘சிவமயம்’ என்று எழுதுவது செட்டிநாட்டு மக்களின் வழக்கம்! சிவனாருக்கு தரும் முக்கியத்துவத்துடன் முருகப்பெருமானையும் வணங்கி வந்தனர். தங்கள் வாரிசுகளுக்கு பழநியப்பன், அழகப்பன், வேலப்பன், முருகப்பன், செந்தில்நாதன், செந்திலப்பன், மெய்யப்பன், முருகம்மை, தெய்வானை, அழகம்மை, வள்ளியம்மாள், மெய்யம்மை என்றெல்லாம் பெயர் சூட்டினர்.
பலதரப்பட்ட வியாபாரங்கள் செய்தனர். அதில் உப்பு வியாபாரமும் ஒன்று. மழைக்காலம் முடிந்து பனிக்காலமும் வந்தது. குதூகலமானார்கள் செட்டிமக்கள் சிலர். ‘இனி உப்பு வியாபாரத்துக்குச் செல்லலாம்’ என சந்தோஷமும் உற்சாகமும் பொங்க, வண்டியில் உப்பு மூட்டைகளை ஏற்றியபடி ஊர்ஊராகச் சென்றனர். விற்றனர்.
நத்தம், சிங்கம்புணரி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆயக் குடியைக் கடந்து பழநியை நெருங்கினர். உப்பு மூட்டைகள் அனைத்தும் விற்றிருந்தன. கையில் உள்ள பணத்தை எண்ணிப் பார்த்து, ‘இது தர்மத்துக்கு... அது முருகப்பெருமானுக்கு’ என்று சொல்லி பணத்தை தனித்தனியே முடிந்து கொண்டு, மலையேறினார்கள்.
பழநி முருகனை, பழநியப்பனை, தண்டாயுதபாணியைக் கண்ணார தரிசித்தார்கள். ‘இந்தாப்பா முருகா... இது உன் பங்கு’ என்று லாபத்தின் ஒரு பகுதியை உண்டியலில் செலுத்தினார்கள். மலை இறங்கியதும் இயன்ற அளவில் அன்னதானம் செய்து, வண்டி பூட்டிக் கொண்டு ஊர் திரும்பினார்கள்.
இப்படிச் செழித்து வளர்ந்து, பக்தியும் இல்லறமும் ஒருசேர வாழ்ந்து வந்த இவர்களின் கனவில் தோன்றிய முருகன், ‘என்னை தரிசிப்பதற்காகவே பழநிக்கு வாருங்கள். நடந்தே வாருங்கள்; உங்கள் வம்சத்தை இன்னும் செழிக்கச் செய்கிறேன்’ என்று அருளினாராம்!
காரைக்குடி (வெள்ளை குமரப்பச் செட்டியார்), கண்டனூர்(சாமியாடி செட்டியார்) மற்றும் நெற்குப்பை (பூசாரி செட்டியார்) ஆகிய ஊர்களில் இருந்து தனித்தனியே கிளம்பிய செட்டிமார்கள், காரைக்குடி அருகில் உள்ள முருகப்பெருமான் கோயில் கொண்ட குன்றக்குடியைக் கடந்தார்கள். அப்போது அங்கே ஓரிடத்தில் இவர்கள் சந்தித்தார்கள். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். சேர்ந்தே பழநிக்கு நடந்து சென்றார்கள். முருகப்பெருமானைத் தரிசித்தனர். இதை ஊர்மக்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள். நெகிழ்ந்தார்கள். பிறகு நகரத்தார் பலரும் யாத்திரை செல்லத் துவங்கினார்கள்.
பழநியும் பாதயாத்திரையும் செட்டிநாட்டில் இன்னும் இன்னுமாகப் பரவின. காலப்போக்கில், நாட்டார் எனப்படும் அம்பலகார இன மக்களும் பாத யாத்திரையாக பழநிக்குச் செல்லத் தொடங்கினார்கள். அடுத்து, அந்தப் பகுதி மக்கள் இனப் பாகுபாடின்றி எல்லோரும் பழநி பாதயாத்திரையை மேற்கொண்டார்கள்.
இன்றைக்கு, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநி பாதயாத்திரை செல்கின்றனர்.
”அழகன் முருகப்பனை வணங்குவதில் சைவ-வைணவம் என்கிற பாகுபாடு இல்லை. ஜாதி வித்தியாசங்களும் கிடையாது. ஆண் பெண் பேதமில்லை. கார்த்திகை அல்லது மார்கழியில் மாலை அணியத் தொடங்குகிறார்கள். முருகனுக்கு உகந்த, செழுமையைக் குறிக்கிற பச்சை நிற வேஷ்டியை கட்டிக் கொண்டு, விரதம் மேற்கொள்கின்றனர். ஆங்காங்கே வீடுகளிலும் கோயில்களிலும் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்கின்றனர். அன்னதானங்களில் ஈடுபடுகின்றனர். சொல்லப்போனால், அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஐப்பசிக்கு முன்னதாக அறுவடை முடிந்திருக்கும். ஆகவே மூடைமூடையாக நெல்லுக்கும் அரிசிக்கும் பஞ்சமிருக்காது. கூடவே நெல் விற்ற பணமும் கையில் சேர்ந்திருக்கும். ஆகவே, இவர் வீடு, அவர் வீடு என்றில்லாமல் பெரும்பாலான வீடுகளில், முருக பூஜையும் அன்னதானமும் என ஊரே களைகட்டும். ஒருவருக்கொருவர் இருப்பதை இன்னொருவருக்குக் கொடுத்துப் பகிர்ந்து கொள்கிற விஷயம்... முருக பக்தி எனும் பெயரில், மிக அற்புதமாக நடந்தேறும் என்கிறார் ராமு.
தைப்பூசத் திருநாளுக்கு ஒருவாரம் முன்னதாக, அதாவது ஏழெட்டு நாட்களுக்கு முன்னதாக பாதயாத்திரையைத் தொடங்கிவிடுகின்றனர் என்கிறார்கள் காரைக்குடிக் காரர்கள்.
நகரத்தார் பற்றிச் சொல்லும் போது, அரண்மனைப் பொங்கல் என்கிற விஷயத்தையும் சொல்லியாக வேண்டும்.
அதென்ன அரண்மனைப் பொங்கல்?
ஆயக்குடி ஜமீனைச் சேர்ந்த ராணிக்கு கடும் வயிற்றுவலி. இவரின் கனவில் ஒருநாள் முருகப்பெருமான் தோன்றி..., பழநிக்கு நடந்து வருபவரிடம் விபூதி வாங்கிப் பூசிக்கொள்’ என அருளினாராம்!
அதன்படியே வெள்ளை குமரப்பச்செட்டியார் என்பவர், ராணியம்மாளுக்கு விபூதி கொடுக்க... ராணியின் வயிற்று வலி சட்டென்று நிவர்த்தியானதாகச் சொல்கிறார்கள். இதில் நெகிழ்ந்துபோன ஜமீனும் ராணியும் வருடந்தோறும் தைத் திருநாளின் போது, பொங்கல் சீர் அனுப்பி வைத்தார்களாம்!
ஜமீன் அரண்மனையில் இருந்து பொங்கல் சீர் வந்ததால், வெள்ளை குமரப்பச் செட்டியார் வீட்டுக்கு, அரண்மனைப் பொங்கல்காரர்கள் வீடு என்று பெயர் ஏற்பட்டது. அரண்மனைப் பொங்கல்கார வீட்டு வம்சத்தைச் சேர்ந்த பழனியப்பன், அவரின் சகோதரர் அழகப்பன் முதலானோர் இன்றைக்கும் பழநி பாதயாத்திரை சென்று வருகின்றனர்; ஆயக்குடி ஜமீன் வழங்கிய தம்புரு, வாங்கா எனும் திருச்சின்னங்கள் அதாவது வாத்தியக் கருவிகள் இசைக்க… இவர்கள் நடந்து வர… எட்டூருக்குக் கேட்கும் இந்த ஓசை. இதைக் கொண்டே பாதயாத்திரை புறப்பட்டாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டு, அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள், வீட்டில் விளக்கேற்றி, சுவாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, வாசலில் சிதறுகாய் உடைத்துவிட்டு, நடையைத் தொடங்குவார்களாம்!
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைப் பொருத்தவரை, நகரத்தாரும் நாட்டாரும் மிக முக்கியமானவர்கள். நகரத்தாரைப் போலவே நாட்டார் எனப்படும் வல்லம்பர் இனத்தவரும் முருகப் பெருமானை மனமுருகி வழிபடுகிறவர்களாக இருக்கின்றனர்.
ஒருகட்டத்தில், நாட்டார் இன மக்களும் பாதயாத்திரை செல்லத் தொடங்கினார்கள்.
அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்...
Comments
Post a Comment