வேலை வேண்டுமா?- சிண்டிகேட் வங்கி அதிகாரி ஆகலாம்
வ
ங்கிப் பணியில் சேர விரும்பும் திறமையான பட்டதாரிகளைத் தேர்வுசெய்து அவர்களை வங்கி, நிதி தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance) படிக்கவைக்கிறது சிண்டிகேட் வங்கி. மேலும், அவர்களைத் தங்களது வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தவும் செய்கிறது. அந்த வகையில், தற்போது 500 பட்டதாரிகளைத் தேர்வுசெய்ய இருக்கிறது.
உதவித்தொகையுடன் கல்வி
இதில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும். முதலில் தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வுசெய்யப்படுபவர்கள் பெங்களூரு மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீஸ் கல்லூரி, நொய்டாவில் உள்ள நிட்டில் எஜுகேஷன் இண்டர்நேஷனல் கல்லூரியில் வங்கியியல் நிதி முதுகலை டிப்ளமா படிப்பில் சேர்க்கப்படுவார்கள். இங்கு 9 மாதங்கள் படிக்க வேண்டும். மாதம் ரூ.3,000 உதவித்தொகையாக வழங்கப்படும். படிப்புக் கட்டணம் ரூ. 3.5 லட்சத்துக்கு சிண்டிகேட் வங்கியே கல்விக் கடன் அளிக்கும். படிப்பு முடிந்து பணியில் சேர்ந்ததும் ஏழாண்டு காலத் தவணையாகக் கடன்தொகை சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படும். 9 மாத காலப் படிப்பை முடித்தவுடன் சிண்டிகேட் வங்கிக் கிளையில் 3 மாதங்கள் பணியிடைப் பயிற்சி (Internship) பெற வேண்டும். அப்போது மாதம் ரூ.15 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். இப்பயிற்சியை முடித்ததும் சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்துவிடலாம்.
தேவையான தகுதியும் தேர்வுமுறையும்
உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய இந்த முதுகலை டிப்ளமா படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாகக் குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தகுதியானோர் டிப்ளமா படிப்புக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தைப் (www.syndicatebank.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியத் தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 2018 ஜனவரி 17.
எழுத்துத் தேர்வு: 2018 பிப்ரவரி 18.
Comments
Post a Comment