அதிசிறந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆவார்களா?



பெண் கல்வி உரிமைக் குறித்து கென்யாவில் உள்ள பள்ளி மாணவர்களிடம் உரையாற்றும் ஜியாதீன் யூசஃப்ஸாய். உடன்: மலாலா.
ருபது ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஆசிரியர் பணியில் சேர்ந்தபோது, என் தந்தையுடைய நண்பர் ஒருவர், “உன்னிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்த்தேனே ஜியாதீன். அரசியல் தலைவராகவோ போலீஸ் உயரதிகாரியாகவோ ஆகியிருக்கலாம். ஆனால், வெறும் ஆசிரியர் ஆகிவிட்டாயே!” என்றார் என்னிடம்.
நான் அவரிடம் சொன்னேன்: என்னுடைய வகுப்பு குழந்தைகளில் ஒருவருக்குத் தலைவராகும் உத்வேகத்தை அந்த ஆண்டு என்னால் ஏற்படுத்த முடியுமென்றால், அடுத்த ஆண்டு இன்னொரு குழந்தைக்கும் ஏற்படுத்துவேன், இப்படியே என்னுடைய பணிவாழ்க்கை முழுவதும் ஆண்டுக்கு ஒரு தலைவரை உருவாக்குவேன். சமூகத்துக்கான என்னுடைய பங்களிப்பாக இதை நினைத்துப் பெருமிதம் கொள்வேன்.

போதுமான வருமானம் இல்லை!

கல்வியாளர்கள் தேசத்தைக் கட்டமைப்பவர்கள் என்பதை இவ்வுலகுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய சமூகம், தேசம் மற்றும் உலகத்தின் எதிர்காலம் குறித்தும், சக மனிதர் குறித்தும் உண்மையான அக்கறை நமக்கு இருக்குமானால் நல்லாசிரியர்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
ஆனால், நல்ல குடிமக்களை உருவாக்குவதில், பொருளாதாரத்தை வளர்ப்பதில், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பெரும்பங்கை நம்முடைய தலைவர்கள் அங்கீகரிக்க அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் சம்பளமே தரப்படுவதில்லை. ஆப்பிரிக்காவின் பணக்கார நாடான நைஜீரியாவில் உள்ள 13 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் போய்ச் சேரவில்லை.
பாகிஸ்தானில் மாணவனாக நான் இருந்த காலம் அது. ஒரு நாள் ஆசிரியர் அறையைக் கடந்துபோய்க்கொண்டிருந்தேன். அப்போது தங்களுடைய குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச்செல்லக்கூடப் போதுமான வருமானம் இல்லை என்று என்னுடைய ஆசிரியர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டதைக் கேட்டது இப்போது என் நினைவுக்கு வருகிறது.

உலக அளவில் ஆசிரியர் பற்றாக்குறை

மருத்துவர்கள், பொறியாளர்கள், கணினி விஞ்ஞானிகள் ஆகியோருக்கு இணையாக ஆசிரியர்களும் நடத்தப்படும் நாள் வரும் என்று நம்புகிறேன். ஆனால், தாங்கள் தேர்ந்தெடுத்த பணிவாழ்க்கை காரணமாகத் தங்களுடைய குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் எனத் தெரிந்த பிறகும் அதிசிறந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆவார்களா என்ன?
யுனெஸ்கோவின் கணக்கெடுப்பின்படி, 2030-ம் ஆண்டுக்குள் 6 கோடியே 90 லட்சம் ஆசிரியர்கள் உலக அளவில் தேவை. இவர்கள் மூலம், பள்ளியில் படிக்கும் வயதில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு வரவழைக்க முடியும். பொதுவாக ஆசிரியர் போதாமையைச் சரி செய்யத் தகுதி குறைந்தவர்களை ஆசிரியராக நியமிக்கும் வழிமுறையில் அரசுகள் இறங்கிவிடுகின்றன. ஆனால், தகுதி படைத்த ஆசிரியர்கள் மட்டுமே நம்முடைய குழந்தைகளைத் தலைவர்களாக மாற்ற முடியும்.
இந்தக் கோடையில் நானும் மலாலாவும் நைஜீரியாவின் மைதுகூரி நகருக்குச் சென்றிருந்தோம். வெடிகுண்டு வெடிப்புகளுக்கும் குழந்தை கடத்தல்களுக்கும் மத்தியில் எப்படியாவது குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தக்கவைக்கத் துடிக்கும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களையும் தலைவர்களையும் நாங்கள் சந்தித்தோம். படிப்பறிவே அவ்வளவாக இல்லாத ஒரு ஆசிரியரையும் சந்தித்தோம். தன்னுடைய மாணவர்களுக்கு உதவும் முனைப்பு அவரிடம் தென்பட்டது. ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கான கல்வியோ பயிற்சியோ அவரிடம் இல்லை.
முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களைப் பள்ளிகள் நியமிக்கும்போது, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே படிப்பில் பின்தங்கி நிற்பார்கள். அதேபோல மனப்பாடக் கற்றல் முறையிலிருந்து விலகி விமர்சனக் கூறுகள் அவர்களுக்குக் கைவரப்பெறும். தங்களுடைய குழந்தைகள் சிறப்பாகப் படித்தால் பெற்றோரும் அவர்களுடைய பள்ளிப் படிப்பைத் தொடர முன்வருவார்கள். ஆனால், மோசமான பயிற்சியும் பரிதாபமான சம்பளமும் பெற்ற ஆசிரியர்கள் வகுப்பெடுத்தால், அவர்களிடம் படிப்பதற்குப் பதிலாகத் தங்களுடைய குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது அல்லது அவர்களுக்குக் கல்யாணம் செய்துவைப்பதே மேல் என்று அவர்களுடைய குடும்பம் நினைக்கக்கூடும்.

ஆசிரியைகள் தேவை

அதிகத் திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் திராணி எங்களுக்கு இல்லை என்றே சில தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ஒரு தேசத்தின் பொருளாதார வளத்தையும் வளர்ச்சியையும் கல்வியின் தரம் நேரடியாகப் பாதிக்கும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஒரு ஏழை நாடு பணக்கார நாடாக மாற வேண்டும் என்று நினைத்தால் அது கல்வியில் முதலீடு செய்ய வேண்டும். கல்வியில் செய்யப்படும் முதலீடு நல்லாசிரியர்கள் நியமனத்திலிருந்து தொடங்குகிறது.
அதிலும், அதிக எண்ணிக்கையில் ஆசிரியைகளை ஊக்குவித்து, பணியமர்த்தி அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாகப் பெண் கல்வியில் பின்தங்கியிருக்கும் சமூகங்களிலிருந்து முதன்முறையாக முன்வரும் பெற்றோர் தங்களுடைய பெண் பிள்ளைகளை ஆண் ஆசிரியர்களிடம் அனுப்பிப் படிக்கவைக்க அஞ்சுவார்கள். அதுமட்டுமல்லாமல், ஆசிரியைகள் இருக்கும் வகுப்பில் பெண் குழந்தைகள் கூடுதல் மணிநேரம் தங்கியிருந்து படிக்கத் தயாராக இருப்பார்கள். யுனெஸ்கோவின் ஆய்வறிக்கைப்படி கூடுதல் சதவீதத்தில் ஆசிரியைகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளிலிருந்து படித்துவந்த சிறுமிகளில் பலர் மேற்படிப்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் தற்போது வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 1,400 ஆசிரியர்கள் மட்டுமே பெண்கள். இதனால்தான் ‘ஆப்கானிஸ்தானுக்கான மலாலா நிதி உதவி கற்பித்தல்’ அமைப்பைத் தொடங்கினோம். இதன் மூலம் திறன்வாய்ந்த உத்வேகம் படைத்த பெண் பட்டதாரிகளைத் தேர்வுசெய்து ஆப்கானிஸ்தானில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பணியமர்த்திவருகிறோம்.
பாதுகாப்பான, ஆரோக்கியமான, வளமான உலகைக் கட்டமைக்க கல்வி மட்டுமே சிறந்த வழி. கல்வியில் கூடுதல் முதலீடு செய்வதாகக் கடந்த மாதம் ஐ.நா.சபையில் நடைபெற்ற பொதுச் சபையில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதைப் படிக்கும் ஆசிரியர்களுக்கு: உலகின் மிக உயரிய பணியை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். நெருக்கடியான சூழலில் இப்போது நீங்கள் இருந்தாலும், உங்களுடைய மாணவர்களுக்கு ஊக்கமளிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனை ஒரு நாள் கண்கூடாகக் காணவிருக்கிறீர்கள். பல வருடங்களுக்கு முன்பு நான் படிப்பு சொல்லிக்கொடுத்த மாணவர்களை இப்போது சந்திக்கிறேன். தங்களுடைய சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் அவர்களைக் கண்டு பூரிக்கிறேன்.
கட்டுரையாளர், கல்வியாளர், பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பெண் கல்விப் போராளி, மலாலாவின் தந்தை மற்றும் உலகளாவிய கல்விக்கான ஐ.நா. சபையின் சிறப்பு ஆலோசகர்

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?