பணிவாய்ப்பைப் பறிக்கும் ரோபோட்!
‘சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இயந்திரங்கள் இன்னமும் பெறவில்லை. அப்படி நடந்துவிட்டால் அதுவே மனித அழிவுக்கான தொடக்கமாக இருக்கும்’ என்று அபாய அறிவிப்பு விடுத்தவர் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். அவர் கூற்றின்படி தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செறிந்த இயந்திரங்களால் பரவலாகப் பணிவாய்ப்புகள் பறிபோவதை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 2018-ல், செயற்கை நுண்ணறிவின் பாய்ச்சலை உலகம் முழுவதுமாக உணரவிருப்பதால், உயர்கல்வி படிப்பவர்களும் வேலைவாய்ப்பு தேடுபவர்களும் சுதாரிக்க வேண்டிய தருணம் இது.
ஆட்டம் கண்ட ஐ.டி.
உலக அளவில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. சுமார் 40 லட்சம் இந்தியப் பணியாளர்கள் இத்துறையை நம்பி உள்ளனர். ஆனால், அத்துறை இப்போது ஆட்டம் கண்டதில் பெருமளவிலான ஊழியர்கள் பணி இழந்து வருகின்றனர். லே ஆஃப் என்ற பெயரில் முன்னறிவிப்பு இன்றிக் கொத்துக்கொத்தாகப் பணியாளர்களை ஐ.டி. நிறுவனங்கள் வெளியேற்றுகின்றன. சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவின் புதிய விசா நடைமுறைகள் ஆகியவற்றுடன் ரோபோட்களின் பயன்பாடு இந்த நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணம். மனித உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்ட தொழிற்சாலைகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்படத் தொடங்கிய ரோபோட்கள் தற்போது மனிதர்களின் அறிவாற்றல் அவசியமான துறைகளுக்கும் கொண்டுவரப்பட்டுவிட்டன.
சமூகத்தைப் பாதிக்கும் வேலையிழப்பு
சர்வதேசத் தரவு நிறுவனத்தின் (International Data Corporation) அறிக்கையின்படி, உலகின் எதிர்கால வேலை எதுவும் இனிப் பணிப் பாதுகாப்புக்குரியது அல்ல. சர்வதேச ரோபோட்டிக்ஸ் கூட்டமைப்பின் தகவலின்படி தொழில் துறையில் தற்போது வியாபித்திருக்கும் ரோபோட்களின் எண்ணிக்கை 20 லட்சம். 2025-ல் 60 லட்சம் ரோபோட்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமிக்கவிருக்கின்றன. இந்தியா உட்பட வாகனத் தொழிற்சாலைகளில் 70 சதவீதத் தொழிலாளர்களின் இடத்தில் ரோபோட்கள் ஆக்கிரமித்து உள்ளன. தற்போது பரிசோதனை அளவில் இருக்கும் ஓட்டுநர் அற்ற வாகனங்கள், சாலைக்கு வரும்போது 2032-ல் 50 சதவீதம் வாகன ஓட்டுநர்கள் வேலை இழப்பார்கள். விநியோக சேவைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களை ‘ட்ரோன்’ எனப்படும் ஆளற்ற சிறிய வானூர்திகள் பாதித்திருக்கின்றன.
அதிலும் உலக வங்கி, அடுத்த 20 ஆண்டுகளில் வளர்ந்துவரும் நாடுகள் தற்போதைய பணியிடங்களில் 57 சதவீதம்வரை சரிவைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில் இத்தகைய அதிபயங்கர வேலைவாய்ப்பின்மை என்பது மிகப் பெரிய சமூக-பொருளாதாரச் சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும்.
எதிர்கொள்வது எப்படி?
செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு தவிர்க்க முடியாதது. தட்டச்சு இயந்திரம் அறிமுகமானபோதும் பின்னர் அந்த இடத்தைக் கணினிகள் ஆக்கிரமித்தபோதும் உண்டான அதிர்வுகளுக்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் தொழிலாளர்கள் தங்களைப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றமாதிரி தகவமைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், மனிதனுக்கு மாற்றாக இயந்திரங்கள் வருவது என்பது ஒட்டுமொத்த தொழிலாளர் சமூகத்துக்கும் எதிரான நடவடிக்கை. இந்நிலையில், அதிக அளவிலான பணி இழப்புகளைத் தவிர்க்க அரசு கொள்கை சீரமைப்புகளை மேற்கொள்வது அவசியம்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிகளில் இறங்குவதும் தொழிற்சாலைகளில் அதன் ஊடுருவலை ஒழுங்குபடுத்துவதும் முக்கியம். தேசப் பாதுகாப்பு, அரசாளுமை, திட்டங்களைச் செயல்படுத்துதல், கல்வி வளர்ச்சி போன்ற தேவையான திசைகளில் இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளை மடைமாற்றலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்கால மாற்றத்துக்கு ஏற்ற படிப்புகளைப் பரிசீலிப்பது அவசியம். வேலை தேடுபவர்கள் தங்கள் கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்வதும், தேவையான தொழிற்பயிற்சிகளில் கவனம் செலுத்துவதும் பயன் அளிக்கும்.
படிப்பை முடித்தவர்கள் திறன் மேம்பாட்டுக்காகக் கூடுதலான சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்புகளையோ பணி அனுபவப் பயிற்சிகளையோ பெறலாம். தொலைத்தொடர்பு, நிதி, சட்டம், புவியியல், மருந்து உற்பத்தி, மருத்துவச் சேவை, சில்லறை விற்பனை, மொபைல் டெக்னாலஜி, மின் வணிகம், உள்கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளும் அவை சார்ந்த வேலை வாய்ப்புகளும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும் எனக் கணிக்கப்படுகிறது.
ஐ.டி. துறையின் மென்பொருள் சோதனை, வாடிக்கையாளர் சேவை போன்றவை மதிப்பிழந்தாலும், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ் மற்றும் அனலிடிக்ஸ் சார்ந்த படிப்புகள் இனி முக்கியத்துவம் பெறும். காலத்துக்கேற்ற மாற்றமாக விண்வெளி ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரபுசார் எரிசக்தி தொழில் நுட்பம், நானோ மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி போன்றவை புதிய உயர்கல்வித் துறைகளை உருவாக்கும்.
Comments
Post a Comment