படிப்பில் மந்தம், திசை மாறும் வாழ்க்கை: மருத்துவக் காரணம் என்ன?
ஒரு மாணவன் சரியாகப் படிக்காமல் இருப்பதற்கும் திசை மாறிப் போவதற்கும் இடையே என்ன நடக்கிறது? இந்தப் பிரச்சினையில் எல்லா நேரமும் நாம் நம்புவதுபோலச் சம்பந்தப்பட்ட மாணவன் மட்டும்தான் பிரச்சினைக்குக் காரணமா? வேறு மருத்துவப் பிரச்சினை காரணமாக இருக்கலாமா?
சட்டத்தை மீறி நடப்பவர் எவராக இருந்தாலும், எப்பொழுதும் அவர்கள் சட்டத்துக்குப் புறம்பான, தவறான பாதையில் நடப்பதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கும். சில நேரம் அவர்களுடைய சமூகச் சூழ்நிலைகள், அவர்களை மாறுவதற்கு அனுமதிக்காது. அதுபோல், மைதானங்களில் விளையாட ஆர்வமில்லாத குழந்தைகள், பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கும். அந்தக் கதையைக் கண்டுபிடித்துக் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து அவர்களுக்கான தனித்திறமைகளைக் கண்டுபிடித்து ஊக்குவிப்பது ஆசிரியர்கள், பெற்றோர் கடமை.
ஆனால், இன்று மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்விமுறையில் கற்றலில் பின்தங்கிய குழந்தைகளை ஆசிரியர்கள் கண்டுகொள்ளாததும், பெற்றோர் அவர்களைக் கடுஞ்சொற்களால் திட்டுவதும் தொடர்கிறது. அதனால், ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தைகள் பள்ளிகள் செல்ல மனமில்லால் திசை மாறிய பறவைகளாகத் தவறான நட்பு ஏற்பட்டு எதிர்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
திசை மாறிய வாழ்க்கை
இதுகுறித்து மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த மனநல நிபுணர் டாக்டர் விக்ரம் ராமசுப்பிரமணியன், தன்னிடம் சிகிச்சை பெற வந்த ஒருவரை மையமாக வைத்து விளக்கியது:
மதுரையில் ஒரு தெருவில் போதை நிலையில் சண்டையிட்ட ரஞ்சித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 15 வயது இளைஞர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரைப் பரிசோதித்ததில், அவர் இருண்ட பாதைக்குச் சென்றதன் பின்னணி வெளிவந்தது.
தொடக்கப் பள்ளியில் சாதாரணச் சொற்களையும் வாசிக்க அவன் சிரமப்பட்டிருக்கிறான். சின்ன வயசு என்பதால், யாரும் அதைப் பெரிதாகச் சட்டை செய்யவில்லை. ஆனால், அடுத்தடுத்த வகுப்புகளில் அவனுடைய செயல்திறன் கணிசமாகக் குறையத் தொடங்கியது கவனம் பெற ஆரம்பித்தது.
அவனுடைய பெற்றோர்கள், அதற்காக அவனைக் கடிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அவன் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், கடுஞ்சொற்கள் போன்றவை ‘தான் உபயோகம் அற்றவன்’ என்ற மனநிலையை அந்தச் சிறுவனின் மனதில் தோற்றுவித்துவிட்டன.
டியூஷன் வகுப்புகள், பள்ளியைப் புறக்கணிப்பது எனத் தொடங்கி ஊரைச் சுற்ற ஆரம்பித்து அப்பகுதி ரவுடிகள் உடன் சுற்ற ஆரம்பித்தான். ரஞ்சித்தின் பெற்றோர்கள் அவன் பள்ளியில் முன்னேற முயன்றுகொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தபோது, ரவுடிகளின் வாழ்க்கை முறையை ரஞ்சித் பின்பற்ற ஆரம்பித்தான்.
யாருடைய புரிதல் குறைபாடு?
தங்களுடைய மகன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறான் எனச் சந்தேகித்து, ஒரு கட்டத்தில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவனுடைய பழக்கவழக்கங்கள் அவனுடைய மன ஆற்றாமையின் காரணமாகத் தோன்றியது என்றாலும், இந்தப் பிரச்சினையின் ஆணிவேரோ வேறிடத்தில் இருந்து.
ரஞ்சித்துக்கு ‘டிஸ்லெக்சியா’ (கற்றல் குறைபாடு) இருந்தது. டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் அதிகப் புத்திக்கூர்மை உடையவர்களாக இருந்தாலும், கற்றலில் மட்டும் அவர்களுடைய வயதுக்குப் பொருந்தாத வகையில் பின்தங்கி இருப்பார்கள். மிக மெதுவாக வாசித்தல், எழுதுதல், வாசிப்பதைப் புரிந்துகொள்வதில் தாமதம், எழுத்துகள், வார்த்தைகளைத் தவறவிடுதல் போன்றவற்றை இவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
டிஸ்லெக்சியா குறித்துப் போதுமான விழிப்புணர்வு இருந்திருந்தால், படிப்புக்காக ரஞ்சித்தை பெற்றோர் தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். அவனுடைய போக்கில் அணுகி ஊக்கம் கொடுத்து நன்கு கவனித்துக்கொண்டு இருந்திருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால், அவன் வெளி இடங்களில் போதையைத் தேடி அலைந்திருக்க மாட்டான். எதிர்க்கும் குணத்தோடு வன்முறையிலும் ஈடுபட்டிருக்க மாட்டான்.
யாருக்குப் பாதிப்பு?
பொதுவாக, 5 - 10% குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகிறார்கள். இவர்களைக் கவனிப்பதற்காகவும் கற்றுக் கொடுப்பதற்காகவும் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முறைப்படியான வாசிப்புப் பயிற்சி மூலம் டிஸ்லெக்சியாவில் காணப்படும் குறைபாடுகளைப் பெருமளவு நிவர்த்தி செய்துவிட முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை நடைமுறைப்படுத்தச் சிறப்புக் கல்வி அவசியம். தவிரவும், வாசிப்பை மட்டும் ஆதாரமாகக் கொள்ளாமல், பல்வேறு முறைகள் மூலம் கற்கவைப்பது, இவர்களுக்குப் பெருமளவு ஏற்புடையதாக இருக்கும். இதில் தொழில்நுட்பச் சாதனங்கள் பெரும் பங்காற்ற முடியும்.
இந்தப் பிரச்சினை சார்ந்து மக்களிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு மிக முக்கியமானதும், மிகவும் அவசியமானதும் ஆகும். இது குறித்துப் பல விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட்ட போதிலும், இது குறித்த புரிதல் இன்னும் ஆழமாகச் சென்றடைய அவசர முயற்சிகள் தேவை.
அக்கறை அவசியம்
பெற்றோர்கள் தங்களுடைய மனதை விசாலப்படுத்திக்கொள்வதுடன், உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். கடும் சொற்களைப் பிரயோகிப்பதாலோ, விளையாடும் நேரத்தைக் குறைப்பதாலோ, குழந்தைகளுக்கு அதிக நெருக்கடி கொடுப்பதாலோ குழந்தையின் டிஸ்லெக்சியா குறைபாட்டைச் சரி செய்ய முடியாது.
இந்தக் குழந்தைகள் புத்திசாலிகள்தான். அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் நல்ல முறையில் வழிநடத்துதல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துதல், அக்கறை மிகுந்த உதவிக் குழுக்கள் ஆகியவைதான்.
இன்று டிஸ்லெக்சியாவை களைவதற்குத் தேவையான மனநலப் பயிற்சியை ரஞ்சித் பெற்றுவருகிறான். அத்தோடு பள்ளியிலும் நல்ல முறையில் நடந்துகொள்கிறான். அவனுக்கு அவனுடைய குடும்பத்தினர், நண்பர்களின் நல்லாதரவு உள்ளது. இப்படிப்பட்ட அக்கறையுடன் கூடிய புரிதலே, பெரும் பிரச்சினையாகக் கருதப்படும் பல மாணவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சிறப்பாக மாற்றிவிடும்.
Comments
Post a Comment