கல்விக் கடன்கள்: மாயையும் யதார்த்தமும்!
உ
யர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன்கள் ஆண்டுதோறும் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதேநேரத்தில் கல்விக் கடன்களால் மாணவர்கள் பயனடைகிறார்களா, கல்விக்கடன்கள் அளிக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறுகிறதா என்பதெல்லாம் கேள்விக்குரியதாகவே இருக்கின்றன.
முழு கோணத்தில் முதல் ஆய்வு
பெங்களூரு ஐ.ஐ.எம். பேராசிரியர் எம்.ஜெயதேவ், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்குக் கல்விக்கடன் தொடர்பாக அளித்த அறிக்கையின் ஒரு பகுதி, 2017 டிசம்பர் 23 தேதியிட்ட எகானமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி ஆய்விதழில் வெளியாகியுள்ளது. கல்விக்கடன்கள் பற்றி முழுமையான கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு என்பதால் ஜெயதேவ் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விவரங்கள், கல்விக்கடன் அளிப்பதற்கு வங்கிகள் பின்பற்றிவரும் நடைமுறைகள் அதன் நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.
2002-ம் ஆண்டில்தான் மத்திய அரசு முதன்முதலாகக் கல்விக் கடன்களை பட்ஜெட்டில் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. 2009-ல் கல்விக் கடன்களுக்கான வட்டித் தொகைக்கு மானியம் வழங்கவும் முடிவெடுத்தது. அதன்படி பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சம் கீழ் உள்ள மாணவர்கள் வாங்கும் கல்விக்கடன்களுக்கு அவர்களது படிப்புக் காலம் முடியும்வரையில் வட்டித்தொகையை அரசே வங்கிகளுக்கு மானியமாக அளித்தது. மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு அவர்களது பொருளாதாரச் சூழல் தடையாக இருந்துவிடக் கூடாது என்று அரசு தொடர்ந்து அக்கறை காட்டிவருகிறது.
வாராக் கடன் என்ற எண்ணம்
2014 மார்ச் கணக்கின்படி, அந்த நிதியாண்டில் 25.6 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. ரூ.4 லட்சம் வரையில் கியாரண்டி இல்லாமலும் அதற்கு மேற்பட்ட தொகைக்குக் கியாரண்டியுடனும் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், வங்கிகள் கல்விக் கடன்களை வாராக் கடன்கள் என்ற மனோபாவத்துடனேயே அணுகிவருகின்றன.
கல்விக் கடன் அளிப்பதில் தனியார் வங்கிகளின் பங்களிப்பு 10% மட்டுமே. கல்விக்கடன் அளிக்கும் வங்கிக் கிளைகளில் 70% கிராமப்புற, சிறுநகரப் பகுதிகளில் உள்ளவை. ஆனால், அதுவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி அல்ல. தனியார் நடத்தும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நகரங்களுக்கு வெளியே கிராமப்புறப் பகுதிகளில்தான் உள்ளன. அருகில் உள்ள வங்கிகள் என்பதாலேயே இந்தச் சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது.
கல்விக் கடன் பெறுபவர்களில் 90% பேர் ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகத்தான் கடன் பெறுகிறார்கள். தனியார்ப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கும் மெரிட் இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த இக்கடன் தொகை போதுமானதாக இருக்கும். ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கடன்களால் கட்டணச் சுமையை நிச்சயமாகக் குறைக்க முடியாது. கல்விக்கடன்களுக்கான வட்டிக்கு அரசு கொடுக்கும் மானியத்தை அரசு இன்னும் கொஞ்சம் உயர்த்த வேண்டும். ஆனாலும்கூட, கல்வி நிறுவனங்களின் வரைமுறையற்ற கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டவில்லையென்றால், அத்தனை சுமையும் மாணவர்களின் மீதுதான் விழும்.
உள்முரண்கள்
வங்கிகள், ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி வீதத்துக்கு அதிகமாகவே கல்விக் கடன்களுக்கு வட்டி வாங்குகின்றன. எதிர்பாராத இடர்களுக்கான பிரீமியம் என்ற பெயரில் அவை நியாயப்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகள் அதிகபட்சமாக 14%, தனியார் வங்கிகள் அதிகபட்சமாக 15% வட்டி விதித்துள்ளன. இப்படி வங்கிகள் தங்கள் விருப்பம்போல வட்டி நிர்ணயிப்பதால், அரசு வழங்கும் மானியத் தொகையும் அதிகரிக்கிறது. கடைசியில், வரி செலுத்துவோரின் மீது அச்சுமை வந்து விழுகிறது.
அரசு ஒதுக்கித் தந்த மெரிட் இடத்தில் படிக்கும் மாணவர், கியாரண்டி இல்லாத கடன் என்பதால் அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கிறது. கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் ஒதுக்கித் தரும் இடத்தில் படிக்கும் மாணவர் ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாகக் கடன் வாங்கினால், கியாரண்டி கொடுத்துக் குறைந்த வட்டி செலுத்தினால் போதுமானதாயிருக்கிறது. இப்படிக் கல்விக் கடன்களில் உள்ள உள்முரண்கள் ஏராளம். வங்கிகள் கல்விக் கடன்களையும் வீட்டுக்கடன், வாகனக்கடன் போல மற்றொரு கடனாகத்தான் பார்க்கின்றன.
கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்போடு படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கிறதா என்பது எல்லாவற்றையும்விட முக்கியமான கேள்வி. கல்விக் கடன் பெறுபவர்களில் 80% பேர் வேலைக்குப் போய்த்தான் தாங்கள் வாங்கிய கடனைக் கட்ட முடியும் என்ற நிலையிலிருக்கிறார்கள். உயர்கல்வியில் முன்னணியில் இருக்கிறது தமிழகம். ஆனால், தமிழக மாணவர்களில் ஏறக்குறைய 40% பேர் (ஆண்டொன்றுக்குச் சராசரியாக 3 லட்சத்து 45 ஆயிரம் பேர்) கல்விக் கடன்களைத்தான் நம்பியிருக்கிறார்கள்!
Comments
Post a Comment