கவலைகளை விரட்டுவாள் காளிகாம்பாள்!
சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கிறது காளிகாம்பாள் திருக்கோயில். குறுகலான சிறிய தெருவுக்குள்தான் இருக்கிறது கோயில். ஆனால் நம்மை விசாலப்படுத்தி, உயர்த்திவிடுவதில் கருணைக்காரி இவள் என காளிகாம்பாளைப் போற்றுகின்றனர் பக்தர்கள்!
சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுவதும் தப்பு. கர்வத்தில் தலை கால் தெரியாமல் ஆடுவதும் தவறு. இந்த உலகில், நம்மை வீழ்த்துவதற்கு எதிரிகளோ துரோகிகளோ தேவையில்லை. நம்மைப் பிடிக்காதவர்களோ நம்மை வெறுப்பவர்களோதான் நம்மை அழிக்கவேண்டும் என்று அவசியமில்லை. கர்வமாக தலைக்கனத்துடன் இருந்தால், நம்மை அழிக்க வேறு எவரும் தேவையில்லை என்பதே சத்தியம்!
ஆக, நம் கர்வமே நமக்கு மிகப் பெரிய எதிரி.
''இங்கே, கர்வம் இல்லாதது எதுன்னு பார்த்தா, அது ஆமைதான். ஆமையானது தன் தலையைக்கூட ஓட்டுக்குள்ளே வைத்துக்கொள்கிற குணம் கொண்டது. தன்னை ஒடுக்கிக்கிறதுக்கு, உள்நோக்கி தன்னைத் தானே பாக்கறதுக்கு ஒரு புத்தி வேணும். இந்தப் புத்தி மனுஷங்களுக்கு ரொம்பவே அவசியம். 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ இல்லியா. அப்படியிருக்க, அலட்டலுக்கும் வீறாப்புக்கும் இங்கே வேலையே இல்லை. கர்வப்பட்டு, அகந்தையோட இருக்கிறதில் அர்த்தமும் இல்லை. அது ஒரு கட்டத்தில் பொளேர்னு நம்மையே அடிச்சிடும்.
வாசல் கொஞ்சம் சின்னதா இருந்தா, வர்றவங்களை 'கொஞ்சம் குனிஞ்சு, பார்த்து வாங்க’ன்னு சொல்றோம். இந்தப் பணிவு என்னிக்குமே நமக்கு வேணும். அப்படி இருந்துட்டா, கடவுளை அடையறது ரொம்ப ஈஸி. அதுக்கு ஆமை புத்தி வேணும் நமக்கு. அதோட செயலை நாமளும் பின்பற்றணும். அந்த ஆமை குணம் நமக்கு ரொம்பவே அவசியம்.
'கமடம்’னா ஆமை. இங்கே, காளிகாம்பாள் கோயிலின் ஸ்வாமி பேர் ஸ்ரீகமடேஸ்வரர். இவர் சந்நிதிக்கு வந்து, மனசாரப் பிரார்த்தனை பண்ணிட்டாப் போதும்... நம்மளோட கர்வம், அலட்டல் மாதிரியான கெட்டதுகளையெல்லாம் போக்கி, அருள்பாலிப்பார் ஸ்ரீகமடேஸ்வரர்!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் சண்முக சிவாச்சார்யர்.
காமம், குரோதம், கர்வம் என்கிற கசடுகளையல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஸ்ரீகமடேஸ்வரர் முன்னே நின்று, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் வாழ்க்கையையே மலரச் செய்வார். வளரச் செய்வார். வாழச் செய்வார்!
காளிகாம்பாள் என்றால் காளி. காளி என்றால் உக்கிரத்துடன் இருப்பவள். ஆனால் இங்கே காளி சாந்தசொரூபினி. அமைதியே உருவான திருமுகத்துடன், மந்தகாசப் புன்னகை தவழ, நம்மையெல்லாம் ஒரு குழந்தையைப் போல் ஏற்றுக் கொண்டு, நமக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறாள் அன்னை.
இந்த தை வெள்ளி நாளில், காளிகாம்பாளை வணங்குவோம். அவளின் அருளையும் கருணையையும் பெற்று, இனிதே வாழ்வோம்! செவ்வரளி மாலை சார்த்துங்கள். எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டுங்கள். இன்னும் வளமாக்குவாள் வாழ்க்கையை. லேசாக்குவாள் உங்கள் மனதை!
முக்கியமாக, கமடேஸ்வரரை மனதாரப் பிரார்த்திப்போம். நம் கர்வம் அழித்து, நம்முடைய தடைகளையெல்லாம் தகர்த்து அருள்வார் கமடேஸ்வரர்.
Comments
Post a Comment