முகம் நூறு: கூச்சத்தின் விலை உயிர்!
சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த மீரா, அவரது குடும்பத்தில் முதல் மருத்துவர். நான்கு பாடப் பிரிவுகளில் தங்கப் பதக்கம் பெற்றவர். சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மருத்துவராக ஏழரை ஆண்டுகள் பணியாற்றிவர். 5,000-க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளைச் செய்திருக்கிறார். “மருத்துவப் படிப்பின் முதல் ஆண்டிலேயே ரத்தம், நரம்பு, சதை ஆகியவற்றைக் குறித்த அச்சம் நீங்கி, எல்லாமே பழகிடும். ஆனா என் சொந்தக்காரங்கதான் ஒரு பெண்ணாக எப்படி இதைச் செய்யறீங்க, பேயைப் பார்த்திருக்கீங்களான்னு கேட்பாங்க. இறப்புக்குப் பிறகு என்னவாகும்னு பலருக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்யுது” என்று சிரித்தபடியே சொல்லும் இவர், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிவருகிறார்.
வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றம் தொடங்கி முதுமை ஆட்கொள்ளும்வரை உடல்ரீதியான பல மாற்றங்களைப் பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கே உரிய கூச்ச சுபாவத்தால் அவர்களது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் நோய்களை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்பட்டு விலைமதிப்பற்ற உயிரை இழந்துவரும் வேதனை நம் சமுதாயத்தில் இன்னும் தொடர்கிறது. இந்த ஆதங்கத்தோடு பேசத் தொடங்குகிறார் மீரா.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஆறு மாதங்களில் விளைந்த பயிர்களை மூன்று மாதங்களிலும் ஆற அமர முட்டையிட்டுக் குஞ்சு பொரித்த கோழிகளை இயந்திர உதவியுடன் சில நாட்களிலும் பெற்றுவிடுகிறோம். இவற்றோடு வீரிய விதைகளில் இருந்து பெறப்பட்ட தானியங்களையும் காய்கறிகளையும் சமைத்துச் சாப்பிட்டு பல உடல்நலக் கேடுகளுக்கு ஆட்பட்டுவிட்டோம். துரித உணவைச் சாப்பிட்டுப் பத்து வயதில் பருவமடையும் சிறுமிகளின் பரிதாப நிலையைப் பெற்றோரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
“உணவு முறை மாற்றத்தால் பெண்கள் பலருக்கும் ஃபோலிக் ஆசிட் குறைவால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் பிறக்கும் குழந்தைகள் உடல் ஊன குறைபாட்டுடனோ, அறிவுத் திறனும் மனவளர்ச்சியும் குன்றியோ பிறக்கக் கூடும். இதைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் 13 வயது முதல் 17 வயது வரையிலான மாணவிகளுக்கு ‘பி காம்ப்ளக்ஸ்’ மாத்திரைகள் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வழங்கப்படுகின்றன” என்று சொல்லும் மீரா, பெண்கள் தற்போது பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்பட்டுள்ளது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்கிறார்.
தயக்கம் தவிர்ப்போம்
கூச்ச சுபாவம் பல பெண்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் வேதனை குறித்தும் அவர் சொல்கிறார். “உடலின் அந்தரங்கப் பகுதிகள் எனப் பெண்கள் நம்புகிற மார்பகம், கருப்பை ஆகியவற்றில் ஏற்படுகிற புற்றுநோய் அறிகுறிகளைப் பெண்கள் பலரும் வெளியே சொல்வதில்லை. குடும்பத்தினரிடம்கூட மறைத்து, உயிரிழக்கும் கொடூரமும் நடந்துவருகிறது. மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை வாரம் ஒரு முறை பெண்களே சுயபரிசோதனை செய்துகொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அந்தச் சோதனை செய்துகொள்வதையே பெருங்குற்றமாகப் பலரும் நினைக்கிறார்கள். இதனால் மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்கள் அது முற்றிய நிலையில் ஆறு மாதங்களில் உயிரைவிடுகின்றனர். இப்படியான புற்றுநோய்களை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் பெண்களின் வாழ்நாள் கூடும்” என்கிறார் மீரா.
மாதவிடாய் நின்றுபோகிற மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகிறார். 40 வயதுக்கு மேல் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் ஹார்மோன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மெனோபாஸ் காலத்தில் சில நேரம் பெண்களின் தவறான புரிதலால் கர்ப்பப்பை புற்றுநோயை வரவழைத்துக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. கர்ப்பப்பையில் நீர்க்கட்டி பிரச்சினை இருந்தால் பெண்கள் தயங்காமல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
“பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை. தங்கள் பருவவயது மகளின் மாதவிடாய் தேதியைக்கூடப் பல பெண்கள் அறிந்து வைத்திருப்பதில்லை. தன் மகளுக்கு ஆறு மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்று ஒரு பெண் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றாலே மகப்பேறு மருத்துவரைச் சந்தித்திருக்க வேண்டாமா? அந்தப் பெண் ஹார்மோன் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. பிளஸ் டூ படிக்கும் தங்கள் மகள் கருவுற்றிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டுக் கதறியழும் பெற்றோரை என்னவென்று சொல்வது? பெண்கள் தங்கள் அந்தரங்க உடல் பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது மட்டுமே இதற்கெல்லாம் முடிவு. அதேபோல, குழந்தைகளிடம் ஆழமான நட்புப் பாலத்தை பெற்றோர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதன் மூலம் வாழ்வு இனிமையாகும்’’ என்கிறார் டாக்டர் மீரா.
Comments
Post a Comment